PUBLISHED ON : மார் 26, 2017

சுயத்தை தொலைத்த தோழி!
சில ஆண்டுகளுக்கு பின், என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். அவள் புகுந்த வீடு, நல்ல வசதியானது. அவள் கணவர், சொந்த தொழில் செய்கிறார்; நல்ல சம்பாத்தியம். எல்லா வசதிகளோடு அவள் வாழ்வதை பார்த்து, மிக மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால், அவளுடன் பேசும் போது தான் தெரிந்தது, அவள் தன் சுயத்தை தொலைத்தவள் என்பது! படிக்கும் போதே, கைவினை பொருட்கள் செய்வது, தையற்கலை என்று பல்வேறு திறமைகள் அவளுக்கு உண்டு. புதுப் புது விஷயங்களை கற்கும் ஆர்வம் கொண்டவள்; அது சம்பந்தபட்ட வகுப்புகளுக்கும் செல்வாள். தற்போது, அவள் கணவன், 'நமக்கு இருக்கற வசதிக்கு, நீ இதையெல்லாம் செய்து சம்பாதித்து தான் ஆகணும்ன்னு இல்ல...' என்று கூறி, எதற்கும் அனுப்புவதில்லையாம்.
சினிமாவுக்கு போக வேண்டும் என்றால் கூட, நேரமில்லை என்று கூறி, 'வீட்டில, 'சிடி'யில பாரு...' என்கிறாராம்.
'வெளி உலகத்தை பார்த்தே, ரொம்ப நாளாச்சு; வீட்டுக்குள்ளேயே இருப்பது பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு...' என்று கண் கலங்கியவளை, எப்படி தேற்றுவது என்று தெரியாமல் விழித்தேன்.
கணவன்மார்களே... உங்கள் மனைவியருக்கும் சில ஆசைகள், ஆர்வங்கள் உண்டு என்பதை புரிந்து, அவளுடைய ஆர்வம் மற்றும் தனித் திறமைக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள். பணம் சம்பாதிக்க மட்டுமே இது போன்ற வகுப்புகளுக்கு பெண்கள் போவதில்லை. அதில் ஒரு மன திருப்தியும், சந்தோஷமும் கிடைப்பதாலேயே செல்கின்றனர். எனவே, அவளை சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அதே மிகழ்ச்சியை, அவள் வீட்டிற்குள்ளும் பரவச் செய்வாள்.
சிந்திப்பீரா கணவர்மார்களே!
— உமா செந்தில், கோவை.
இதெல்லாம் ஒரு பெருமையா?
சமீபத்தில், டீ கடை ஒன்றில் நண்பர்களுடன், தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அருகே, நண்பர் குழாம் ஒன்று, டீ குடித்தபடி நின்றிருந்தனர். அதில், ஒரு இளைஞர், மற்றவரை பேச விடாமல், தன்னைப் பற்றியே பெருமை பேசியபடி இருந்தார்.
பழைய பைக்குகளை வாங்கி, விற்கும் தரகர் தொழில் செய்யும் அவர், அத்தொழிலில் உள்ள பொய் புரட்டுகளையும், உதவாத வண்டியை, யாரோ ஒருவர் தலையில் கட்டியதை பற்றியும், பெருமையாக அடுக்கினார்.
முக்கியமாக, அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் செயின், மணிக்கட்டில் கட்டியிருந்த பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் போன்ற நகையெல்லாம், தவணை முறையில் வாங்கியதாகவும், தனக்கு ரெண்டு லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் பீற்றினார்.
எங்களைப் போலவே, இதைக் கேட்டு கொண்டிருந்த முதியவர் ஒருவர், 'தம்பி... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... இந்த, 'காம்ப்ளக்ஸ்' என்னோடது தான்; நான், கிராமத்தில் இருந்து, இங்கே வரும் போது, கையில பத்து ரூபாய் கூட கிடையாது. நாலு, 'டிப்போ'விலே, கமிஷனுக்கு பால் வாங்கி, கடைகளுக்கு ஊத்தினேன்; அதோட, டீக்கடையும் நடத்தினேன். பின், படிப்படியா அதை ஓட்டலாக மாத்தி, நேர்மையா சம்பாதிச்சேன்... என்னோட, ஆறு பிள்ளைங்களையும், கரை சேர்த்துட்டு, அவங்களுக்கு நிலையான சொத்தா, இந்த கடைகளையும் கட்டி, வாடகைக்கு விட்டுருக்கேன். எல்லாமே, உழைப்பு மற்றும் சேமிப்பு தான். ஒரு ரூபாய் கூட கடன் வாங்கல... நீ என்னடானா, தொழில்ல ஏமாத்தினதையும், கடன் பட்டதையும் பெருமையா சொல்லிட்டு இருக்கே...' என்றார்.
இதைக் கேட்டதும், அந்நபருக்கு முகத்தில் ஈயாடவில்லை. அசடு வழிந்தபடி, தன் இருசக்கர வண்டியை கிளப்பி சென்று விட்டார். ஆக்கப்பூர்வமான விஷயங்களை, மற்றவரிடம் பேசினால், அதனால், நன்மை ஏற்படும். மாறாக, வீண் பெருமை, வெட்டி பந்தா பேசுவது, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதோடு, மற்றவர்களையும் மறைமுகமாக கெடுக்கும் செயல் என்பதை இவரைப் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
— பி.சதீஷ்குமார், மதுரை.
பசுமையான பரிசு!
நாற்பது ஆண்டுகளுக்கு முன், பள்ளியில் ஒன்றாக படித்த, 35 மாணவிகளும் ஓர் இனிய நாளில் எங்கள் சந்திப்பை வைத்துக் கொண்டோம். அப்போது, பள்ளி காலத்து நிகழ்வுகள், குறும்புகள் மற்றும் தற்போதைய வாழ்க்கை என, பல விஷயங்களை பேசி மகிழ்ந்தோம். கிளம்பும் போது, அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி, ஆச்சரியப்படுத்தினாள், ஒரு தோழி.
மரம் வளர்க்க இட வசதி இல்லாதவர்களுக்கு, தொட்டியில் வளர்க்கும் மூலிகை மற்றும் பூச்செடிகளை வழங்கி, அவற்றை பராமரிக்கும் முறைகளையும் விளக்கினாள். பசுமையான நினைவுகளோடு, பசுமை புரட்சி செய்த தோழியையும், மனதார பாராட்டி, விடைபெற்றோம்.
ஒரு மாதம் ஆகிவிட்டது. எங்கள் நட்பை போல், வேர் பிடித்து செடிகள் வளர ஆரம்பித்துள்ளது!
— என்.சாந்தினி, மதுரை.
