PUBLISHED ON : டிச 18, 2016

சபலிஸ்ட்டுகளிடமிருந்து தப்ப...
கணவனை இழந்த என் தோழி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். கணவனை இழந்தவள் என்பதை அறிந்த சபலிஸ்ட்டுகள் சிலர், அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்க, அவளும் பல்வேறு கம்பெனிகள் மாறியும் அதே நிலை தொடரவே, தன்னை தற்காத்துக்கொள்ள எரிந்து விழ ஆரம்பித்தாள். இதனால், அவளை பழி வாங்கும் விதமாக, வேண்டுமென்றே வேலைப் பளுவை கூட்டி, அவளாகவே வேலையை விட்டு செல்லும்படி செயல்பட்டனர்.
வெறுத்துப் போய், வேலையை விட்டு நின்றவள், தையல் கற்று, வீட்டிலேயே ஜாக்கெட், சுடிதார் தைக்க ஆரம்பித்தாள். அதில், நல்ல வருமானம் வரவே, தன் போன்று கணவனை இழந்த பெண்களுக்கு தையல் கற்றுக் கொடுத்து வருவதுடன், தற்போது, பெரிய அளவில் டெய்லர் கடை நடத்தி, மாதம், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறாள்.
அவளிடம், வேலை செய்யும் பெண்களும், தங்களது பாதுகாப்பை உணர்ந்து, நல்ல முறையில் வேலை செய்கின்றனர்.
கணவனை இழந்து, மறுமணம் செய்யாமல் வாழும் இளம் பெண்கள், சுய தொழில் செய்ய வேண்டும் அல்லது பெண் நிர்வகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும். அதுதான், அவர்களுக்கு பாதுகாப்பையும், நிம்மதியையும் தரும் என்பதற்கு என் தோழியின் வாழ்க்கையே உதாரணம்!
- பே.ராமலட்சுமி, ஆர்.ஜே. பாளையம்.
விவசாயத்தை மறக்காதவர்!
எங்கள் நிறுவனத்தில் எச்.ஆர்., அதிகாரியாக பணியாற்றும் இளைஞர், கிராமத்திலிருந்து படித்து, பதவிக்கு வந்தவர். பண்பிலும், பழக்கத்திலும், மிக எளிமையானவர்; தனியே அறை எடுத்து தங்கினாலும், புகை, மது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
அவர் பணியில் சேர்ந்த இந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் அவரது கிராமத்திற்கு கிளம்பிச் சென்று விடுவார்.
ஒருநாள், விளையாட்டாக, 'என்ன சார்... சனிக்கிழமையானா ஊருக்கு கிளம்பிடுறீங்களே, ஏதாவது அத்தைப் பொண்ணு, மாமா பொண்ணைப் பாக்க போறீங்களோ... ஏதும், 'கமிட்மென்ட்' இருக்கா...' என்றேன்.
பலமாக சிரித்தவர், 'அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க... ஊர்ல எங்களுக்கு கொஞ்சம் நிலமும், ஆடு, மாடுகளும் இருக்கு; அதில், அப்பாவும், அண்ணனும் விவசாயம் செய்றாங்க. ஓய்வு, பொழுதுபோக்குன்னு எதுவும் அவங்களுக்கு கிடையாது; எப்பவும் உழைப்பு தான். அதான், நான் கிளம்பிப் போய், அவங்களுக்கு ஒரு நாள் வேலை பளுவை குறைத்து, ஓய்வு, கொடுப்பேன். என்ன தான் படித்து, பதவியில் இருந்தாலும், அவங்களோட உழைப்புக்கு முன், நாமெல்லாம் கால் தூசு தானே...' என்றார்.
இதைக் கேட்டதும், ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். தன் குடும்பம், விவசாயம், கால்நடை வளர்ப்பு மீது, அவர் வைத்திருந்த அலாதி ஈடுபாடு, என்னை வியக்க வைத்ததோடு, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் விவசாயிகளின் மீது, தனி மரியாதையையும் வரவழைத்தது.
- அ. ஜோசப், மதுரை.
பெயர் சொல்லும் பரிசுப் பொருள்!
சமீபத்தில், என் சகோதரிக்கு, தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து, வீட்டிற்கு கிளம்பும் போது, மருத்துவமனை சார்பாக, ஒரு பூச்செடியையும், மரக் கன்றையும் பரிசாக கொடுத்தனர். எங்களுக்கு மட்டுமல்ல, அங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும், இதுபோல் அன்பளிப்பு கொடுப்பது வழக்கமாம். இப்பரிசு வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அங்கு இருந்தவர்களிடம், 'இந்த யோசனை எப்படி வந்தது...' என்று கேட்டேன்.
'நாம் கொடுக்கும் பரிசு பொருள், ஒருநாள் காணாமலோ அல்லது பயனற்றதாகவோ ஆகிவிடும். ஆனால், இதுபோன்ற பூச்செடி, மரக் கன்றை கொடுக்கும் போது, நாளை அது பூவோ, கனியோ கொடுக்கும் போது, இன்னார் கொடுத்த செடியில் வந்த பொருள் என்று காலத்திற்கும் பேசுவர்.
'குழந்தையை எடுத்துச் செல்லும் போது, செடியை கொடுப்பதால், அச்செடிகளை குழந்தையைப் போல் பார்த்துக்குவாங்க. பின்னாளில், குழந்தை வயதையும், செடி வயதையும் ஞாபகம் வைத்து பேசுவர்...' என்றனர்.
உண்மையில், பெயர் சொல்லும் பரிசுப் பொருள் என்பது இதுதானே!
- க.நாகராணி, உடுமலை.
