தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/சாவித்திரி! (20)

சாவித்திரி! (20)

சாவித்திரி! (20)


PUBLISHED ON : ஆக 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

ஒருநாள், சாவித்திரியை சந்திக்க, தெலுங்கு நடிகர் ஜக்கையாவின் மனைவி வந்திருந்தார். அவர், 'தெலுங்கு படக்கதை ஆசிரியர் உமா மகேசுவரராவிடம் நல்ல கதை ஒன்று இருப்பதாகவும், அதை, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாரித்தால், மகத்தான வெற்றி பெறலாம்...' என, சாவித்திரியிடம் கூறினார்; இதையே ஜக்கையாவும் வழிமொழிந்தார்.

சினிமாவை சிறிது மறந்திருந்த சாவித்திரிக்கு, தயாரிப்பு என்ற வேதாளம், மனம் என்ற முருங்கை மரத்தில் ஏற, மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் பூசினார்.

சாவித்திரி புரொடக் ஷன்ஸ் மேலாளரான நாகலிங்கம் வேலையிலிருந்து விலகியிருந்தார். அவர் இடத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சாவித்திரியின் உறவினரான சுப்ரமணியம் இருந்தார்.

சாவித்திரி தயாரிக்க திட்டமிட்ட படத்தின் பெயர், லாயர் பார்வதி. ஒரு பெண் வழக்கறிஞர் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளால், அவர் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை, மையக் கருவாக கொண்ட கதை அது!

வி.வி.பிரசாத் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவானது.

தமிழில், காதலிக்க நேரமில்லை பட கதாநாயகன் ரவிச்சந்திரன் - பாரதி, தெலுங்கில், கிருஷ்ணராஜு - விஜய நிர்மலாவும் கதாநாயகன் - கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 7,000 அடிகள் வரை, படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்திற்கு தானும் ஒரு பங்குதாரர் என, வெளியே சொல்லித் திரிந்தார், சுப்ரமணியம்; ஆனால், அத்தனை பணமும் சாவித்திரியுடையது.

படம் எடுத்தது வரை திரையிட்டு பார்த்ததில், படத்தில் தரம் இல்லை; நாடகத் தன்மை அதிகமாக இருப்பது தெரிந்தது. இப்படத்திற்காக, இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்திருந்தார், சாவித்திரி.

'மீண்டும் சாவித்திரி படம் தயாரிக்கிறார்...' என்ற செய்தி, அவரது மருமகன் கோவிந்தராவுக்கு தெரிந்தது. 'வலியப் போய் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாரே...' என, துடித்துப் போன அவர், தாசரி நாராயணராவை சந்தித்து, விஷயத்தை கூறினார்.

தாசரி நாராயண ராவின் மீது, சாவித்திரிக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அவர், தன் நல்லதுக்கு தான் எதையும் சொல்வார் என்பது அவருக்கு தெரியும். தன் உதவியாளரான பசுவைய்யாவை சாவித்திரியிடம் பேச, அனுப்பி வைத்தார், தாசரி.

சாவித்திரியை சந்திக்கப் போவதற்கு முன், தனக்கு தெரிந்த திரையுலக தொழில் நுட்ப கலைஞர்களிடம், 'லாயர் பார்வதி படம் எடுத்த வரை எப்படி இருக்கிறது?' என, கேட்டு தெரிந்து கொண்டார், பசுவைய்யா. 'படம் சரியில்லை...' என்று, எல்லாரும், 'உச்' கொட்டினர்.

சாவித்திரியை சந்தித்த பசுவைய்யா, படத்தயாரிப்பை உடனே நிறுத்தச் சொன்னார். 'செலவழித்த பணம் இரண்டரை லட்சம் ரூபாயோடு போகட்டும்; இதற்கு மேல் சல்லிக்காசு கூட இப்படத்துக்கு நீங்கள் செலவழிக்கக் கூடாது. மீறி, செலவழித்தால், உங்களை, யாரும் காப்பாற்ற முடியாத நிலைக்கு அது கொண்டு போய் விடும்...' என்று எச்சரித்தார். சாவித்திரியிடம் சண்டையே போட்டு விட்டார் கோவிந்தராவ்.

