தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன் எம்.ஜி.ஆர்., (4)

நான் ஏன் பிறந்தேன் எம்.ஜி.ஆர்., (4)

நான் ஏன் பிறந்தேன் எம்.ஜி.ஆர்., (4)


PUBLISHED ON : பிப் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக் கட்டுரை தொடர் ஜன., 17, 1917-2017

திருடாதே படத்திற்காக, இயக்குனர் ப.நீலகண்டன், சரோஜாதேவியை சிபாரிசு செய்த போது, அவரை முதன் முதலாக பார்த்த ஞாபகம் வந்தது.

தற்போது, விஜயா ஸ்டுடியோ என்று அழைக்கப்படும், ரேவதி ஸ்டுடியோவில், இயக்குனர், கே.சுப்பிரமணியத்தை பார்க்க சென்றிருந்தேன். அங்கே, கச்சதேவயானை என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு, நடந்து கொண்டிருந்தது.

அப்படத்தில், சரோஜாதேவி, தேவயானையாக நடித்துக் கொண்டிருந்தார். இடுப்பில், குடத்தை சுமந்தவாறு அவர் நடந்து வரும் காட்சி, படம் பிடிக்கப்பட்டது. கதாநாயகியாக நடிப்பதற்கு தேவையான தோற்றம் மற்றும் உடலமைப்பு அவருக்கு இருப்பதை அறிந்தேன்.

சரோஜாதேவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், இயக்குனர் சுப்பிரமணியம்.

அவரிடம், 'டான்ஸ் ஆட தெரியுமா?' என்று கேட்டேன்.

'ஓ... ஆடுவேனே...' என்றார்.

'தமிழ் பேச தெரியுமா' என்று கேட்டேன்.

'தெரியும்...' என்றார்.

அப்போது, சரியாக தமிழ் பேச வராது என்றாலும், ஆர்வத்தில் அப்படி சொன்னார்.

இந்த நினைவு வரவே, இயக்குனர் நீலகண்டனிடம், 'நீங்க சொன்ன சரோஜாதேவி, கச்சதேவயானை படத்தில் நடிக்கும் பெண் தானே...' என்று கேட்டேன். அவர், 'ஆமாம்...' என்றதும், உடனே, 'டெஸ்ட் எடுத்துப் பாருங்க...' என்றேன்.

'தமிழ் பேச தெரியாத பெண்ணை போட்டால், சங்கடமாக இருக்குமே...' என்றார், ஏ.எல்.சீனிவாசன்.

'இல்ல; முதல்ல டெஸ்ட் எடுத்துப் பாக்கலாம்; அப்புறம் முடிவு செய்யலாம்...' என்றேன்.

தொடர்ந்து இருவரும் கலந்து பேசியதன் விளைவாக, ஏ.எல்.சீனிவாசனை சம்மதிக்க வைத்தேன்.

அதன்பின், இயக்குனரும், கதை, உரையாடல் ஆசிரியரான, மா.லட்சுமணனுடன், சரோஜாதேவியை நடிக்க வைத்து, (டெஸ்ட்டுக்காக) ஒரு காட்சியை படம் எடுத்தனர்.

சில நாட்களுக்கு பின், ஏ.எல்.எஸ்.,சும், நீலகண்டனும் வந்தனர். 'சரோஜாதேவியை டெஸ்ட் எடுத்துப் பாத்ததில் எப்படியிருக்கு?' என்று கேட்டேன்.

'டயலாக்கு சரியா இல்ல... நாம கன்னடப் படம் எடுக்கறதானா அவரைப் போடலாம்...' என்றார், ஏ.எல்.சீனிவாசன்.

'பேச்சு கொச்சையாக இருந்தாலும், இயற்கையா இருக்கு; பழகப் பழக சரியாகிடும்...' என்றார், ப.நீலகண்டன்.

