தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏக்கம் நிறைவேறுமா?

ஏக்கம் நிறைவேறுமா?

ஏக்கம் நிறைவேறுமா?


PUBLISHED ON : ஆக 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''பணி ஓய்வு பெற்ற பின், எங்கேனும் ஒரு குக்கிராமத்திற்கு செல்ல வேண்டும். ஓரளவு சுமாரான ஓட்டு வீடு; வாசலில் திண்ணை மற்றும் வேப்பமரம்; வீட்டிற்குள் நுழைந்தால், ரேழி; கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்; அதன் பக்கவாட்டில், ஒரே ஒரு அறை. அதன் பக்கத்தில் பூஜையறை; அதையொட்டி சமையலறை.

''வீட்டிற்கு பின், ஓரளவு பெரிய தோட்டம்; கிணறு இருப்பது அவசியம். அதனருகில் துவைக்கும் கல். ஏழெட்டு தென்னை மரங்கள், பூச்செடிகள், பவழமல்லி, மா, பலா மற்றும் வாழை மரங்கள். கொஞ்சம் கீரை வகைகள்... ஓரிரு பசு மாடுகள் ஆகா... என்ன அற்புதம்!

''வாரம் ஒரு முறை நமக்கு தேவையானதை வாங்க, 10 - 15 கி.மீ., தூரத்தில் சிறு டவுன்; காலையில் எழுந்து பல்துலக்கியதும் காபி; அதற்கு பின், செய்தித்தாள். ஒரு பத்தி விடாமல், படித்து முடிக்க வேண்டும். அப்புறம் பழைய சாதம்; தொட்டுக் கொள்ள வடுமாங்காய், மோர்மிளகாய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் இதில் ஏதாவது ஒண்ணு! அப்புறம், தோட்டத்தில் சிறிது நேரம் வேலை. அதன்பின், குளியல்!

''சிறிது நேரம் பூஜை செய்து, பின், அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ சென்று, வழிபாடு முடித்து விட்டு வந்தால், 11:00 மணிக்கு சாப்பாடு... அதன்பின், வாசல் திண்ணையில் ஒத்த வயதுடைய அக்கம் பக்கத்து கிழங்களுடன் அரட்டை. சிறிய பேட்டரி ரேடியோவில் செய்தி கேட்டு விமர்சனம்! சரியான செட்டாக நாலைந்து பேர் சேர்ந்தால், கேரம் போர்டு, காசு வைக்காமல் ரம்மி விளையாட்டு!

''மதியம், இரண்டு மணி நேரம் தூக்கம்; மாலை ஒரு காபி. பின், தோட்டத்தில் கொஞ்ச நேரம் தண்ணீர் பாய்ச்சும் வேலை. மாடு இருந்தால், பால் கறப்பது அடிஷனல். அப்புறம் மாலை, 6:00 மணிக்கு கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்த பின், நம் வயதை ஒத்தவர்களுடன் உட்கார்ந்து, இரவு, 8:00 மணி வரை பல விஷயங்கள் பற்றிய அலசல்.

''பின் வீடு திரும்பி, எளிய டிபன்; கொஞ்சம் பால். ராத்திரி திண்ணையில் பாய் விரித்து, அக்கம் பக்கத்து தோஸ்துகளுடன் இருட்டில் பேசியபடி படுக்கை. தூக்கம் வரும் போது தூங்குதல்; முடிந்தால், வாசலில் உள்ள வேப்ப மரத்தின் கீழே கயிற்றுக்கட்டிலில் படுத்து ஜம்மென்று உறக்கம்!

''மொபைல்போன், கணினி, 'டிவி' மற்றும் 'பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' எதுவும் வேண்டாம். உடலில் நோயுமில்லை; மனதில் கவலையுமில்லை. வாய்க்குமா...'' என்று, சிவசங்கரன் தன் உரையை முடித்த போது, அரங்கத்தில் கைதட்டல் பலமாக ஒலித்தது.

அது அழகான, சுத்தமான சிறிய கம்யூனிட்டி ஹால்; நூறு பேர் அமர்ந்திருந்தனர். எல்லாருமே மூத்த குடிமக்கள்; உரையாற்றிய சிவசங்கரனும், மூத்த குடிமகன் தான்!

''அமைதி அமைதி...'' என்றபடி, மேடைக்கு வந்த, நடுத்தர வயது மனிதர், ''அன்புள்ள நண்பர்களே... 'ஏக்கம் நிறைவேறுமா?' என்ற தலைப்பில், நண்பர் சிவசங்கரன், மிக அழகாக, தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஏறக்குறைய நம் எல்லாருக்குமே இந்த ஏக்கம், அடி மனதில் இருக்கும் என நினைக்கிறேன். தற்போது, சிவசங்கரன் வெளிப்படுத்திய கருத்துகளை ஒட்டியோ, வெட்டியோ பேச, அரங்கத்தில் இருக்கும் நண்பர்களை அழைக்கிறேன்,'' என்றார்.

