PUBLISHED ON : டிச 18, 2016

நடிகர் பி.யூ.சின்னப்பா, சந்திரகாந்தா என்ற தமிழ்ப் படத்தில், சுண்டூர் இளவரசனாக, மிகச் சிறப்பாக நடித்து, புகழ் பெற்றிருந்தும், அதற்குப் பின், பட வாய்ப்புகள் இன்றி, வாழ்க்கையில் வெறுப்புற்று, துறவி போல், புதுக்கோட்டையில் முடங்கிக் கிடந்தார். அவரது நிலையை அறிந்த கலைவாணர், 'அவரைப் போன்ற திறமையுள்ள நடிகர்கள், ஒடுங்கி விடக்கூடாது...' என்ற பரந்த எண்ணத்தோடு தான், ஆரியமாலா படத்தில், அவரை கதாநாயகனாக போடுமாறு தெரிவித்தார். அதன்படி, ஆரியமாலா படத்தில், சின்னப்பாவை முக்கிய நடிகராக போட, படம் பெரும் வெற்றி பெற்றது. 'கதாநாயகர் வேடத்திற்கு, வேறு யாரைப் போட்டிருந்தாலும், பொருத்தமாக இருந்திருக்காது; படமும் மகத்தான வெற்றியை அடைந்திருக்காது...' என்பதை, ஆரியமாலா படத் தயாரிப்பாளர்கள் உணர்ந்தனர்.
கலைவாணரின் கருணை உள்ளத்தால் தான், மீண்டும் பி.யூ.சின்னப்பாவுக்கு, பட உலகில் புது வாழ்வும், பெரும் புகழும் கிடைத்தது.
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில், படங்கள் தயாராகிய போது, கலைவாணர் தம் குழுவினருக்கு ஒரு புது முறையை வகுத்திருந்தார். அது, 'மாலை, 4:00 மணிக்கு படப்பிடிப்பிலிருந்து விடுபட்டு, ஸ்டுடியோ மைதானத்தில், வாலிபால் விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும்...' என்பது தான் அது!
அதன்படி, மாலை, 4:00 மணி ஆனவுடன், சொல்லி வைத்தாற் போல், எல்லா நடிகர்களும், வாலிபால் விளையாடச் செல்லத் துவங்கினர். அவ்விளையாட்டில் வீரராக விளங்கினார், கிருஷ்ணன். அதனால், இரு அணியினருமே, கலைவாணரே, தங்கள் அணிக்கு, கேப்டனாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.
அவரும், 'இது, விளையாட்டுக் கட்சி தானே; கட்சி மாறினால் பாதகமில்லை...' என்று கருதி, நாளுக்கொரு அணி வீதம், 'கேப்டனாக' இருந்து, எல்லாரையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
ஒருநாள், வாலிபால் விளையாடுவதற்காக, படப்பிடிப்பிலிருந்து வெளியேறினர். நடிகர்கள். 4:00 மணிக்கே அவர்கள் விளையாடப் போவதை விரும்பவில்லை, இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு. அதனால், 'படப்பிடிப்பு வேலை நேரம் குறைகிறது; அதைவிட, விளையாட்டு முக்கியமல்ல...' என்று எண்ணினார் அவர்.
அத்துடன், கலைவாணர், மற்ற நடிகர்களை நடிக்க விடாமல், விளையாட அழைத்துச் சென்று விடுவதை கண்டு, சினம் கொண்டார். அதனால், கோபத்துடன், கலைவாணரிடம் சென்று, 'என்னப்பா கிருஷ்ணா... 4:00 மணிக்கே விளையாட நடிகர்கள், படப்பிடிப்பிலிருந்து, 'வாக் அவுட்' செய்து விடுகின்றனரே... இதுபோல, விளையாட்டில் ஈடுபட்டால், பட வேலை, சரி வர நடக்காதென்று உனக்குத் தெரியாதா...' என்றார்.
