
வாசலில், வாழைப் பழ தள்ளு வண்டிக்காரனிடம் லென்ஸ் மாமாவின் மனைவி, 'அரை டஜன், 20 ரூபாய்; இஷ்டம்ன்னா கொடு...' என்று பேரம் பேசியபடி இருந்தார்.
'மாமி, வாழைப்பழம் வாங்குறாங்களே... எனக்கென்னவோ மாமியிடம் வியாபாரம் செய்ற ஒவ்வொருவனும் நஷ்டப்பட்டுத்தான் திரும்புவான்னு தோணுது. அது மாமியோட சாமர்த்தியமா அல்லது வருகிறவனின் ஏமாளித்தனமா...' என்றேன் மாமாவிடம்!
'ஒருவனுக்கு ஏற்படுற நஷ்டம்தான், எதிராளிக்கு லாபம் என்பது உலக நடைமுறை. ஆனால், எல்லாருக்கும் லாபம் ஏற்படும்படி ஒரு சமூகம் இயங்க முடியும்ன்னு ஒரு அறிஞர் எழுதியிருக்கிறார்...' என்றார் மாமா.
'உதாரணத்திற்கு ஒண்ணு சொல்லுங்களேன்...' என்றேன். கொஞ்சம் யோசித்து, பின் சொன்னார் லென்ஸ் மாமா...
'நாகரிக வசதி எதுவும் தெரியாத, ஆதிகாலத்து சமூகம் ஒண்ணு ஒரு மலைப் பிரதேசத்தில் இருப்பதாக வைத்துக் கொள். வாழ்க்கைத் தேவைக்கு உழைத்து தான் பிழைக்க வேண்டும். அந்த சமூகத்தில், 100 பேர் இருக்கின்றனர். மலையின் மேலே ஒரு சுனை இருக்கிறது. எல்லாரும் தினம் அங்கே ஏறிச் சென்று, தண்ணீர் எடுத்து வர வேண்டும். போய், திரும்ப ஒவ்வொருவருக்கும் தினசரி ஒரு மணி நேரம் பிடிக்கும்.
'இந்த, 100 பேரில் கொஞ்சம் துறு துறுப்பான ஆள் ஒருவன், அந்த சுனைக்கு தண்ணீர் வருகிற ஓடை எது என்பதை தற்செயலாக ஒருநாள் பார்க்கிறான்.
'கால்வாய் வெட்டி கீழே கொண்டு வந்து, குளமாக அமைக்க முடியுமென்று திட்டம் போட்டு, அப்படியே செய்து முடிக்கிறான்...'
'அவ்வளவுதான்... ஒரு குடம் தண்ணீர் ஐந்து ரூபாய்ன்னு போர்டு போட்டுடுவான்...' என்றேன்.
'அப்படியெல்லாம் அவனுக்கு பேராசை கிடையாது. மற்ற, 99 பேரையும் கூப்பிடுகிறான்... 'நீங்கள் இனிமேல் இங்கே தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்; ஆனால், ஒவ்வொருவரும் தினந்தோறும் எனக்காக பத்து நிமிடம் உழைத்து, உற்பத்தியை தர வேண்டும்...' என்கிறான்.
'எல்லாரும் ஒப்புக் கொள்கின்றனர்; ஒரு நாளில், 990 நிமிடம், பதினாறரை மணி நேரம்... இப்போது, அந்த நூறாவது ஆள் உழைக்கத் தேவையில்லை; அக்கடாவென்று இருக்கலாம்!'
'உழைப்புத் திருட்டு...' என்றேன்.
'எப்படி... ஒவ்வொருவருக்கும் மலை மீது ஏறித் திரும்ப, முன்பு ஒரு மணி நேரம் ஆயிற்று. அதில், பத்தில் ஒரு பங்கை இப்போது, இவனுக்கு கொடுக்கின்றனர். மிச்சம், 50 நிமிடங்கள் அவர்களுக்கு லாபம் தானே... அந்த மிச்சத்தில் அவர்களும் முன்னை விட வசதியாக இருக்கலாமே!
'அதோடு மட்டுமல்ல, இந்த நூறாவது ஆள் தான் துறுதுறுப்பு ஆனவனாயிற்றே... தான் வெட்டியுள்ள இடத்தில், ஓடைத் தண்ணீர் வேகமாக விழுவதைப் பார்க்கிறான். அதில் விசை சேர்த்து, காற்றாடி இயந்திரத்தின் மூலம், மாவு அரைத்துக் கொள்ள வசதி செய்கிறான்.
