PUBLISHED ON : டிச 18, 2016

சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். இ - மெயில் பெருகி விட்ட இந்தக் காலத்தில், பேப்பரில் எழுதி, அஞ்சல் உறையிலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி இருக்கிறாரே என, ஆச்சரியப்பட்டு, கடிதத்தை படித்தேன்...
டியர் அந்துமணி,
நான், உங்கள் எழுத்துகளின் தீவிர ரசிகை. இப்போது, அமெரிக்கா வந்தும், 'நெட்' மூலமாக, தொடர்ந்து, பா.கே.ப., பகுதியை படித்து வருகிறேன். என்னை, உங்களுக்குத் தெரியாவிட்டாலும், உங்களை, என் உற்ற தோழனாகவே மதித்து, இக்கடிதத்தை எழுதுகிறேன்.
நான், தமிழகத்தில், கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவர் ஒருவர் என்னை காதலித்தார். முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை. பின், நாளாக நாளாக, எப்படியோ என்னை அறியாமலேயே, அவர் காதலை ஏற்றுக் கொண்டேன். ஆனால், படிப்பில், என் கவனத்தை எப்போதுமே சிதற விட்டதில்லை. அதனால், பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாக வந்து, பாராட்டும், பதக்கமும் பெற்றேன்.
மேலும், அமெரிக்காவில் வேலை கிடைத்து, இங்கே வந்தேன். வருவதற்கு முன், எனக்கும், என் காதலருக்கும் திருமணம் நடந்தது. என்னுடனேயே கணவரையும் அமெரிக்கா அழைத்து வந்தேன். திருமணத்திற்கு முன் வரை என்னை, 'கண்ணே, மணியே' என்று கொஞ்சிய என் கணவர், இங்கே வந்ததும், வேறு மாதிரி நடக்க ஆரம்பித்தார். 'வேலையில்லாமல் வீட்டில் இருப்பதால், ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம்; வேலை கிடைத்ததும், சரியாகி விடும்...' என்று நினைத்து, அவருக்கு வேலை தேடினேன்.
வேலையும் கிடைத்தது; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த வேலையே எனக்கு பிரச்னையாகவும் அமைந்தது. வேலை கிடைக்கும் வரை, என்னை மனதளவில் துன்புறுத்திய என் கணவர், இப்போது, வேலை கிடைத்ததும் உடல் அளவிலும் துன்புறுத்த ஆரம்பித்து விட்டார். தினமும் அடி, உதை தான்.
காரணம்... சந்தேகம். 'எவன் மூலமாக, எனக்கு வேலை வாங்கினாய்... அதற்காக, நீ என்ன கொடுத்தாய்...' இந்தக் கேள்வியை, அவர் என்னிடம் கேட்காத நாளே கிடையாது.
இது மட்டுமல்ல, அலுவலகம் முடிந்த அடுத்த கணம், வீட்டில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், 'எவனோடு ஊர் சுற்றி வருகிறாய்...' என்ற கேள்வி வரும். இன்னும் அசிங்கமாகக் கேட்பார்; எனக்குத்தான் எழுத கூச்சமாக உள்ளது.
திருமணம் ஆகிவிட்டால், காதல் காணாமல் போய் விடுமா... திருமணத்திற்கு முன்னும், பின்னும் நான் ஒரே மாதிரி தான் இருக்கிறேன்; ஆனால், அவரிடம் மட்டும் ஏன் இந்த மாற்றம்?
எத்தனையோ முறை, அவரிடம் எடுத்துச் சொல்ல முயற்சி செய்தேன்; அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை தான்.
இவ்வளவு பிரச்னைக்கும் இடையில், என் துயரத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என்றால், என் பெற்றோர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுடன் தொலை பேசியில் பேசலாமே என்று நீங்கள் கேட்கலாம்; அது முடியாது. காரணம், நான் சம்பளம் வாங்கியதும், அதை முழுமையாக அவரிடம் கொடுத்து விட வேண்டும்.
சம்பளத்தில் ஒரு டாலர் குறைந்தாலும், 'என்ன செலவு?' என்று கேட்பார். குடும்ப நிர்வாகம் அனைத்தும் அவர் கையில்! மேலும், தமிழகத்தில் தனிமையிலுள்ள பெற்றோரிடம், என் வேதனையைக் கூறி, அவர்களை துன்பப்படுத்த என் மனம் இடம் தரவில்லை.
இப்போது நான் உங்களிடம் யோசனை கேட்கிறேன்... என் கணவரை விவாகரத்து செய்து விட்டு, புதியதொரு வாழ்வைத் துவங்கலாமா?
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். என் கணவருக்கு அன்பு செலுத்த தெரியாதது போலவே, செக்ஸ் ரீதியாகவும், 'வீக்!' திருமணம் ஆகியும், நான் கன்னியாகவே வாழ்ந்து வருகிறேன்.
