தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனமிருந்தால் போதும்!

தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறேன். எங்கள் நிறுவன ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக, புதிதாக வேன் ஒன்று வாங்கியிருந்தார், முதலாளி. ஆர்.டி.ஓ., அலுவலக சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், வண்டியை அவரது வீட்டிற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார், முதலாளி.

வண்டியை கொண்டு சென்ற போது, அவரது குடும்பத்தினர் எல்லாரும் தயாராக இருக்க, அவர்களை ஏற்றி, முதலாளி கூறிய இடத்திற்கு வண்டியை செலுத்தினேன்; அது ஒரு ஆதரவற்றோர் இல்லம்! இல்லத்திலிருந்தவர்களை வேனில் ஏற்றி, அருகில் உள்ள புகழ் பெற்ற கோவிலுக்கு சென்று, வேனுக்கு பூஜை செய்து, இல்லத்தினருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வந்திருந்த அனைவருக்கும், ஓட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார், முதலாளி. பின், அருகிலிருந்த பூங்காவிற்கு சென்று ஓய்வெடுத்து, சில விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. மாலையில், அவர்களை இல்லத்தில் இறக்கி விட்டு, விடைபெற்றோம்.

திரும்பி வரும் போது, 'ஆண்டு முழுவதும் நாமும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்கோம்; அவங்களும் இல்லத்துல முடங்கி இருக்காங்க. இப்ப, அவங்களுக்கு புத்துணர்வு குடுத்த மாதிரி ஆயிடுச்சு; நமக்கும் ஆத்ம திருப்தி கிடைச்சாப்ல இருக்கு. இதைவிட, என்னய்யா சாதிச்சிட போறோம்...' என்றார் முதலாளி. அத்துடன், 'அவசரத்திற்கு எப்போ வேன் வேணும்ன்னாலும் கேளுங்கன்னு சொல்லியிருக்கேன்; முடிஞ்ச வரைக்கும் நேரம் ஒதுக்கி, அவங்களுக்கும் உதவி செய்வோம்...' என்றார்.

முதல், 'டிரிப்'பே மனநிறைவை தந்தது. இதை, சக ஓட்டுனர்களிடம் சொன்ன போது, அவர்களும் இதுபோன்ற சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தனர்.

மனமிருந்தால் போதும்... சேவை தானாகவே நடக்கும் என்பதை, கண்கூடாக கண்டேன்.

—பா.போத்தி, மதுரை.

தனிமை துயர் நீங்க...

என் வயது, 77; சிறு வயதில், பல கஷ்டங்களை அனுபவித்து, முன்னுக்கு வந்தவள். கணவர் இறந்து விட, என் ஒரே மகனின் குடும்பத்துடன் வசிக்கிறேன். வீட்டில், மருமகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது மற்றும் வீட்டிற்கு வரும் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளப் பத்திரிகைகளை படிப்பது என இருந்தாலும், தனிமை என்னை வாட்டியது. கூடவே, மூட்டு வலி; தனிமையை விரட்ட, ஏதாவது வேலை செய்ய விரும்பினேன்; அதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

ஒருநாள், பக்கத்து வீட்டு பெண்மணி என்னிடம் வந்து, 'ஆங்கிலம் பேச கற்று தர முடியுமா...' என்று கேட்க, நான் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டேன்.

இரண்டு மாதத்திலேயே, அவள் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆரம்பித்து, எனக்கு நன்றி கூறி சென்றாள்.

மற்றொரு நாள், என் பேரனுடைய வகுப்பு தோழனுடைய அம்மா, வேறு மாநிலத்தை சேர்ந்தவள்; அவளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது; பேச தான் தெரியும். என்னிடம், வந்து, தமிழ் கற்று கொடுக்க சொல்ல, நான் அதையும் உற்சாகத்துடன் செய்தேன். அவளும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டாள். மேலும், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருத்தி, பள்ளியில் நடக்கும் போட்டி ஒன்றுக்காக, பகவத்கீதையில், குறிப்பிட்ட நான்கு ஸ்லோகங்களை, அட்சர சுத்தமாக, மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும் என்று கூறி, அதை கற்றுத் தர கூறினாள்.

நானும் சொல்லி கொடுத்தேன்; போட்டியில் முதல் பரிசு வாங்கிய அந்த சிறுமியைக் காட்டிலும், நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு, இதுபோன்ற சேவை செய்ய ஆரம்பித்ததிலிருந்து, நேரம் போவதே தெரியவில்லை; மனமும் நிம்மதியாக உள்ளது.

என்னை போன்ற முதியோர், இதுபோன்ற சேவையில் ஈடுபட்டு, தனிமையை போக்கி கொள்ளலாமே!

— சாவித்திரி, சென்னை.

பிளாஸ்டிக்குக்கு மாற்று!

இப்போதெல்லாம் ஓட்டல்களில் லஞ்ச் பார்சல் வாங்கினோம் என்றால், சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், வத்தல் குழம்பு, ரசம் மற்றும் மோர் என, தனித்தனி பிளாஸ்டிக் கவர்கள் கட்டி, இவற்றை எல்லாம் மொத்தமாக ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரில் போட்டு, 50 கிராம் பிளாஸ்டிக்கை நமக்கு அள்ளித் தருகின்றனர்.

இதைத் தவிர்க்க, பொது மக்களே, ஓட்டல்களுக்கு டிபன் மற்றும் லஞ்ச் வாங்கச் சென்றால், தனித்தனி எவர்சில்வர் பாத்திரங்களை ஒயர் கூடையில் எடுத்துச் செல்வது நலம். இதை ஓட்டல் முதலாளிகளும் வலியுறுத்துவதன் மூலம், பிளாஸ்டிக் கழிவு தடுக்கப்படும். செய்வீர்களா?

எஸ்.ஆர்.சேகர், கிருஷ்ணகிரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us