PUBLISHED ON : மார் 26, 2017

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு வெளியாகும் கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.
படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், எனக்கு, உடைகளை போட்டுப் பார்த்தனர். அப்போது, அருகில் நின்று கவனித்த இயக்குனர் நந்தலாலைப் பார்த்தேன். கழுத்து வலிக்கும் அளவுக்கு தலை நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்தார்.
உடைகளுடன் நின்ற என்னை பார்த்த அவர், என்னிடம் ஏதும் கூறவில்லை. மற்றவர்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார்.
உன்னிப்பாக கவனித்தேன்; அவர், 'ஜங்கிலி வாலா' என்று சொல்கிறாரோ என்று!
நல்லவேளை... அப்படி எதுவும் சொல்லவில்லை. 'குதிரை ஓட்டுவாரா...' என்று தான் கேட்டார்.
'ஓ... ஓட்டுவாரே...' என்றார் அருகிலிருந்த ஒருவர். மற்றொருவர், 'குதிரை சவாரி பயிற்சி பெற்றிருக்காரு...' என்றார்.
'எங்கே, குதிரையை கொண்டு வரச் சொல்லுங்க; ஓட்டட்டும், பாக்கலாம்...' என்று சொல்லியவாறு வெளியே போனார்.
நான் அணிந்திருந்த உடைகளை கழற்றி, எப்போதும் அணியும், நான்கு முழ கதர் வேட்டி, சட்டையை அணிந்து வெளியே வந்தேன். ஒருவர் குதிரையை இழுத்து வந்தார். குதிரை சவாரி செய்யும்போது, அணிய வேண்டிய உடைகளை அணியாமல், குதிரையை ஓட்டிக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், சட்டென்று வேட்டியை தூக்கிக் கட்டி, குதிரை மீது ஏறி அமர்ந்து, சவாரி செய்தேன். சிறிது நேரம் பார்த்த நந்தலால், 'எஸ்...' என்று, சொல்லி, போய் விட்டார்.
நான் செய்த காரியத்திற்கு, அவர் என்னை, 'ஜங்கிலி வாலா' என்று தான் சொல்லியிருக்க வேண்டும். காரணம், குதிரை சவாரி செய்யும் போது, அணிய வேண்டிய உடைகள் இருக்கும்போது, வேட்டியை தூக்கிக் கட்டி, சவாரி செய்வது, காட்டுத்தனமான காரியமல்லாமல் வேறு என்ன!
சில நாட்களுக்கு பின், படப்பிடிப்பு துவங்கியது. ஸ்டுடியோவுக்குள், வெட்ட வெளியில், குன்றை ஒட்டிச் செல்லும் பாதை ஒன்றை, காட்சிக் கூடமாக நிர்மாணித்திருந்தனர்.
இரவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அது பனிக் காலம்... மங்களாதேவி என்ற இளவரசியை, அவரது நாட்டு வீரர்கள் பல்லக்கில் சுமந்து செல்லும் போது, பல்லக்கில், எதிரி இருக்கிறான் என்று தவறாக கணித்து, கதாநாயகனும் (நானும்), அவனுடைய ஆட்களும் தாக்குவது போன்ற காட்சி!
பல்லக்கை மிகவும் கனமாகச் செய்து விட்டனர். ஏழெட்டு பேர் சேர்ந்தால் தான், அதை தூக்க முடியும். இயக்குனர் நந்தலால் எந்த ஒரு காட்சியையும் படமாக்குவதற்கு முன், ஒத்திகை பார்த்து, எல்லாம் திருப்தியான பின்னரே, படமெடுப்பார்.
ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து, ஒவ்வொரு அம்சத்திலும் முழுமையான திருப்தி ஏற்பட வேண்டும் அவருக்கு!
காளி என்.ரத்தினம் விடுத்திருந்த எச்சரிக்கை என் நினைவில் இருந்ததால், குதிரையிலிருந்து எத்தனை முறை குதிக்கச் சொன்னாலும், 'டேக்'கின் போது செய்வது போலவே செய்தேன். ஒவ்வொரு, 'ஷாட்'டிலும் கவனம் செலுத்தி, என் பணியை செய்ய முயன்றேன். ஏனென்றால், 'ஜங்கிலி வாலா' என்று அவர் என்னை அழைத்து விடக் கூடாதே!
காலை, 4:00 மணி; என் கையில் இருந்ததோ ராஜபுத்திர வீரர்கள் வைத்திருக்கும், வளைவான, அசல் இரும்புக் கத்தி. வளையத்திற்குள் நான்கு விரல்களையும் எளிதாக நுழைத்து, பிடித்துக் கொள்ளுமளவுக்கு, அதில் இடைவெளி கிடையாது. நான்கு விரல்களையும் நுழைத்தால், சுண்டு விரல், மோதிர விரலுக்கு மேல் ஏறிக் கொள்ளும்.
