தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்...

அந்துமணி பதில்கள்...

அந்துமணி பதில்கள்...


PUBLISHED ON : ஆக 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.எல்.வெற்றிமாறன், திருப்பரங்குன்றம்: குடும்பங்களில் பிரச்னை வளர பெண்கள் தானே காரணம்?

இது, பொத்தம் பொதுவான குற்றச்சாட்டு; அவர்களை, 'வீக்கர் செக்ஸ்' எனக் கருதும் ஆண்களின் அபாண்டம். பிரச்னையின் மூல காரணம் தெரியாதவரை இப்படிப்பட்ட ஸ்டேட்மென்ட்கள் அபத்தம்!

எம்.எஸ்.ராஜலட்சுமி, சென்னை: சைவம், அசைவம் - எந்த உணவு பழக்கம் நம் நாட்டில் பெருகி வருகிறது?

சைவம் தான் பெருகி வருகிறது என, 'நேஷனல் சாம்பிள் சர்வே' கூறுகிறது. 7.1 சதவீதம் அசைவத்திற்கு செலவிடுவது குறைந்துள்ளதாக, சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.

ஹெச்.குமார், கோவை: எனக்கு அதிர்ஷ்ட ரேகை இல்லை என்கின்றனரே ஜோசியர்...

உழைப்பு ரேகையாவது (அப்படி ஒன்று இருக்குமானால்) இருக்கிறதா என்று கேட்டீர்களா? 'அல்லும், பகலும் வெறும் கல்லாய் இருந்து விட்டு, அதிர்ஷ்டமில்லை என அலுத்துக் கொண்டார்...' என்ற, 'கேட்டகிரி'யில் விழுந்து விடாதீர்கள்!

ஆர்.செல்லகண்ணு, உசிலம்பட்டி: கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்த கணவன், மனைவி யாருக்கு பொறுப்பு அதிகம் தேவை?

சம்பாத்தியம் முழுவதையும் மனைவியிடம் கொடுத்து, செலவு பொறுப்பையும் அவ்விடமே கொடுக்கும் ஆசாமிகளின் மனைவியருக்கு, கண்டிப்பாக அதிக பொறுப்பு தேவை. அவ்விடம் பொறுப்பு சற்று கம்மி என்றால், சம்பாதிப்பவரே லகானை பிடித்துக் கொள்வது உத்தமம்!

ஜெ.ரகுநந்தன், சென்னை: சிறுவியாபாரிகள் கூட ஆண்டிற்கு ஆயிரக்கணக்கில் வருமான வரி கட்ட வேண்டுமாமே... என்ன நியாயம் சார் இது?

சென்னையில், ஒரு பீடா கடைக்காரர், மாதம், 50 ஆயிரம் ரூபாயை பிக்சட் டிபாசிட்டில் போடுகிறாராம். இன்னொரு பீடா கடைக்காரருக்கு தினப்படி வருமானம், 10 ஆயிரம் ரூபாய். இன்கம்டாக்ஸ் அதிகாரியின் சோதனையின் போது கிடைத்த தகவல் இது. இவர்களைப் போல் காய்கறி, பழ வியாபாரிகள், தையல் கடைக்காரர்கள் மற்றும் ஒர்க் ஷாப்புக்காரர்கள் என பலர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இவர்கள் ஆண்டிற்கு, 1,000 ரூபாயை வருமான வரியாக கொடுப்பதால், ஏழ்மை நிலையை எட்டிவிட மாட்டார்கள். மாறாக, அரசின் வருமானம் பெருகும்; அதன் மூலம் நலத்திட்டங்கள் பலவற்றை அரசால் நிறைவேற்ற முடியும்.

வி.ராகுல், கடலூர்: காஷ்மீர் பிரச்னையை உருவாக்கியது பாகிஸ்தானா, இந்தியாவா?

அடிப்படையில் இருந்து ஆராய்ந்தால், பிரித்தாளும் கொள்கையில் நம்பிக்கை கொண்டு, அதில், 300 ஆண்டுகள் வெற்றியும் கண்ட பிரிட்டிஷ்காரர்கள், இவர்கள் நிம்மதியாக இருந்தால், சக்தி வாய்ந்த வல்லரசாக உருவெடுத்து விடுவர் என்ற பயத்தால், விடுதலையின் போதே பிரச்னைக்கு அடிக்கோலிட்டு சென்றனர். இவர்களுக்கு பின், இப்போது, வல்லரசாக இருக்கும் நாடு, பாகிஸ்தானை தூண்டிவிட்டு, காஷ்மீரில் கலகத்தை விளைவித்து வருகிறது. நம்முடைய மாநிலங்களில் ஒன்றான காஷ்மீரில் நாமே பிரச்னையை தோற்றுவிப்போமா... அதுவும், விசேஷ அரசியல், பொருளாதார அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கும் போது!

ம.சத்தியநாதன், உத்தமபாளையம்: இன்றைய மாணவ, மாணவியரின் அறிவு திறம், என்னைப் போன்ற ஆசிரியர்களையே திகைக்க வைக்கிறதே...

இதற்கு, பெருகி வரும் பத்திரிகைகளும், இன்டர்நெட்டும் பெரும் பங்கு வகிக்கின்றன. பாடப் புத்தகம் தவிர, 'எக்ஸ்ட்ரா ரீடிங்' மாணவ, மாணவியரிடையே நிறைய வளர்ந்துள்ளது. ஆயிரம் வார்த்தை, ஒரு பாடத்துக்கு சமம் என்பர். இந்தப் பணியை கம்ப்யூட்டர் செய்து வருகிறது; அறிவு வளர தடை ஏது?

எம்.சண்முகவேல், திருப்பூர்: மனதில் அச்சமில்லாமல் வாழ்பவர் யார்?

பொய் சொல்லாதவர்; கோர்ட் படி மிதிக்காதவர்; வம்பு, தும்புகளுக்குப் போகாதவர்; கடன் வாங்காதவர் மற்றும் ஒழுங்காக வருமான வரி கட்டுவோருக்கு அச்சமென்பது இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us