ஒரு வினாடி அமைதிக்கு பின், 60 வயது பெரியவர் ஒருவர் எழுந்து, ''நண்பரின் உரை, 18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த தமிழக கிராமங்களில் வாழ்க்கை முறையை, கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. நானும், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்; எங்கள் வீட்டில் காலையில் சாப்பிடும் பழைய சோறும், வடுமாங்காயும் ஆஹா... அதன் சுவையே அலாதி!

''பெரும்பாலும், காலையில் நான் சாப்பிடுவது, பழையது தான்; அதை சாப்பிட்டு பள்ளிக்கு சென்றால் தூக்கமாக வரும். ஆனால், அது, இந்த வயதில் ஜீரணம் ஆகுமா என்பது சந்தேகமே! அதோட, சர்க்கரை வியாதி, பி.பி., தவிர, அசிடிட்டி என்று, பல்வேறு நோய்கள் நம்மை பாடாய் படுத்தும் போது, கார்போஹைடிரேட் அதிகம் உள்ள பழைய சோறு எப்படி சரிப்படும்...'' என்றதும், மீண்டும் அரங்கத்தில் சிரிப்பொலியும், பேச்சும் எழுந்தது.

பேசியவர் மேடையை விட்டு இறங்கு முன், இன்னொருவர் மேடை ஏறி, ''நான் சிவசங்கரனின் பேச்சை மிகவும் ரசித்தேன். அந்த கால தமிழ் நாவல் ஒன்றை படிப்பது போல் இருந்தது. அவர் கூறியது போன்று, மாடு வளர்ப்பது எளிதான சமாசாரமில்லை. நான் சிறுவனாக இருந்த போது, எங்கள் வீட்டில், இரண்டு பசு மாடுகள் இருந்தன. அதையும், மாட்டு கொட்டிலையும் கவனிப்பது என்பது, முழு நேர வேலை. இதற்காகவே, எங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரன் இருப்பான். அவன் காலையில் வந்தால், மாடு கறப்பதில் இருந்து, சாணத்தை எடுத்துப் போடுவது, மாட்டை குளிப்பாட்டுவது, அதற்கு தீனி போடுவது, பின், கொட்டிலை சுத்தம் செய்வது என்று பல வேலைகள் இருக்கும் அவனுக்கு!

''அதோடு, மாட்டை சினைக்கு விடுவது, அதற்கு உடம்புக்கு வந்தால் பார்த்துக் கொள்வது, மாடு கன்று போடும் போது அதை கண்காணிப்பது என்று, கூடுதல் வேலையும் இருக்கும். அப்படி இருக்கும் போது, இந்த வயதில், அந்த கடுமையான வேலைகளுக்கு, நம் உடம்பு ஒத்துழைக்குமா அல்லது இதையெல்லாம் பார்க்க முழு நேர வேலைக்காரன் கிடைப்பானா என்பது சந்தேகம். எனவே, மாடு வளர்ப்பது, நமக்கு சரிப்பட்டு வரும் என்று தோன்றவில்லை,'' என்று முடித்தார்.

அரங்கம், மீண்டும் கைதட்டலில் அதிர்ந்தது.

சிவசங்கரன் பேசிய அந்த சிறிய உரை, சுவாரசியமான விவாதத்தை உருவாக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள், காலத்திற்கேற்ப முன் வைக்கப்பட்டு, மக்களின் ஆர்வத்தை கூட்டியதால், அடுத்து ஒருவர் மேடையேறியதும், கூட்டம் ஆர்வத்துடன் அவரையே பார்த்தது.

''இங்கு பேசிய இரண்டு நண்பர்களும் இருவேறு விஷயங்களை குறிப்பிட்டு, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை விளக்கினர். நான் வேறொரு விஷயம் பற்றி பேச போகிறேன்... எனக்கு தோட்டம் வைத்து பராமரிப்பது மிகவும் பிடித்த விஷயம். என் வீட்டில், அழகான தோட்டம் போட்டு, ஓரளவுக்கு பாதுகாத்து வருகிறேன்.

''ஆனாலும், தோட்டம் போட்டு வளர்ப்பது சாதாரணமானது அல்ல; குழந்தைகளை வளர்க்க எந்த அளவு அக்கறை காட்ட வேண்டுமோ, அதே அளவு, நிறைய உடல் உழைப்பு மற்றும் கவனம் இதற்கும் தேவை. அப்படி கஷ்டப்பட்டு வளர்த்த செடியில் பூ பூக்கும் போதோ, காய்க்கும் போதோ தோன்றும் மகிழ்ச்சி அலாதியானது தான் என்றாலும், அதை சரியான முறையில் கவனிப்பதற்கு தனித்திறமை வேண்டும்; அது எல்லாராலும் முடியுமா என்று தெரியவில்லை, '' என்றார்.