நாயுடு எப்படிப்பட்டவர் என்பதை, நன்கு அறிவார் கலைவாணர். எனவே, அவர் பிடிவாதமாக பதில் சொல்லாமல், 'நீங்கள் சொல்வது மிகவும் நியாயம்; நாங்கள் விளையாடுவதும் நியாயம். நீங்கள் அச்சப்படுவது போல், எதுவும் நடக்காது. குறிப்பிட்ட நாளில், படப்பிடிப்பை, முடித்துத் தருகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நடிகர்கள், மாலை வரை நடித்துக் கொண்டே இருந்தால், சலித்துப் போவர். அவர்களுக்கு ஒரு மாறுதல் தேவை என்று தான், விளையாட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்...' என்றார்.
வேறு யார், இது போல் பதில் அளித்திருந்தாலும், திருப்தி அடைந்திருக்க மாட்டார், நாயுடு. ஆனால், கலைவாணர், தம் தொழிலில் கவனம் செலுத்தக்கூடியவர் என்பதை நன்கறிந்ததால், பேசாமல் திரும்பிப் போனார். கலைவாணரும் சொன்னது போன்றே குறிப்பிட்ட நாளில், படங்கள் முடிவடைய, மற்றவர்களை ஊக்குவித்தார்; தாமும் அதற்காக உழைத்தார்.
அதனால் தான், பிரபல ஸ்டுடியோ அதிபர்களான ஜெமினி வாசன், டி.ஆர்.சுந்தரம் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு போன்றோர், தங்களுடைய கட்டுப்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் கூட, கலைவாணருக்காக, அவருடைய அசாத்திய திறமைக்காக, பெருந்தன்மையோடு தளர்த்திக் கொண்டனர்.
கலைவாணருக்கு, 'படத் தொழில் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்...' என்ற லட்சியம் மட்டுமின்றி, எல்லாருக்கும் உதவ வேண்டும் என்ற கருணை உள்ளமும் இருந்தது. அதன் காரணமாக, அவர், தட்சயக்ஞம் என்ற தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக, கோல்கட்டா சென்றிருந்த போது, அதே உள்ளத்தோடு, ஓடோடி வந்திருக்கிறார்.
'கலைவாணர், எப்போதும், எதற்காகவும் கண்ணீர் வடிப்பதில்லை. எத்தகைய இன்னல்கள் வந்தாலும், அவைகளைத் தாங்கி, சிரித்த முகத்தோடு இருப்பார். அப்படிப்பட்டவர், ஒருநாள், கண்ணீர் விட்டு அழ நேர்ந்தது...' என்று கூறி, ஒரு சம்பவத்தை தெரிவித்தார், இயக்குனர் டி.ஆர்.ரகுநாத். அது...
கோல்கட்டாவில், தட்ச யக்ஞம் படப்பிடிப்பில், கலந்து கொள்ள சென்றிருந்தார், கலைவாணர். ஒரு சில நாட்கள் நடித்து முடித்து, இவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, லாட்ஜுக்கு அவர் திரும்பி வந்த போது, தந்தி ஒன்று வந்திருந்தது. அதைப் படித்து, கண்ணீர் விட்டு அழுதார், கலைவாணர்.
அதுவரை, கலைவாணர் கலங்கியதை பார்த்திராத நடிக, நடிகையர், அவர் தேம்பித் தேம்பி அழுவதை கண்டு, மிகவும் பதறிப் போயினர்.
கண்ணீரோடு, தமக்கு முன் பிரித்துக் கிடந்த தந்தியை, காட்டினார் கலைவாணர்.
அதில், 'கிருஷ்ணன் தூது என்ற தமிழ்ப் படத்தின், சில, 'நெகடிவ்'கள் எரிந்து விட்டன. எரிந்தவை, கலைவாணர் நடித்துக் கொடுத்த, நகைச்சுவைப் பகுதிகள்...' என்ற விவரம் இருந்தது.