'இன்னொரு பத்திலொரு பங்கு உழைப்பையோ, உழைப்பின் உற்பத்தியையோ கொடுத்தால், அந்த இயந்திரத்தை மற்றவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம் என்கிறான்.
'அவனுக்கு மேலும் செல்வம் சேருகிறது; மற்றவர்களுக்கு இன்னும் நேரம் மிச்சமாகி, சவுக்கியமாக இருக்க முடிகிறது.
'அப்புறம் ஒருநாள், அந்த, 99 பேரில் ஒருவன் நன்றாய் செருப்பு தைப்பதை அதே நூறாவது ஆள் பார்க்கிறான்.
'உடனே அவனை வேறெந்த வேலைக்கும் போக வேண்டாமென்றும், தினந்தோறும் செருப்பு மட்டுமே தைக்கும்படி சொல்கிறான்.
'செருப்பு தைக்கும் விதம் மற்றவர்களுக்குத் தெரியாது; ஆகவே, அவனுக்கு தங்கள் நேரத்தில் பத்திலொரு பங்கைக் கொடுத்து செருப்பு வாங்கிக் கொள்கின்றனர்.
'இப்படி, ஒரு சமூகத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அதெல்லாம் கிடைத்து விடுகிறது; யாருக்கும் நஷ்டமில்லாமல் எல்லாருக்கும் லாபமாக...' என்றார் மாமா.
'அருமையான கதை தான்...'
'அந்த நூறாவது ஆள் புத்திசாலித்தனமாக சொன்ன யோசனைக்கு மற்றவர்கள் ஒப்புக்கொண்டதால் சமூகம் முன்னேறியது. 'நாங்கள், 99 பேர்... நீ ஒருத்தன்; உனக்காக நாங்கள் உழைப்பதாவது...' என்று எல்லாரும் சேர்ந்து அவனை அடித்து வீழ்த்தியிருந்தால், என்ன ஆகும்!
'அவன் வெட்டிய ஒரே ஒரு குளத்தோடு சமூகத்தின் முன்னேற்றம் நின்றிருக்கும்; அந்தத் துறுதுறுப்புக்காரனின் ஆர்வமோ, மூளையோ சமூகத்துக்கும் பயனில்லாமல் அழிந்திருக்கும்...'
'ஒரு சங்கடம்...' என்றேன். 'என்ன' என்பது போல் பார்த்தார். 'நீங்க சொன்ன கதையில், அந்த ஆள், தானே உழைத்து, சுனை தண்ணீரைக் கீழே கொண்டு வந்து, மாவு அரைக்கும் இயந்திரத்தை தயார் செய்து, சமூகத்துக்கு உதவினான்; ஆகவே, சமூகம் நன்றி பாராட்டும்.
'அவனுக்கப்புறம் அவன் மகன் வருகிறான்; ஒரு வேலையும் செய்யாமல், தகப்பன் செய்த நன்மைக்கெல்லாம் சமூகத்திடம் வட்டி வசூலிக்கிறான்... அப்போது தான் குழப்பம் வருகிறது!'
'அது, தவிர்க்க முடியாதது...' என்று வருத்தத்துடன் ஒப்புக் கொண்டார், லென்ஸ் மாமா.
'எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், எந்த சொத்தாக இருந்தாலும் அது, பிள்ளைக்கு மட்டும் தான் போக வேண்டும்; பேரனுக்குப் போகக் கூடாது என்று சட்டம் செய்தாலென்ன...' என்றேன்.
'அதென்ன, பிள்ளை மட்டும் உசத்தி...'
'மனிதர்கள் எல்லாரும் சன்னியாசிகளா... 'எவனுக்காக ஐயா நான் பாடுபடணும்...' என்று கையைக் கட்டி இருந்துடுவாங்க. அதனால், 'என் பிள்ளைக்காக நான் பாடுபடுறேன்...' என்ற ஆர்வத்துடன் வேலை செய்ய இடம் கொடுப்போம்.
'ஆனால், சொத்து அவனுடைய பேரனுக்கும் போனால், சோம்பேறித் தலைமுறை ஏற்பட்டு விடும். அதை தடுத்து விட வேண்டும். எப்படி என் யோசனை...' என்றேன்.
'உன் யோசனையிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது... உன் தாத்தா உனக்கு சொத்து என்று எதுவும் வைத்து விட்டுப் போகவில்லை; அப்படித் தானே...' என்றார். விட்டால் இன்கம்டாக்ஸ்காரர் போல் தோண்டுவார் எனத் தோன்றியதால், 'எஸ்கேப்' ஆனேன்!