பின், நான் படத்தை போட்டு பார்த்தேன்; தமிழ்ப் பேச்சு கொச்சையாக தான் இருந்தது. ஆனால், தோற்றத்தில் மிரட்சி இருந்தாலும், அதில் கவர்ச்சியும் இருக்கவே செய்தது.

அதனால், ஏ.எல்.சீனிவாசனிடம், 'இப்பெண்ணையே கதாநாயகியாப் போடலாம்... நானும், நாடோடி மன்னன் படத்தில், ஒரு வேஷம் கொடுக்கப் போறேன்...' என்றேன்.

'நாடோடி மன்னனில் நீங்க போடறதா இருந்தா, நானும், என் படத்தில் ஒப்பந்தம் செய்றேன்...' என்றார், ஏ.எல்.எஸ்.,

'நான் எந்த தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும், அவங்க வந்து நடிக்கணும்; அதை மறக்காமல் குறிப்பிட்டு, ஒப்பந்தம் செய்யுங்க...' என்று, மீண்டும் நினைவுபடுத்தினேன்.

என் விருப்பத்திற்கிணங்க, நான் கூறிய நிபந்தனையோடு, சரோஜாதேவியை அப்படத்தில் ஒப்பந்தம் செய்தார், ஏ.எல்.எஸ்.,

துவக்கத்தில், நான் கால்ஷீட் கொடுத்த போதெல்லாம், வந்து நடித்தார், சரோஜாதேவி. இடையில், எனக்கு கால்முறிவு ஏற்பட, திருடாதே படத்தின் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.

கால் குணமான பின், இப்படத்தை முடிக்கும் முயற்சி துவங்கிய போது, பிரபல நடிகையாகியிருந்தார், சரோஜாதேவி.

நான் தயாரித்த, நாடோடி மன்னன் படம் வெளிவந்து, அதனாலும், அவருக்கு புகழ் ஏற்பட்டு, வேறு பல நடிகர்களுடன் நடிக்க கூடிய வாய்ப்பையும் அப்போது பெற்றிருந்தார்.

அதனால், திருடாதே படத்திற்கு, நான் கொடுக்கிற கால்ஷீட்டை அனுசரித்து, அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. மாறாக, அவர், எப்போது கால்ஷீட் கொடுத்தாரோ, அதை அனுசரித்து நான் கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

'நீங்கள் ஏன் அவருடைய கால்ஷீட்டை அனுசரித்து கொடுக்க வேண்டும்...' என்று நீங்கள் கேட்கலாம். காரணம், நான் கால்முறிவு குணமாகி நடிக்க வந்த போது, முதன்முதலாக நான் நடித்து வெளிவந்த ஒரு சமூகப்படம், குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. அதனால், 'எம்.ஜி.ராமச்சந்திரன் சமூகப்படத்தில் நடித்தால் ஓடாது...' என்றும், 'அவர் ராஜ உடை அணிந்து கத்தியை சுழற்றும் படங்களுக்கு தான் லாயக்கே தவிர, சமூக கதைகளில் நடிப்பதற்கு பொருத்தமானவரில்லை; மக்களுக்கும் பிடிக்கவில்லை...' என்ற முடிவு கட்டினர் சிலர்.

அவர்கள் கூற்றுக்கு ஏற்ப, அப்போது புதுப்படங்களிலும் நான் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் நாடகத்தில் நடிப்பதும் சுலபமில்லை. ஏனென்றால், கால் முறிவுக்கு முன், என்னை வைத்து படமெடுத்த பலருடைய படங்கள், படிப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அரை குறையாக இருந்தன. அவர்கள் ஏராளமான பணத்தை, அப்படங்களில் முடக்கியிருந்தனர்.

அதனால், அரைகுறையாக நின்று விட்ட என் படங்கள் விலையாக வேண்டுமானால், அவை உடனே முடிக்கப்பட வேண்டும். அதேசமயம், அப்படம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை, படத் தயாரிப்பாளர்களுக்கும், அப்பட வினியோகஸ்தர்களுக்கும் ஏற்பட வேண்டும்.