நீண்ட கடிதம் என்பதால், உங்களுக்கு இ - மெயிலில் இதை அனுப்பாமல், ரெகுலர் தபாலில், வானஞ்சலில் அனுப்பியுள்ளேன். ஆனால், இதற்கு தங்களின் பதிலை, தபாலில் அனுப்பி விட வேண்டாம். எனக்கு வரும் தபால்களை பிரித்துப் படிக்கும் பழக்கம் என் கணவருக்கு உள்ளது. எனவே, பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் அல்லது பா.கே.ப.,விலேயே எழுதினால், நான் புரிந்து கொள்வேன்.
இப்படிப்பட்ட கடிதங்கள், எனக்கு, சமீபகாலத்தில், அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளன; பெரும்பாலும், வெளிநாட்டில் வாழும் பெண்களிடமிருந்து சொல்லி வைத்தது போல், எல்லா கடிதங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. அவை:
1. கணவர் அடிக்கிறார்.
2. தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பணம் இல்லை.
3. கடிதங்களைப் பிரித்துப் படிக்கிறார்.
அமெரிக்காவில், பெற்றோர், தங்கள் குழந்தையை அடித்து, அக்குழந்தை புகார் செய்தால், பெற்றோருக்கு, சிறை; அதேபோல், கணவர் அடிக்கிறார் என்று மனைவி புகார் செய்தால், அடுத்த நிமிடம் போலீஸ் வந்துவிடும். அப்படிப்பட்ட நாட்டில் தான், நம் தமிழ்ப் பெண்கள் இவ்வாறு அல்லல் படுகின்றனர்.
கைநிறைய சம்பாதித்து சுயமாக, தம் காலில் நிற்கும் பெண்களிடமும், 'தாலி' சென்டிமென்ட் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்... அதுவும் அமெரிக்காவில்!
மனோதத்துவப் புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருந்தேன்; அதில், மனதைத் தொட்ட ஐந்து பாயின்டுகள் இதோ:
1. நீங்கள் செய்யும் வேலையில், குழந்தையின் உழைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; உதாரணம், சைக்கிள் துடைத்தல்.
2. நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு, எப்போதாவது உங்கள் மகனையும், அழைத்துப் போங்கள். 'அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு எல்லாம் வாங்கித் தருகிறார்...' என்று, அவன் அறிந்து கொள்ளட்டும்.
3. குழந்தையிடம் அளவுக்கு மீறி செல்லம் காட்டாதீர்கள்; அதே சமயம், ரொம்பவும் ஆத்திரப் படாதீர்கள்.
4. குழந்தையைக் கட்டிப்பிடித்து விளையாடுங்கள். உங்கள் உடலோடு ஒட்டிப் பழகினால் பாசம் அதிகமாகும்.
5. குழந்தைகள் உங்கள் மீது கோபம் கொள்ளும் போது, அது, நியாயமாக இருந்தால் விட்டுக் கொடுங்கள்.
நண்பர் ஒருவர், வங்கி அதிகாரி; கவிஞர் கண்ணதாசனின் அதி தீவிர ரசிகர். கண்ணதாசனைப் பற்றி எந்தத் தகவல் கேட்டாலும், புட்டுப் புட்டு வைப்பார். அவரது கல்லூரி விழாவில், ஒரு முறை கண்ணதாசன் பேசினாராம்... அதை அப்படியே நினைவு கூர்ந்தார்...
நல்ல கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறைய உண்டு. இருந்தும் என்ன செய்ய... 'செக்சை அப்படியே பிழிந்து கொடு...' என்று தான் எல்லா தயாரிப்பாளர்களும் பேச்சை ஆரம்பிக்கின்றனர்.
ஒரு முறை, மேல் கச்சையும், ஜட்டியும் மட்டுமே அணிந்த ஒரு பெண்ணை, என் முன் நிறுத்தி, 'ம்... எழுது பாட்டை...' என்று கூறினர்.
எனக்கோ எரிச்சல்... அந்தப் பெண்ணை பார்க்க சகிக்கவில்லை. இந்த லட்சணத்தில் எங்கிருந்து பாட்டெழுத!
'ஆண்டவன் படைத்த உடம்பு தானே... ஆடை என்ன அவசியமா...' என்று, எழுதி விட்டேன்.
'இப்படி எழுதிட்டீங்களே சென்சார் அனுமதிக்குமா...' என்று, கேட்டார் தயாரிப்பாளர்.
'உங்கள் படத்தை அனுமதிக்கிற சென்சார், என் பாட்டையும் நிச்சயம் அனுமதிக்கும்...' என்று சொல்லி அனுப்பினேன்.
- இப்படி பேசினாராம் கவிஞர். இப்போ வரும் பாட்டுகளைக் கேட்டால், என்ன சொல்லி இருப்பாரோ கவிஞர்!
