PUBLISHED ON : மார் 19, 2017

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.
குஸ்தி போட துணியை வரிந்து கட்டியபடி, நானும், உள் அரை நிஜாருடன் கலைவாணரும் நிற்க, 'உங்களுக்கு குஸ்தி தெரியுமா... எதிரி கைக்கு, லங்கோடு பிடிபட்டுட்டா ஆபத்துங்கறது, குஸ்தி சண்டை போடுறவங்க எல்லாருக்கும் தெரிந்த விஷயம்; நீங்க என்னடான்னா, தொளதொளன்னு, லுாசா நிஜார் போட்டிருக்கீங்களே...' என்றேன், கேலியாக!
அதற்கு அவர், 'போலே... பெரிய பயில்வான்... கண்டுட்டான்; குஸ்தி எனக்கு தெரியும், தெரியாது அதப்பத்தி உனக்கென்ன... உனக்கு, என்னை கீழே தள்ளணும்; அவ்வளவு தானே... வா வா...' என்றார்.
தொடையைத் தட்டியபடி, எதிரெதிராக நின்றோம். இருவரும் கை கொடுத்துக் கொண்டோம். அதன்பின், ஒரு வினாடி கூட என்னால் பொறுக்க முடியவில்லை. கை கொடுத்த உடனேயே, அவரை தூக்கியடித்தேன். அவர், கீழே விழுந்து விட்டார்.
நான் எண்ணியதை செய்து விட்ட மகிழ்ச்சியில், அடுத்து என்ன நடக்கும் என்பதையே சிந்திக்க மறந்து விட்டேன்.
அவரை தூக்கிப் போட்டதுடன் என் வேலை முடிந்து விட்டதாக நினைத்தேனோ, அந்த வினாடி அவர் தன் வேலையை ஆரம்பித்தார்.
நான் தூக்கியடித்த வேகத்தில் கீழே விழுந்தவர், அதே வேகத்தில் என்னை தூக்கியடித்தார்.
நான் மண்ணில் மல்லாந்து கிடந்தேன்; அவர், என் நெஞ்சின் மீது சாய்ந்து படுத்திருந்தார்.
நான் நிதானிப்பதற்கே, சிறிது நேரம் பிடித்தது.
'ஓரளவு குஸ்தி தெரிந்த நான் எப்படி ஏமாந்து கீழே விழுந்தேன்... அவர் போட்ட அந்த பிடி ஒன்றும் புதுமையானதில்லையே... மிக மிகச் சாதாரணமான பிடிதானே... அப்படியிருந்தும், நான் எப்படி தோல்வி அடைந்தேன்...' என்று எனக்குள் பல்வேறு எண்ணங்கள்.
சரி... நான் தான் ஏமாந்து விட்டேன்; அவராவது பேசாமலிருக்கக் கூடாதா... நானே, எழுந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல், திகைத்துப் போய், மல்லாந்து கிடந்த போது, 'என்ன ராமச்சந்திரா... வானத்தில நட்சத்திரம் கண்டோ...' என்று கேட்டார், கேலியாக!
நான் நட்சத்திரத்தையா கண்டேன்... மானத்தை, வானத்திலே பறக்க விட்டு, அது எங்கே என்று தேடிக் கொண்டல்லவா படுத்திருந்தேன்.
சிறிது நேரத்திற்குள் தெளிவடைந்த நான், படுமோசமான தோல்வியை சந்தித்து விட்டோமே என்று, துடித்துப் போனேன்.
'பெரிய பயில்வான்... பிடி போடுறாரு பிடி...' என்று, அவர் மற்றவரிடம் கூறிய போது, அவமானத்தால், என் மனம் தவித்தது.