எதிர்ப்பு கிளம்பியதால், படத்தயாரிப்பை கிடப்பில் போட்டார் சாவித்தரி; மீண்டும் இரண்டரை லட்ச ரூபாய் வீணானது.

படத்தை காரணம் காட்டி, சாவித்திரியிடம் பணத்தை சுருட்டியோருக்கு, படம் நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியாகிப் போனது.

சாவித்திரியிடம் பண நெருக்கடி தலைதூக்க ஆரம்பித்தது. 'வீட்டில் இருக்கிற அனைவரையும் கவனிக்க வேண்டும்; தனியாக குடித்தனம் நடத்தும் பெரியப்பா குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். ஆனால், எவ்வழியிலும் பணம் வரும் வாய்ப்பு இல்லை. மீண்டும் முழு மூச்சாக நடிப்பது தான் சரி...' என்று அவருக்கு தோன்றியது.

குண சித்திர வேடங்கள், அவரை தேடி வந்தன. எல்லா மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ஏ.வி.எம். ராஜன், ஜெய்சங்கர் மற்றும் முத்துராமன் போன்ற, இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களில் அதிகம் நடித்தார். ஜக்கம்மா, எங்கள் தாய் மற்றும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என, சாவித்திரி குணச்சித்திர வேடங்களில் நடித்த படங்களின் பட்டியல் தொடர்ந்தன.

இச்சூழலில், வருமான வரித்துறையினர் எடுத்த சில நடவடிக்கைகள், சாவித்திரியின் வாழ்க்கையில் மீண்டும் சிக்கலை உருவாக்கியது.

வருமான வரித்துறையினர், கட்ட வேண்டிய வரி நிலுவைக்காக, தன்னிடம் உள்ள மிச்ச நகைகளை, பறிமுதல் செய்து விடுவரோ என பயந்து, தன் கைவசம் இருந்த நகைகளை, தன் உறவுக்கார பெண்ணான, வாணியிடம் கொடுத்து, பத்திரமாக வைக்கச் சொன்னார், சாவித்திரி.

சாவித்திரியின் தூரத்து உறவினர், வாணி; சாவித்திரியின் பாட்டி எடுத்து வளர்த்த வளர்ப்பு மகனின் வாரிசு. இவரின் கணவன் தான், வெங்கடரத்தின பாபு. இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தவர், சாவித்திரி.

வளசரவாக்கத்தில் இருந்த தன் தோட்டத்தை மேற்பார்வையிட, ஆந்திராவிலிருந்து இவர்களை அழைத்து வந்து தோட்டத்தில் வீடு கட்டி, குடி வைத்தார், சாவித்திரி.

வேலையாட்களாக வந்தவர்கள் கடைசி காலத்தில், சாவித்திரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, எஜமானர்கள் போல், நடந்து கொண்டனர். நகைகளை வாங்கிய வாணி, அத்தனை நகைகளுக்கும் தானே உரிமைக்காரி ஆனார்; அப்பாவியாய் ஏமாந்து நின்றார் சாவித்திரி.

— தொடரும்

கலையின் அபிநயங்களை, கண் மொழியில் காட்டிய நடிகை சாவித்திரிக்கு கிடைத்த பாராட்டுகள் கணக்கில் அடங்காதவை. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், சீமாந்திரா மாநிலம், விஜயவாடாவில் மார்பளவு சிலையும், குண்டூரில் முழு உருவ சிலையும், ரேப்பள்ளி என்ற இடத்தில், தன் சொந்த செலவில் சாவித்திரி மக்களுக்குக்காக உருவாக்கிய பள்ளியில் ஒரு சிலையும் என, மூன்று இடங்களில் சாவித்திரிக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

நடிகை ஒருவருக்கு, இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பது சாவித்திரிக்கு மட்டும் தான்!

- ஞா. செ. இன்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us