இவருடைய பேச்சு கொஞ்சம் சீரியசாக இருந்ததால், அரங்கம் அமைதியாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு, இரண்டு, மூன்று பெண்களே வந்திருந்தனர். திடீரென அதிலிருந்து ஒரு பெண் எழுந்து, ''நான் பேசலாமா...'' என்றாள்.

எல்லாருடைய பார்வையும், அவள் பக்கம் திரும்பின. அப்பெண்ணிற்கு, 50 வயதிற்கு மேல் இருக்கும்; சற்று தடித்த உடல் வாகுடன், களையாக இருந்தாள். காதிலும், மூக்கிலும் வைரங்கள் ஜொலித்தன.

மேடையில் இருந்த நடுத்தர வயதுக்காரர், ''ஓ... தாராளமா...'' என்றார்.

மெதுவாக நடந்து, மேடையின் படிகளில், கவனமாக ஏறி, 'மைக்' அருகே அவள் சென்ற போது, அதுவரை, 'கசமுச' வென்ற பேச்சு அடங்கி, அமைதி நிலவியது.

''என் பெயர் வசந்தா; கும்பகோணத்தை சேர்ந்தவள். சிவசங்கரன் பேசியதையும், அதை தொடர்ந்து, மற்றவர்களின் கருத்துகளையும் ரசித்தேன். ஆனால், ஒரு குறை; இது, ஒரு ஆணின் கனவாக, ஏக்கமாகத் தான் பிரதிபலிக்கிறதே தவிர, அதே வயதுள்ள அல்லது சற்று வயது குறைந்த அவர் மனைவிக்கு உள்ள ஏக்கமாக தோன்றவில்லை.

''காலையில், சுடச்சுட காபி குடித்து, 8:00 அல்லது 9:00 மணிக்கு, 'ஜில்' என்று பழையது சாப்பிட வேண்டும் என்கிறார், சிவசங்கரன். அது, இன்றைய சூழலில் முரண் தான் என்றாலும், அதைச் செய்வதற்கு வீட்டில், ஒரு பெண், முதல் நாள் சாதம் வடித்து, தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். கிராமங்களில் கூட, இப்போது காஸ் இணைப்பு வந்து விட்டது என்கின்றனர், அதைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனாலும், 'காஸ், இன்டக் ஷன் ஸ்டவ், மைக்ரே வேவ் அவனோ' இல்லாமல், வெறும் கும்மட்டி அடுப்பிலோ அல்லது விறகு அடுப்பிலோ சமைப்பதென்றால், எங்களால் சத்தியமாக முடியாது.

''செய்தித்தாளையும், அரசியல் அக்கப்போரையும் தவிர, வேறெந்த விதமான பொழுதுபோக்கும் இருக்கக் கூடாது என்கிறார், சிவசங்கரன். பெண்கள் என்ன செய்வது... ஆட்டுக்கல்லில் தோசை, இட்லிக்கு மாவு அரைப்பதும், அம்மியில் மாங்குமாங்கென்று சட்னி அரைத்து, சதாசர்வ காலமும், சமையல் பற்றி சிந்தித்து, வீட்டை பெருக்கி துடைத்து, பாத்திரம் தேய்த்து, கிணற்றில் தண்ணீர் இழுத்து, துணி தோய்த்து தேய்வது தான் எங்களுக்கான வேலையா...

''இது, ஆணாதிக்க எண்ணமாக தோன்றுகிறது. படியேறி வரவும், நடக்கவும் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று பார்த்தீர்களே... 'ஆஸ்டோ ஆர்த்ரைடிஸ்' இல்லாத பெண்கள், இன்று சமுதாயத்தில் மிகக் குறைவு; பெண்களுக்கு எங்கு சென்றாலும், கணவன், குழந்தைகள், பேரன், பேத்திகளுக்காக வேலை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு சிவசங்கரனிடம் ஏதாவது பதில் இருக்கிறதா...'' என்றார்.

கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. புன்னகையுடன், மெதுவாக, தன் இடத்திற்கு திரும்பினாள் வசந்தா.

மேடையில் இருந்த நடு வயதுக்காரர், ''வெல்செட் மேடம்... வேறு யாராவது கருத்து சொல்ல விரும்புகிறீர்களா...'' என்று கேட்டார்.

கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுக்காரர், தன் கையை உயர்த்தி, எழுந்து வந்தார். இவ்ளோ நேரம், அவரை யாருமே கவனிக்கவில்லை.

அரங்கத்தில் இருந்த அத்தனை கண்களும், அவரையே வியப்புடன் பார்த்தன. எல்லார் மனதிலும், 'யார் இவர், எப்படி இந்த கூட்டத்தில்...' என்ற கேள்வி தோன்றியது.