'நான் ஒரு பிடி பிடிச்சேன்... அவ்வளவு தான், மண்ணைக் கவ்விட்டாரு...' என்று அவர் பிறரிடம் கேலி பேச, என் ரத்த நாளங்கள் முறுக்கேறி, முகம் சிவந்தது. வேகமாக எழுந்து, கலைவாணர் அருகில் சென்று அவரது கையைப் பிடித்தேன். 'உண்மையா உங்களுக்கு ரோஷம் இருந்தா, இன்னொரு முறை சண்டைக்கு வாங்க...' என்று அழைத்தேன்.
நான், கலைவாணரின் கையை, என் வலது கையால் இறுகப் பிடித்தபடி, சண்டைக்கு அழைத்த போது, அவர் சிறிதும் பதற்றப்படாமல், 'வா...' என்று, 'கோதா'வின் நடுவில் வந்து நின்றார்.
என் முழு பலத்தையும், ஆத்திரத்தையும் காட்டி, அவரை தோல்வி அடையச் செய்யும் எண்ணத்தோடு, வெறி கொண்டவனாக நின்றேன்.
என் ஒரே நோக்கம், அவரை கீழே தள்ளி படுக்க வைப்பது!
வெறியோடு அவர் மீது பாய்ந்தேன். யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென்று கீழே உட்கார்ந்து விட்டார், கலைவாணர்.
நான் பக்கத்தில் போய், 'என்னண்ணே உக்காந்துட்டீங்க... எழுந்திருங்க; மானம், ரோஷம் ஏதாவது இருந்தா, எங்கிட்டே சண்டை போடுங்க...' என்றேன்.
அவர் சிரித்தபடி, 'எனக்கு மானம், ரோஷம் ஒண்ணும் இல்லன்னு ஒத்துக்கிறேன்; அதோட, இப்போ, ரெண்டாவது சண்டையிலே, தோத்துட்டேன்னும் ஏத்துக்கிறேன். ஆனா, நீ எண்ணின நட்சத்திரம் எவ்வளவு... அதை முதல்ல சொல்லு...' என்றார்.
அவர் கோபத்துடனா அதைச் சொன்னார். பற்கள் எல்லாம் தெரிய, சிரிக்கச் சிரிக்க சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு அருகிலிருந்த அத்தனை பேரும் சிரித்தனர். ஏன், என் அண்ணனும் சிரித்தார்; அவர், கலைவாணரின் நெருங்கிய நண்பராயிற்றே!
நானோ விடாமல் கலைவாணரின் கையைப் பிடித்து, அப்படியும், இப்படியுமாக இழுத்தேன். எப்படியாவது, அவருக்கு கோபத்தை உண்டாக்கி, என்னோடு சண்டைக்கு வரச் செய்ய வேண்டும்; அவரை கீழே தூக்கி எறிய வேண்டும்... இதுதான் என் எண்ணம்!
நாய், மண்ணுக்குள் புதைந்திருக்கும் துணியை, கடித்துக் குதறி இழுக்குமே... அதுபோல, அவரது கையைப் பிடித்து இழுத்தேன். அப்போதும், அவர் ஆத்திரப்படவே இல்லை.
எழுந்திருப்பார்; தயாராக நிற்பார்; நானும் பாயத் தயாராவேன்; அப்படியே உட்கார்ந்து விடுவார்.
ஒரு முறை, இரு முறை அல்ல; ஏறத்தாழ, 10, 15 முறை இப்படியே நடந்தது. எனக்கோ தாங்க முடியவில்லை. கடைசியில், சோர்வடைந்தவனாக, 'போங்கண்ணே... உங்களுக்கு தைரியமில்ல...' என்றேன்.
அவர், 'வா வா... குளிச்சிட்டு சாப்பிடலாம்...' என்று கூறி, கிணற்றடிக்கு கூட்டிப் போனார்.
அவர் மீது இருந்த ஆத்திரத்தை எல்லாம், வாளி வாளியாக, தண்ணீரை இறைத்து, உடம்பில் கொட்டி, தீர்த்துக் கொண்டேன்.
