தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகி ஒருவர் எழுதிய விழிப்புணர்வு கடிதம் இது. பெண்கள், குறிப்பாக, 'டீன் -ஏஜ்' யுவதிகள் அவசியம் படித்து அறிய வேண்டிய விஷயம் இது:

அன்புள்ள அந்துமணிக்கு —

அன்பான கணவர், அழகான இரு குழந்தைகள் என அமைதியான குடும்பத்தின் இல்லத்தரசி நான். அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவள். எனக்கு நிறைய தோழிகளும், நண்பர்களும் உண்டு. அனைவரும் என்னிடம் சொல்வது, 'ஒரு முறை உன்னிடம் பேசினால் எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது; அவ்வளவு சுவாரசியமாகப் பேசுகிறாய்...' என்பர்.

தினமும் வெளியில் செல்லும் போது, எதிர்படும் அனைவரும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்; ஆண், பெண் பேதமின்றி அனைவரிடமும் பழக வேண்டும் என்றும் நினைப்பேன். யாராவது சிரித்தாலோ, பேசினாலோ உடனே பதிலுக்கு நானும் சிரித்து, பேசி விடுவேன்; அவர்களின் பேச்சு சரியில்லை என்றாலும் விட்டு விலகாமல், அதை சரி செய்து, அவர்களின் தவறை உணர வைப்பேன்.

சரி... விஷயத்திற்கு வருகிறேன்... சமீபத்தில் ஒருவனை சந்தித்தேன். முதலில் நன்றாக பேசினான். எல்லாரையும் போல், 'நீங்க ரொம்ப, 'இன்ட்ரஸ்டிங்'கா பேசுறீங்க... நாம இனிமே நண்பர்களாக இருப்போம்'ன்னு சொன்னான்; சரின்னு அன்று முதல் (ஒரு மாத காலமாகத்தான்) போனில் அடிக்கடி பேசுவோம்.

ஒரு நாள் பேசும்போது, அவன், தனக்கு திருமணமாகி ஓராண்டு ஆகப் போகிறது என்று கூறி, தன் மனைவி பற்றி நிறைய (ஒரு ஆண்டு வாழ்ந்த மாதிரியே) சொன்னான். பிறகு ஒரு நாள், தான் கூறியது பொய் என்றும், 'இன்னும் திருமணமாகவில்லை; சும்மா விளையாட்டிற்காக அவ்வாறு கூறினேன்...' என்று சொன்னான். எனக்கு ஒரே குழப்பம்; எதற்காக இப்படி மாற்றி மாற்றி பேசுகிறான் என்று!

திருமணமானவர்கள் கூட மனைவியை பற்றி அந்தளவிற்கு பேச முடியாது... அப்படி பேசினான்; வந்த பண்டிகை நாட்களைக்கூட தலைப் பண்டிகையாக வர்ணித்தான். அப்புறம் தான் அனைத்தும் பொய் என்று அவனே கூறி விட்டானே... ஆனால், உண்மை எதுவென்று இன்னும் எனக்கு புரியவில்லை.

என் நெருங்கிய தோழிகள் இருவரிடம் இதைப் பற்றி கூறினேன். உடனே அவர்கள், 'அவன் பெரிய பிராடு; அவன் சகவாசமே வேணாம்...' என்று, 'அட்வைஸ்' செய்தனர். ஆனால், நான் மீண்டும் பேசினேன்; ஏனென்றால், அவன் பேசியது அனைத்தும் பெண்களைப் பற்றி!

பெண்களைப் பற்றிய அவன் எண்ணத்தை அறியவே தொடர்ந்து பேசினேன்.

மெதுவாக இதைப் பற்றி அவனிடமே கேட்டேன். அவன் சொன்ன விஷயம், இப்படியும் பெண்கள் நாட்டில் இருக்கின்றனரா, ஏன் இப்படி சமுதாயத்தை சீரழிக்கின்றனர்... என்ன கேடு கெட்ட ஜென்மம் என்று, பெண்களைப் பார்த்து காறி துப்பும்படி எண்ண செய்து விட்டது.

ஒரு பெண், கல்லூரியில் படிப்பவளாம்... 'ஒரு புத்தகம் வேண்டும்; வாங்கித் தா...' என்று இவனிடம் கேட்டாளாம்... 'வாங்கிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவாய்...' என்று இவன் கேட்டதற்கு, 'உனக்கு என்ன வேண்டும்...' என்று, அவள் திருப்பி கேட்டாளாம். 'நீ என்ன கொடுத்தாலும் சந்தோஷம்...' என்று இவன் சொல்ல, 'நான் என்னையே தருகிறேன்... எடுத்துக் கொள்...' என்றாளாம்!

புத்தகம் வேண்டுமானால், பெத்தவங்களை கேட்க வேண்டியது தானே... பெண்களே இப்படி கேவலமாக நடந்து கொண்டால், இவனைப் போன்றவர்களை எப்படி குறை சொல்வது? தவறு பெண்களிடம் தானே உள்ளது; தவறின் பிறப்பிடமே பெண்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

மேலும் சொல்கிறான்... 'பெண்கள் என்னை கண்டால் விடுவதேயில்லை...' என்று!