அவர் மேடையேறி, ''வணக்கம்...'' என்று தமிழில் பேச துவங்க, அத்தனை பேரும் ஆச்சரியமடைந்தனர்.

''என் பெயர், ஜான் ஸ்டீபன்; பிறந்து, வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா. கடந்த, 10 ஆண்டுகளாக, இந்தியாவில், தமிழகத்தில் உள்ள, தஞ்சாவூருக்கு அருகே புதுசத்திரம் என்ற கிராமத்தில் தான் வாழ்ந்தேன்.

''அமெரிக்காவில் உள்ள டல்லஸ் மாநிலத்திலிருந்து, தென்னிந்திய வாழ்க்கை கலாசாரத்தை பற்றி ஆராய்ச்சி செய்ய, இந்தியா வந்த எனக்கு தமிழையும், இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளையும் கற்று கொடுத்தவர், என் ஆசான், தமிழ் பேராசிரியர் வெங்கடரமணன். இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்துள்ளேன்.

''இந்த அமெரிக்கனுக்கு எப்படி நம் வாழ்க்கை முறை, கனவு மற்றும் ஏக்கங்கள் பற்றி தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். இந்தியாவின் சரித்திரம், கலாசாரம், கடவுள் நம்பிக்கை மற்றும் தத்துவங்கள் குறித்து சிறிதளவு படித்துள்ளேன். மேலும், நான் உங்கள் நாட்டில் பார்த்து, அறிந்து, அனுபவித்த விஷயங்களிலிருந்து, என் மனதில் தோன்றியுள்ள சில கருத்துகளை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

''உங்கள் நாட்டில் உள்ள குடும்பம் என்ற அமைப்பு சிறப்பானது. பெரும்பாலான பெற்றோர் தங்களை காட்டிலும், தங்கள் குடும்பத்தையே அதிகம் நேசிக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக, எவ்விதமான சமரசமோ, தியாகமோ செய்ய தயங்குவதில்லை. அதுதான் உங்கள் பலம்; பலவீனமும்! எந்த பலமும், எல்லைகளை விரிக்கும் போதோ, தாண்டும் போதோ பலவீனமடைவதை தடுக்க முடியாது.

''முதலில் பேசிய, சிவசங்கரனின் ஏக்கம் எனக்கு புரிகிறது. நான் தங்கியிருந்த கிராமத்தில் கூட, 'டிவி'யும், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டும் ஓரளவு வந்து விட்டன. அவர் கற்பனை செய்த காலம் வேறு; இன்றுள்ள நிலை வேறு. குறிப்பாக, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் வசதியற்ற கிராமங்கள் குறைவு.

''ஒவ்வொரு மனிதனும், அவனுடைய கடந்த காலத்தை நினைத்து பார்க்காமல் இருப்பதில்லை; அது அவனுக்கு ஏக்கத்தை தருகிறதா, மகிழ்ச்சியை தருகிறதா என்பது அவரவரை பொறுத்த சமாசாரம். நீங்கள், உங்கள் பெற்றோரிடமிருந்து விலகி, நகரம் வந்த போது, அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து மாறுபட்டிருப்பீர்கள். அதேபோல், அமெரிக்காவில் வாழும் உங்கள் பிள்ளைகள் மற்றும் பெண்கள் உங்களிலிருந்தும் மாறுபடுவர். புலம் பெயர்ந்து வந்து, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் குடியேறியுள்ள ஒவ்வொரு வெளிநாட்டு பிரஜைக்கும், உள்ளுக்குள் அந்த ஏக்கம் இருக்கும்.

''ஆனால், அதை உங்களால் இப்போது செயல்படுத்த முடியாது. சில சுகங்களுக்கு பழகி போன மனமும், உடலும் திரும்ப நீங்கள் எளிமை என்று நினைக்கிற கடினமான வாழ்க்கைக்கு திரும்ப முடியாது. இதை நான் குற்றமாகவோ, குறையாகவோ சுட்டி காட்டுவதாக நினைக்க வேண்டாம். மாற்றங்கள் தான் நிரந்தரம்; இதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் அனைவருக்குமே தெரியும்,'' என்று முடித்தான், ஜான் ஸ்டீபன்.

ஒரு விநாடி அமைதிக்கு பின், அங்கே பலமான கைதட்டல் எழுந்தது.

கூட்டம் முடிந்து, வெளியே வந்து ஒவ்வொருவரும் தங்கள் கார்களில் ஏறி, பல மைல் தூரங்களில் இருக்கும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். சாலைகளில் விரைந்து செல்லும், கார்களை தவிர, வேறு மனித நடமாட்டம் இல்லை.

ஏனெனில், அது, அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள, சான் ஜோஸ் என்ற பிரபல நகரம்!



- தேவவிரதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us