'தம் குழுவினரோடு, சென்னைக்கு சென்று, மீண்டும் அதே காட்சிகளில் நடித்துக் கொடுக்க வேண்டும்...' என்ற தன் விருப்பத்தை கூறி, அனுமதி அளித்தால், சென்னைக்கு சென்று, பத்து நாட்களுக்குள், கிருஷ்ணன் தூது படத்தில், மறுபடியும், அதே காட்சிகளில் நடித்து விட்டு திரும்புவதாக, தட்ச யக்ஞம் இயக்குனரிடம் கூறினார், கலைவாணர்.
அதன்படி, உடனே அவருக்கு, சென்னை செல்ல அனுமதி கிடைத்தது. இந்த நாளைப் போல, விமான வசதி ஏற்படாத காலம் அது. கோல்கட்டாவிலிருந்து, ரயிலில் பயணமாகி, பலவித சிரமங்களுக்கு ஈடு கொடுத்து, அப்படத்தில், தம் குழுவினரோடு நடித்தார் கலைவாணர். அவரது கடமை உணர்ச்சியை கண்டு, பெருமை கொள்ளாதவர்களே இல்லை.
ஏர் முனையில், மாடுகளை கட்டுவது தான் வழக்கம். ஆனால், ஏருக்கு பின், மாடுகளை பிணைத்துப் பார்த்திருக்கிறீர்களா...
இந்த புதுவிதமான நகைச்சுவைக் காட்சியை, தட்சயக்ஞம் என்ற படத்தில் செய்து காட்டினார், கலைவாணர்.
இப்படத்தில், உலகம் தெரியாத பேதை பட்டிக்காட்டான் வேடமேற்றிருந்தார், கிருஷ்ணன். அவர், மாடுகளை ஏருக்குப் பின் கட்டுவதை பார்த்த அவருடன் நடித்த பழைய பபூன் சங்கரய்யர், 'என்னப்பா, மாட்டை இப்படிக் கட்டுகிறாய்...' என்று கேட்டு, சிரித்திருக்கிறார்.
அதுபோன்ற அப்பாவியை தான், கைலாசம் எப்படியிருக்கும் என்று பார்த்து வர, பூலோகத்திலிருந்து அனுப்பி வைப்பது போல், நகைச்சுவைச் சம்பவங்களைக் கொண்டு போயிருந்தனர். தாம் பார்த்து வந்த கைலாசம், எப்படி இருந்தது என்று, அப்படத்தில் வேடிக்கையாகச் சொல்வார், கிருஷ்ணன்.
மாடுகளை எப்படிக் கட்டுவது என்று தெரியாத ஒருவனால் தான், கைலாசம் வரை சென்று, வெற்றிகரமாக திரும்பி வந்து, கைலாச வர்ணனை செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டுவது தான், நகைச்சுவையின் சாரம்.
அந்த விசித்திரமான ஏர் பூட்டிய காட்சியை, கருத்தில் வைத்து, பின், அதையே தம் சொந்த சினிமா கம்பெனியான, 'அசோகா பிலிம்சின்' சின்னமாக்கினார், கலைவாணர். அச்சின்னத்தில் ஏர் முன்னாலிருக்க, மாடுகள் பின்னால் கட்டப்பட்டிருந்தது போல், சித்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.
புரட்சிகரமான சின்னத்தை, அவர், தம் படத்தயாரிப்பு கம்பெனிக்கு வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில், புரட்சிகரமான நகைச்சுவைப் படங்களையும் தயாரித்தார். கோவையில் தான், அவரது தயாரிப்புகளான, அலிபாபாவும் 40 திருடர்களும், கொழுக்கட்டை, புத்திமானே பலவான், சந்திரஹரி மற்றும் நவீன விக்கிரமாதித்தன் போன்ற, முழு நீள நகைச்சுவைப் படங்கள் உருவாகி, வெற்றிகரமாக ஓடி, பண வசூலை வாரி குவித்தன.
— தொடரும்.
நன்றி: வ.உ.சி., நூலகம்
பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்