அப்படி அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால், நான் நடிக்கும் ஏதாவது ஒரு படம் உடனே வெளிவந்து, நன்றாக ஓடி, வெற்றி பெற வேண்டும். அப்போது தான், மீண்டும் என் படங்களுக்கு புத்துயிரும், புதுவாழ்வும் உண்டாக முடியும் என்ற கட்டாய நிலைமை எனக்கு ஏற்பட்டிருந்தது.

இதற்கிடையில், பரணி ஸ்டுடியோவில், பிரபல நடிகர் ஒருவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய பலர், என்னை பற்றி, பலவாறாக விமர்ச்சித்திருந்தனர். முக்கியமாக, கண்ணதாசன், 'எம்.ஜி.ஆர்., ஒத்துழைக்காத காரணத்தால், பட முதலாளிகள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்...' என்றும், என் படங்கள் வெற்றி பெறுவதில்லை; என்னை நம்பி பணம் போட்டவர்கள், நடுத்தெருவில், பிச்சைக்காரர்களைப் போல அலைகின்றனர்; என்னால், தமிழ் சினிமாவிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் என்றெல்லாம் பேசியிருந்தார்.

இப்படி அவர்கள் பேசியவற்றை பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டிருந்தனர். இதைப் படித்த என் கட்சி நண்பர்களும் கூட, 'ஏன் இப்படி...' என்று கேட்கிற அளவுக்கு, எனக்கு எதிரான நிலைமை உருவாக்கப்பட்டிருந்தது.

எனவே, என் கலைத்துறை வாழ்வுக்கு ஏற்பட்டிருந்த இந்த பயங்கர பிரச்னைக்கு முடிவு காண வேண்டிய கட்டாயத்தில் நானிருந்தேன்.

'நான் சமூகப்படத்தில் நடிக்க தகுதியுடையவனா, இல்லையா?' என்ற கேள்விக்கு, விடை கிடைக்க வேண்டும்.

திருடாதே படம், நல்ல சமூக கதையம்சம் கொண்டது. அப்படம் உடனடியாக வெளிவந்தால், என் எதிர்காலத்திற்கு சவால் விடுத்த, இந்த அபாய அறிவிப்பு குரல்கள் எல்லாம் அடங்கி விடும். அதனால், அப்படம் உடனடியாக வெளிவர வேண்டும் என்பதோடு, வெற்றியடைய வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது.

சரோஜாதேவிக்கோ, இப்படம் வெளிவந்து தான், அவருடைய கலைத்துறையை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை அப்போதில்லை.

எனவே, எனக்கு யார் என்ன நிபந்தனையிட்டாலும், அதை ஏற்று, நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கட்டுப்பட வேண்டியவனானேன்.

சரோஜாதேவியின் நேரத்திற்கு ஏற்றவாறு, என்னை தயார் செய்து, நடிக்கலானேன். ஏனென்றால், அவர் வேறு படங்களுக்கு, முன்பே கால்ஷீட் கொடுத்திருந்தார். அக்கால்ஷீட்டுகளை விலக்கி, இப்படத்திற்கு வந்து நடிக்க, அவரால் இயலாது.

எனவே, நான் ஸ்டுடியோவிற்கு சென்று மேக் - அப் போட்டு காத்திருப்பேன்; சரோஜாதேவி வேறு படத்தில் காலை, 9:00 மணியிலிருந்து மாலை, 5:00 மணி வரை வேலை செய்து, பின், இப்படத்தில் நடிக்க வருவார்.

மாலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை படப்பிடிப்பு நடக்கும். நானும், அவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை, முதலில் படமெடுத்து, அவரை அனுப்பி விடுவர். அதற்கு மேல், என் தனி ஷாட்டுகளை படமெடுப்பர்.

இப்படி, பல நாட்கள் காத்திருந்து வேலை செய்தபின் தான், அப்படம் முடிந்தது.

— தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us