தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : பிப் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கை நம் கையில்!

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், தன் மகனுக்கு நீண்ட காலமாக பெண் தேடி வந்தார். இந்நிலையில், ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி, பெண் பார்க்கும் படலமும் முடிந்து விட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்த போது, 'எப்போ திருமணம் வைச்சுருக்கீங்க...' என்று கேட்டேன். உடனே முகம் வாட, 'இதுவும் அமையாது போலிருக்கு...' என்றார். ஏன் என்றதற்கு, 'பொண்ணோட அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருக்கு; இது, பொண்ணுக்கும் கொஞ்சம் காலம் கழிச்சு வரலாம்...' என்று கூறியதும், அதிர்ந்து போனேன்.

'புற்று நோயைக் கூட குணப்படுத்தக் கூடிய நவீன மருத்துவம் வந்து விட்ட காலத்தில், இதற்கு போய் பயப்படுறீங்களே... அம்மாவுக்கு இருந்தா பொண்ணுக்கும் வரணும்ன்னு இல்ல; அப்படியே வந்தாலும், அதற்கு எளிய மருத்துவ முறைகள் உள்ளன. நம் வீட்டுப் பெண்ணுக்கு இப்படி என்றால் ஒதுக்கி விடுவோமா என்ன... குறை சொல்லிக் கொண்டே, பையனின் வாழ்நாளை வீணடிப்பதை விட்டு, சட்டென்று நல்ல காரியத்தை முடிக்க பாருங்க...' என்றேன். அவரிடம் மாறுதல் தென்பட்டது. திருப்தி என்பது, எந்த விஷயத்திலும் அவ்வளவு சீக்கிரம் நமக்கு ஏற்படாது. அதை, நாமாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும்.

— என்.சந்திரா, தங்கச்சிமடம்.

தந்தையின் தொழில் பக்தியும், தனயனின் அயராத உழைப்பும்!

கடந்த வாரத்தில் ஒருநாள், கடைவீதிக்கு சென்றிருந்தேன். அப்போது, வழியில், எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர், மூன்று சக்கர சைக்கிளில், மினரல் வாட்டர் கேன், வாட்டர் பாட்டில் போன்றவற்றை ஏற்றி வந்தார். அதை பார்த்ததும், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காரணம், அவர், ஒரு பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர். வியர்க்க விறுவிறுக்க வந்தவரை, 'உங்க வேலை என்னாச்சு; ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க...' என்றேன்.

'என் வேலைக்கு ஒண்ணுமில்ல; எங்கப்பாவுக்கு ரெண்டு நாளா உடம்புக்கு முடியல. அவர், கடைகளுக்கு வாட்டர் கேன், வாட்டர் பாட்டில்களை, 'சப்ளை' செய்கிறார். எவ்வளவு சிரமமாக இருந்தாலும், காலையில எழுந்ததும், முதல் வேலையாக, கடைகளுக்கு இவற்றை சப்ளை செய்துட்டுதான் மறு வேலை பார்ப்பார். அந்த அளவுக்கு செய்யும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்.

'இப்ப, அவருக்கு உடம்புக்கு முடியலன்னதும், தன்னால கடைக்காரர்களோட வியாபாரம் பாதிக்குமேன்னு புலம்பினார். அதான், நானே இவைகளை கொண்டு போய் கடைகளுக்கு போட்டுட்டு வர்றேன். இனி, குளிச்சுட்டு ஆபீசுக்கு கிளம்பணும்...' என்றார்.

தந்தையின் தொழில் பக்தியும், தனயனின் அயராத உழைப்பையும் எண்ணி நெகிழ்ந்தேன்!

— டி.பி.எஸ்.சுந்தரம், திட்டக்குடி.

பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரி!

என் தோழியும், அவளது கணவரும் மாத சம்பளம் வாங்குபவர்கள். தோழியின் கணவரோ நல்ல செலவாளி; சம்பளம் வாங்கியதும் ஆடம்பர பொருட்கள் வாங்குவது, ஓட்டலுக்கு போவது என்று, அனாவசிய செலவுகளில் ஈடுபடுவார். இதனால், வேலைக்கு சென்று பல ஆண்டுகளாகியும், சேமிப்பு என்று எதுவுமில்லை.

இந்நிலையில், ஊரிலிருந்து வந்திருந்த அவரது பெரியம்மா, சில நாட்கள் இவர்களது வீட்டில் தங்கியுள்ளார். அப்போது, அவர் செய்யும் அனாவசிய செலவுகளை பார்த்து, 'ஏனப்பா... இப்படி தேவையில்லாத செலவுகளை செய்கிறாய்...' என்று, மனம் பொறுக்காமல் கேட்டு விட்டார்.

அதற்கு, அவர், 'நானும், அனாவசியமாக செலவழிக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன் பெரியம்மா... ஆனா, முடியல. நீங்க இதுக்கு ஒரு வழி இருந்தால் சொல்லுங்க...' என்று கூறியுள்ளார்.

உடனே, 'தம்பி... மாதம் முதல் தேதியில், வங்கிக்கும், நகைக்கடைக்கும் போ; அது சேமிப்பாகும். மாதக் கடைசியில், கோவிலுக்கும், ஓட்டலுக்கும் செல்; அது செலவை குறைக்கும்...' என்று கூறியுள்ளார்.

அதன்பின், இதை பின் பற்றியதன் விளைவு, தற்போது, வங்கியில் சேமிப்பு மற்றும் நகைகள் மட்டுமல்லாமல், வாடகை வீட்டில் இருந்தவர்கள், இன்று, சொந்த வீடு கட்டியுள்ளனர். நாமும் இதை பின்பற்றி, வாழ்வில் முன்னேறலாமே!

— தி.ராஜலட்சுமி, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us