தலையைத் துவட்டும் போது, கலைவாணர் என்னைப் பார்த்து, 'பலமிருந்தும் பயனில்லே; அறிவிருந்தும் பயனில்லே. அறிவையும், பலத்தையும் எந்த இடத்துல யாருகிட்டே, எப்படி பயன்படுத்துறதுங்கறதுல தான் வெற்றியிருக்கு. எதிரியை, எளிதா நினைச்சுடக் கூடாது; நம்மை விட பலவீனமானவன்னு எண்ணவே கூடாது. ஏதாவது, ஒரு திறமை, சக்தி அவன் கிட்டேயும் இருக்குமுன்னு நினைச்சு, எச்சரிக்கையா இருந்தா தான், வெற்றி அடையாவிட்டாலும்,
தோல்வி அடையாமலாவது இருக்கலாம்...' என்றார்.
நான், அவரிடம் தெரிந்து கொண்ட பாடம் இது.
ஆனால், எவ்வளவு உயர்ந்த கருத்தானாலும், உலகத்தையே உய்விக்கும் ஆற்றலை அது பெற்றிருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள, அவர்கள் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்.
அவ்வாறு, நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், அவர்கள் எத்தனை தான் உயர்ந்த கருத்தை, உபதேசத்தை, கரடியாகக் கத்தி ஓதினாலும், அது, காட்டில் எரிந்த நிலவாக, செவிடன் காதில் ஊதிய சங்காகவே பயனற்று போகும். கலைவாணர் எனக்குச் செய்த இந்த உபதேசமும் துவக்கத்தில் அவ்வாறே ஆனது. பின், அவரிடம், எனக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின், அவர் சொன்னதை நான் கேட்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டது.
சுபாஷ் சந்திரபோஸ் வீதியில், 147ம் எண் வீட்டில் தங்கியிருந்தபோது தான், முதன் முதலில், கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானேன்.
இவ்வீட்டிற்கு அருகில், சி.டி.ராஜகாந்தம் மற்றும் காளி என்.ரத்தினமும் வசித்து வந்தனர்.
நேரங்கிடைக்கும் போதெல்லாம், அவர்களைப் போய் பார்ப்பது வழக்கம்.
ஒருநாள், காளி.என்.ரத்தினத்தை சந்திக்க சென்ற போது, 'ஏண்டா... நந்தலால் டைரக் ஷன்லே நடிக்க போறயாமே...' என்று கேட்டார்.
'ஆமாண்ணே... ஹீரோ வேஷம்...' என்றேன்.
'ஜாக்கிரதையா நடி. அந்த ஆள், நடிக்கத் தெரிஞ்சவன்; நல்லா நடிப்பு சொல்லிக் கொடுப்பான். கேமரா வைக்கிறதெல்லாம் பிரமாதமா வைப்பான்... ஆனா, முசுடு; சொன்னபடி செய்யலன்னா கோபம் வந்துரும். அப்புறம், 'ஏ ஜங்கிலி வாலா'ன்னு (காட்டுப் பயலே) தான் கூப்பிடுவான்; பாத்து சரியா நடி...' என்றார்.
ரத்தினம், இப்படி யாரைப் பற்றியும், அவசரப்பட்டு அபிப்பிராயம் சொன்னது கிடையாது.
அவர் சொன்ன வார்த்தை, என் உள்ளத்தில் எதிரொலித்தபடி இருந்தது. அதன் விளைவாக, இயக்குனர் நந்தலால் என்றால், 'முன்கோபி; ஆத்திரக்காரர். யாரையும் எளிதாக, 'காட்டுப் பயலே' என்று சொல்லி விடுவார்...' என்று, அவரைப் பற்றி எனக்குள் ஒரு அபிப்ராயம் உருவாகியிருந்தது. அதனால், அவர் குறை சொல்வதற்கு இடமளிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
— தொடரும்.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை.