நிறைய பெற்றோர், பெண்களை ஏன் மேலே படிக்க அனுமதிப்பதில்லை என்று இப்போது தான் புரிகிறது.

இதே போல், அவன், அருகில் உள்ள மாநகருக்கு சென்றால், பல பெண்களுடன் சேர்ந்து சினிமா, ஓட்டல் என்று சுற்றிவிட்டு, ஏதாவது ஒரு பெண்ணுடன் கெஸ்ட் ஹவுசில் தங்கி, காலையில் அனுப்பி விடுவானாம்.

எத்தனையோ பெண்கள் அவனிடமே சொல்கின்றனராம்... 'நீ ஒரு தடவையாவது தொட மாட்டியான்னு ஏங்கறேண்டா நான்...' என்று!

இது உண்மையோ, பொய்யோ தெரியாது. இவன், அவனாகவே அவனை வாழ்த்திக்கிறான். அப்படி ஒன்றும் பெரிய அழகனல்ல; அழகும், கம்பீரமும் உள்ள எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன், பழகியிருக்கிறேன்; ஆனால், யாரும் இந்தளவு பேசியதில்லை, அதுவும் பெண்களைப் பற்றி!

'ஆயிரம் பெண்களைப் பார்த்து பேசி, அதில் இரண்டை மட்டும் செலக்ட் செய்து தொடுவேன்...' என்கிறான்.

இன்னும் பெண்களைப் பற்றி நிறைய சொன்னான். என்ன சொன்னா சந்தோஷப் படுவாங்க, எங்க தட்டுனா விழுவாங்க, எப்படி கவர் பண்றது, எப்படி காய் நகத்தறது எல்லாமே அத்துப்படிங்கறான்.

இவன் இவ்வளவு தெரிஞ்சுக் கிட்டதுக்கு காரணம், பெண்கள் இவன்கிட்ட நடந்துக்கிட்ட முறைதானே! அவனே சொல்றான்... 'பெண்களைப் பார்த்து, 'வர்றியா?'ன்னு ஆண்கள் கேட்ட காலம் போயி, இப்ப நம்மள பார்த்து, 'கண்ணு வர்றியா?'ன்னு பெண்கள் கேக்கறாங்க. அதனால், பெரும்பாலும் கார் கண்ணாடிய கீழே இறக்கி விடறதேயில்லை'ங்கறான்.

சமுதாயத்தில் இவனைப் போல் இன்னும் நிறைய ஆண்கள் இருப்பர். நமக்கு அனைவரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி ஒரு சிலர் இருந்தாலே போதுமே... இவர்களை திருத்த வேண்டுமானால், முதலில் படிக்கும் பெண்கள் திருந்த வேண்டும்; நம்மை நம்பி உள்ள பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும். நம்மை மணக்கப் போகும் வாழ்க்கைத் துணைக்கு பரிசுத்தமானவளாக இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும்.

பெண்கள் நெருப்பு, தொட்டால் பொசுக்கி விடும் என்று இவனைப் போன்றோர் அஞ்சி ஒதுங்க வேண்டும்.

இந்த இரண்டுங்கெட்டான் பருவத்தில் யார் என்ன சொன்னாலும் பெண்களுக்குப் பிடிக்காது; 'பெரிய அட்வைஸ்... யார் கேட்டா இதையெல்லாம்...' என்று அலட்சியப்படுத்துவர். ஆனால், நாளை நாம் தாயாகி, நம் பிள்ளை வழி தவறிப் போகப் பார்த்தால், அப்போது இந்த நிலை புரியும்; 'அன்று நம் பெற்றோரும் இப்படித்தானே தவித்திருப்பர்...' என்று!

ஆண்களை நான் குறை கூறவுமில்லை, சாடவுமில்லை. பெண்களை, பெண்களே கேவலப்படுத்திக் கொள்கின்றனர் என்று தான் கூறுகிறேன். எனக்குத் தெரிந்தவரை ஆண்கள் பெருந்தன்மையுடனும், மிகுந்த மரியாதையுடனும் பெண்களிடம் நடந்து கொள்கின்றனர்; பெண்கள் தான் அவர்களை சீண்டி விடுகின்றனர் என்பதை, நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

நான், உங்களுக்கு எழுதியுள்ள இவ்விஷயத்தை, நீங்கள் உங்கள் பேனாவில் மையூற்றி, இந்த கருவுக்கு உயிரூற்றி, உண்மைக்கு மெருகேற்றி எழுத வேண்டும். இது போன்ற ஆண்களின் நிஜமான முகத்தை பெண்கள் அறிந்து கொள்ளவும், பெண்கள் பெண்களாக இருந்து, நாட்டின் கண்களாக திகழ எழுதுங்கள்!

— டீன் - ஏஜ் பெண்களே... இரண்டு குழந்தைகளின் தாய் சொன்னதை படித்தீர்கள் தானே... வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விடாமல் இருக்க, இந்த வாசகி சொன்ன அனுபவம் உதவும் தானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us