டாக்டர் கிருபாநிதி; ஒரு காலத்தில் தமிழக பா.ஜ., தலைவராக இருந்தாரே... அந்த கிருபாநிதிதான். மாவட்ட மெடிக்கல் ஆபிசரா இருந்து ஓய்வு பெற்ற இவர், ஒரு லட்சம் பேருக்கு, 'கேஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட்' ஆபரேஷன் செய்திருக்கிறார். அவர் பணி பற்றிய தன்னோட அனுபவத்தை, என் நண்பர் ஒருவரிடம் கூறியிருக்கிறார்.
அந்த விஷயத்தை நண்பர், என்னிடம் கூற, ஆச்சரியம் தாங்காமல், 'ஆ'ன்னு வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
கிருபாநிதி சொன்னது:
சென்னையில் நான் மருத்துவ அலுவலராக பணியாற்றிய காலத்தில், திடீர்ன்னு எனக்கு கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேலதிகாரியிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன். 'கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்கள் எல்லாம் நகரத்துக்கு வரணும்ன்னு துடிக்கிறாங்க... நீங்களோ, சென்னையிலிருந்து கிராமத்திற்கு போகணுங்கறீங்களே...' என்று, என்னை வியப்போடு விழி விரியப் பார்த்தார், மேலதிகாரி.
ஆனாலும், வற்புறுத்தினேன். இதையடுத்து எனக்கு கரூர் தாலுகாவில், மதுக்கரை என்ற மலை அடிவாரத்து கிராமத்திற்கு மாற்றல் வழங்கப்பட்டது.
மதுக்கரை கிராமத்தில் நான் பணியாற்றிய போது எத்தனையோ வித்தியாசமான விஷயங்கள்... அவற்றுள் ஒன்று இது!
மதுக்கரை கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஐந்து கணவன்கள் உண்டு. ஒவ்வொரு கணவனுக்கும் திருமண தினத்தன்று ஆளுயர கம்பு ஒன்றை பரிசாக தருவர். இவ்வாறாக ஒரே மனைவியை மணந்து கொண்ட ஐந்து கணவன்மார்களுக்கும் தலா ஒரு கம்பு இருக்கும்.
ஒருவரின் கம்பில் பித்தளை பூண், மற்றொருவரின் கம்பில் இரும்பு பூண், அடுத்தவர் கம்பில் செம்பு பூண் என்று ஒவ்வொரு கணவருக்கும் ஒரு வகையான பூண் கொண்ட கம்பு வழங்கப்பட்டிருக்கும்.
ஒரு கணவன், மனைவியை பார்க்க வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் வேறு ஏதேனும் கம்பு வைக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பார். எந்த கம்பும் இல்லை என்றால், தன் கம்பை வீட்டு வாயிலில் வைத்துவிட்டு வீட்டிற்குள் செல்வார்.
அச்சமயத்தில் மற்றொரு கணவன் பார்க்க வந்தால், அவர் வாசலில் இருக்கிற கம்பை பார்த்து, வீட்டிற்குள் செல்லாமல் வெளியே போய் விடுவார். இவ்வாறு கம்பை அடையாளமாக வைத்து, மனைவியோடு பழகும் பாங்கு அந்த கிராமத்தில் நடைமுறையில் உள்ளது.
ஒரு நாள், இத்தகைய கணவன்மார்களில் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தேன். அவரிடம், 'உங்கள் மனைவிக்கு குழந்தை பிறந்தால் அதற்கு யார் அப்பா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நாங்கள் ஐந்து பேருமே அந்தக் குழந்தையை எங்கள் குழந்தை என்று தான் சொல்வோம்...' என்றார்.
இவ்வாறு அவர் கூறியபோது எனக்கு பகீர் என்றது. ஐந்து கணவன்மார்களை கொண்ட ஒரு மனைவியிடம் பேசிய போது, அவரிடம், 'ஐந்து கணவன்மார்களோடு வாழ்வது அநாகரிகமாக இல்லையா...' என்று கேட்டேன்.
உடனே, 'இதில் என்ன அநாகரிகம் இருக்கிறது. நாங்கள் பாஞ்சாலி பரம்பரையை சேர்ந்தவர்கள்...' என்று பெருமையோடு கூறினார், அந்த பெண்.
இந்த வகையான மக்கள் போதிய பண்பாட்டு வளம் இல்லாத நிலையில், மதுக்கரை என்ற மலையடிவார ஊரில் வாழும் பாங்கு என்னை அதிர வைத்தது என்று முடித்தார்.
- இக்கதையை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'நாமெல்லாம் பாஞ்சாலி பரம்பரை இல்லை... தப்பித்தோம்...' எனக் கூறி நடையைக் கட்டினார்.

