தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எளிமையான நிகழ்ச்சி; எல்லாருக்கும் மகிழ்ச்சி!

வெளிநாட்டில் உள்ள என் உறவினர் மகன், கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில், குழந்தைகளுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துவதற்காக, தன் குடும்பத்தோடு வந்திருந்தார். தன் அப்பாவிடம், 'காது குத்து விழா விமரிசையாக இருக்கணும்; பணத்தை பற்றி பிரச்னையில்ல. பந்தல், அலங்காரம், மேள, தாளம்ன்னு அசத்தணும்...' என்றான்.

'கோவில்ல வச்சு முடி இறக்கி, காதணி விழா நடத்தப் போறீயா... இல்ல புது பணக்காரனான பெருமைய, தம்பட்டமடிச்சு காட்டப் போறீயா... நம்ம ஊர் இன்னமும் ஏழை பாழைகள் நிறைந்த ஊராத் தான் இருக்கு; நேத்து வரைக்கும் நாமும், அப்படி தான் இருந்தோம். எளிமையா இருந்தாத்தான், அவங்க நம்ம கிட்ட மனம் விட்டு பேசி, நெருக்கமா பழகுவாங்க.

'பணம், ஆடம்பரம்ன்னு அலட்டினால், மிரண்டு போய், விலகிடுவாங்க. அங்க போய், நம்ம புது வசதியை காண்பிக்கறது, அவங்கள பழிக்கிற மாதிரி இருக்கும். ஊருக்கெல்லாம் சாப்பாடு போட்டு, விசேஷத்தை எளிமையா நடத்தலாம்; இதுக்கு சரின்னா, கிராமத்துல வச்சுக்கலாம்; இல்ல விமரிசையா செய்யணும்ன்னா, அதை நகரத்துலயே மண்டபத்துல நடத்திக்கலாம்...' என்று திட்டவட்டமாக கூறினார், அவரது தந்தை.

ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், பெரியவரின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்து, கார்களை தவிர்த்து, பஸ்சில் பயணம் செய்து, கிராமத்து வீட்டில் தங்கி, ஊர் பொது மக்கள் புடை சூழ, காதணி விழாவை நல்லபடியாகவும், திருப்திகரமாகவும் நடத்தி திரும்பினார்.

'அமெரிக்கா போனாலும், நம்ம வம்சத்து புள்ள, எளிமையா இருக்கான்; இங்கேயும் சிலதுங்க இருக்குதுங்களே... நாலு பணம் பாத்துட்டால், உடனே, கொம்பு முளைச்சு, ஊர் என்ன விலை, நாடு என்ன விலைன்னு கொக்கரிக்குதுக...' என்று ஊரார் பேசிக் கொண்டதை கேட்க முடிந்தது.

பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. புரிந்து நடப்பது தான் புத்திசாலித்தனம்!

— எஸ்.பரணி, சென்னை.

அது என்ன, 'லயன்' சாமி...

பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு, காணும் பொருட்களின் பெயர்களை எல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி, அதை, குழந்தையை திரும்பச் சொல்லச் சொல்வர். இது ஒரு புறம் இருக்க, தற்போது, கோவிலில் இருக்கும் சாமி பெயர்களைக் கூட, நேரிடையாக மொழி பெயர்த்து, அதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் கொடுமையும் நடக்கிறது.

மதுரைக்கு அருகே உள்ள புகழ் பெற்ற நரசிம்மர் கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஒரு பெண், தன் இரண்டு வயது குழந்தைக்கு, கருவறையில் உள்ள நரசிம்மரை காட்டி, 'அதோ பார் லயன் (சிங்கம்) சாமி... எங்கே சொல்லு... லயன் சாமி...' என கற்றுக் கொடுக்க, அக்குழந்தையும், 'லயன் சாமி... லயன் சாமி...' என்று கத்தியது. கடவுள் பெயரை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க விரும்பினால், 'காட் நரசிம்மர்' என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம்; அதை விடுத்து, அதென்ன லயன் சாமி...

இனி, விநாயகரை, 'எலிபென்ட்' சாமி என்றும், ஆஞ்சநேயரை, 'மங்கி'சாமி; சக்கரத்தாழ்வாரை, 'வீல்' சாமி; சிவனை, 'புல்லக்' சாமி மற்றும் முருகனை, 'பீகாக்' சாமி என்று, தெய்வங்களின் உருவ அமைப்பை வைத்து, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறுவார்களோ...

பெற்றோரே... தெய்வங்களின் அழகான பெயர்களை, அதன் உயிர்ப்புத் தன்மையுடன் கற்றுக் கொடுங்கள்; அப்போது தான் அவர்கள் மனதில் பக்தி வளரும்; மாறாக, இப்படி தமிங்கிலீசில் கற்றுக் கொடுத்தால், தவறான எண்ணம் தான் வளரும்! யோசியுங்கள்!

— வைகைத்தென்றல், மதுரை.

ஆசிரியையின் முயற்சி!

சமீபத்தில், நானும், என் நண்பனும் பேசிக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து, தேசியகீதம் பாடுவது கேட்டது. தேசியகீதத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்த பின், 'அந்த வீட்டிற்குள் இருந்து கோரசாக தேசிய கீதம் பாடுறாங்களே... ஏன்?' என்றேன், ஆச்சரியத்துடன்!

'அந்த அபார்ட்மென்டில், 'டியூஷன்' எடுக்கும் ஆசிரியை, மாணவ, மாணவியரின் மனதில், நாட்டுப் பற்றையும், தமிழ் மண்ணின் பெருமையையும் கற்றுக் கொடுப்பதுடன், தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தேசியகீதத்தை அவர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக தினமும் டியூஷன் துவங்கும் போதும், முடியும் போதும் பாடச் சொல்வார்...' என்றார்.

ஆசிரியையின் நாட்டுப் பற்றை அறிந்து, மனதார பாராட்டினேன்.

மக்கள் மனதில், நாட்டுப் பற்று மற்றும் ஒற்றுமையை வளர்க்க, முன்பு சினிமா தியேட்டர்களில் தேசியகீதத்தை ஒலிக்கச் செய்தனர்; அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது என்பதை நினைத்த போது மனம் கனத்தது.

வெளிநாட்டினர், தங்கள் நாட்டு தேசிய கீதத்திற்கு கொடுக்கும் மரியாதையை, நாம் கொடுக்க தவறுவது ஏனென்று புரியவில்லை!

வி.எஸ்.மோகன், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us