தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/ஒரு சண்டை ஏன் முற்றுகிறது?

ஒரு சண்டை ஏன் முற்றுகிறது?

ஒரு சண்டை ஏன் முற்றுகிறது?


PUBLISHED ON : ஆக 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆற்ற மாட்டாத கோபம், அறுபது கோபம்...' என்பர், எங்கள் பகுதியில்! இதற்கு, ஒவ்வொருவரும், வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிதம் செய்து கொள்ளலாம்.

ஒரு கோபம், பல கோபங்களுக்கும், அடுத்தடுத்த கோபங்களுக்கும், பாதை உண்டாக்குகிறது என்பதே, இதன் பொருள்.

'ஏன்யா... அந்த பொண்ணையே முறைச்சு பாக்கிறே... உதை வாங்கப் போறே இப்போ...' என்கிறார், பேருந்தில் ஒரு பெரியவர். பார்த்த இளைஞனோ, 'என் பிரண்டோட தங்கச்சி மாதிரியே இருந்துச்சு; அதனால தான் பார்த்தேன். சாரி சார்...' என்றால், அந்த விவகாரத்தின் முடிவு சுபம் தான்!

ஆனால், பயல் அடங்காமல், 'யாரை... இந்த பொண்ணையா... போயும் போயும் இந்த சப்பை பிகரையா... எங்களுக்கு வேற பெண்ணு கிடைக்கல பாரு...' என்கிற பாணியில், பேச ஆரம்பித்தால், தர்ம அடி தான்.

நாம் பேசும் சாதாரணமான விஷயங்கள், நாம் செய்யும் எளிய செயல்கள், நம்முடைய சில முடிவுகள் மற்றும் சில சொற்கள், நம் கணிப்பையும், கற்பனையையும் மீறி, எதிராளியை எரிச்சல் அடையச் செய்கின்றன. உடனே, அவர்கள் வெடித்துக் கிளம்புகின்றனர்.

இவர்களது கோபம், நியாயமற்ற கோபமாக, நம் மனதிற்கு படுவதால், அவர்களை அடக்க எண்ணி, நம் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்த விரும்பும் போது, அது, மேலும் கோபமாக வெளிப்படுகிறது.

இங்கு, நம் முதல் கட்ட செயலானது, தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதால், இதை சரி செய்ய, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல், அடுத்த கட்ட நடவடிக்கையிலும், மோசமாக பிரதிபலித்து விடுகிறோம்.

சண்டை மற்றும் வம்பு வளர, இதுதான் காரணமே தவிர, இதுவே, முதல் காரணம் அல்ல. பலரை பொறுத்தவரை இதை மன்னித்து விட தயார். இன்னும் ஒரு உதாரணம் பார்ப்போம்...

ஒரு பெண்ணின் காலை தவறுதலாக மிதித்து விடுகிறோம். இது, வெறும் மிதிப்பாக மட்டுமல்லாமல், வேறு ஏதோ உள் நோக்கம் கொண்டது என்று அந்த பெண் உணர்ந்து, 'செருப்பு பிஞ்சிடும்...' என்று கோபப்படுகிறார் என வைத்துக் கொள்வோம்.

'தெரியாம மிதிச்சிட்டேன்; மன்னிச்சிடுங்க சிஸ்டர்...' என்கிற பாணியில் பதிலளித்தால், விஷயம் அநேகமாய் சுபம்!

மாறாக, 'பாதையில காலை வச்சிருந்தது உங்க தப்பு; என்ன பெரிசா செருப்பு அது இதுன்னு பேசுறீங்க... மரியாதை கெட்டுடும்...' என்று, மிதித்தவர் பதிலுக்கு சூடாகிற போது, அது, சண்டையாகும்.

அப்பெண்ணின் முதல் பிரதிபலிப்பிலேயே உஷாராகி விட வேண்டும். பொது இடங்களில், பெண்ணின் குரல் எடுபடுமளவிற்கு, ஆணின் குரல் எடுபடாது என்பதை, ஆண்கள் உணர வேண்டும்.

பொது இடங்களில், பெண்கள், அவ்வளவு சீக்கிரம், ஆண்களிடம் கோபப்படவோ, குற்றம் சாட்டவோ மாட்டார்கள் என்கிற பொதுவான கருத்து, நம் சமூகத்தில் உண்டு. இது, அவர்களுக்கு பெரும் சாதகம். எனவே, இருக்கும் சூழ்நிலையிலிருந்து விடுபட, மாட்டிக் கொண்ட ஒரு கையை உருவிக் கொள்ளப் பார்க்க வேண்டுமே தவிர, மறு கையையும் நீட்டி, 'இந்தாங்கோ... நல்லாப் புடிச்சுக்குங்கோ...' என்று வசமாக மாட்டிக் கொள்ளக் கூடாது.

வீட்டில், கணவன் - மனைவிக்குள், ரத்த உறவுகளுக்குள் நாம் யதார்த்தமாக ஏதாவது சொல்லப் போக, அதை சீரியசாக எடுத்து, வாழ்வின் மறுபாதி குதிக்க, நாம் அதற்குமேல் போய், 'பின்ன என்னவாம்...' என்று ஆரம்பித்து, பழங்கதைகளை எல்லாம் இழுத்தால், ஆவியும், அனலும் தாம் மிஞ்சும்; அடங்க நெடு நேரம் ஆகும்.

கொதித்து வருகிற பாலை அடக்க, சில நீர்த்துளிகளை அதில் தெளிக்கும் பாணி, பாலுக்கு மட்டுமல்ல, கொதிக்க ஆரம்பிக்கும் மனதிற்கும் பொருந்தும்.

நாம் பேசுவது நியாயமானதாகவும், எதிராளி பேசுவது நியாயமற்றதாகவே இருக்கட்டும்... ஆனால், உரையாடல் முற்றி, சண்டையாக மாறும் போது காட்சி மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது, கை கலப்பிற்கோ, நீண்ட இடைவெளிக்கோ, நிரந்தர பிரிவிற்கோ, வழி வகுத்து விடும்!

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், சொச்ச மிச்ச காலத்தை, 'இதுகளோடு' நிம்மதியாக ஓட்டுகிற உத்தேசம் ஒருவருக்கு வேண்டுமா, வேண்டாமா!

பெரிதாய்க் குதித்து, எதிராளியை அடக்குவதை விட, நாம் அடங்கி, எதிராளியை அடக்குவதே புத்திசாலித்தனம்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us