இப்படி, எவ்வளவு நேரம் கத்தியை பிடித்திருக்க முடியும்... இடையில், மிகச் சிறிய அளவே ஓய்வு கிடைக்கும். ஒத்திகை, படப்பிடிப்பு என, மாறி மாறி நடைபெற்றதால், கத்தியை கீழே வைக்கவோ, பிடியினுள் திணிக்கப்பட்டிருந்த விரல்களை வெளியே எடுத்து, வலியை போக்கிக் கொள்ளவோ நேரம் கிடைக்கவில்லை. அதனால், விரல் வீங்கி விட்டது.
ஒரு, 'ஷாட்' எடுக்கு முன், பல முறை ஒத்திகை செய்யப்பட்ட நிலையில், இன்னொரு முறையும் ஒத்திகை பார்த்த போது, கைக்கு ஓய்வு கொடுப்பதற்காக, சுட்டு விரலையும், நடுவிரலையும் கத்தியின் கைப்பிடி வளையத்திற்குள் நுழைத்து, தொங்க விட்டேன்.
இதைக் கவனித்த இயக்குனர், 'திஸ் இஸ் நாட் வாக்கிங் ஸ்டிக்; யூ நோ...' என்றார்.
அன்று தான், படப்பிடிப்பின் முதல் நாள்!
அவரோ, படத்தின் இயக்குனர்; நானோ, அவரிடம் எச்சரிக்கையாக நடிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருப்பவன். இந்நிலையில், அவர் அப்படி கேட்டதும், மனம் தாங்காமல், என் தீர்மானங்களை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, சட்டென்று, ஆங்கிலமும், இந்தியும் கலந்து, (அப்போது தான், ஆங்கிலத்தில் உளறக் கற்றிருந்தேனே... சுமாராக இந்தி கூடப் பேச தெரிந்திருந்தது.) 'இது கத்தின்னும், இதை எப்படியெல்லாம் பயன்படுத்தறதுன்னும் எனக்கு தெரியும். பல வகை கத்திச் சண்டைகளை முறையா வாத்தியார்கிட்டே கத்துக்கிட்டவன் நான்...' என்று சொன்னேன்.
அப்படி பேசிவிட்டேனே தவிர, ஏதோ ஒரு வித அச்சத்தோடும், வேதனை யோடும் அவரை உற்றுப் பார்த்தேன். 'ஜங்கிலி வாலா' என்று சொல்லிவிடப் போகிறாரோ என்று!
என்னை மேலும், கீழும் சில வினாடிகள் உற்றுப் பார்த்தவர், 'ஐ ஸீ...' என்று கூறி, அப்பால் சென்று விட்டார்.
அன்று அவரிடம் சொன்ன பதிலின் மூலம், நான் வெற்றி பெற்றதாகவே நினைப்பு... பெருமிதம்!
அதன்பின், பல நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஒருநாள், படத்தில் நான் பாடுவதாக இருக்கும் பாடலுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் யார் என்ற பிரச்னை எழுந்தது.
அப்போது, ஆரியமாலா படத்தில் நடித்துக் கொண்டிருந்த பி.யு.சின்னப்பா, என்னிடம், 'ராமச்சந்திரா, நீயே பாடலாமே... நாடகக் கம்பெனியில பாடிக்கிட்டிருந்தவன் தானே...' என்று என்னை உற்சாகப்படுத்தினார்.
'நாடக கம்பெனியில் பாடினது உண்மை தான்; ஆனா, இப்ப, 'டச்' விட்டுப் போச்சு...' என்றேன்.
'என்னப்பா... சினிமாப் பாட்டு தானே... பெரிசா சங்கீதம் தெரியணும்ன்னு இல்ல; முயற்சித்துப் பாரேன்...' என்றார்.
நான், ஏழெட்டு வயது சிறுவனாக இருந்த போதிருந்து, இருவரும், உடன் பிறந்த அண்ணன், தம்பியாக பழகியவர்கள். பல ஆண்டுகளாக, ஒரே நாடகக் கம்பெனியில், இருவரும் ஒரே குடும்பத்தவராக இருந்திருக்கிறோம். அவருக்கு பின், 'ராஜபார்ட்' போடுவதில், அவரது வாரிசாகவும் இருந்தவன் நான். ஆதலால், அவர் கருத்தை மறுத்து, எதிர்த்துப் பேச முடியவில்லை. அதனால், 'சரி...' என்று சொல்லி விட்டேன். ஆனால், பாகவதர் மற்றும் சின்னப்பா போன்றோர் பாடும் நேரத்தில், அதுவும் அதே ஸ்டுடியோவில் நான் பாடுறேன்னு எப்படி கேக்கிறது... என் பலவீனம் எனக்கு தெரியாதா...
ஆகவே, அந்த முயற்சியில் இறங்கவே இல்லை. படத்தில் எனக்கான பாடல்களை, வேறு சிலர் பாடினர்.
அப்போது, திருச்சி வானொலி நிலையத்தில், பாடிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், எனக்கான பாடலை பாடினார்; கேட்பதற்கு இனிமையாகவும் இருந்தது.
பின், என்ன காரணமோ, அவரும் போய் விட்டார்.
இந்நிலையில், ஒருநாள், அச்சமூட்டும் சேதி ஒன்று, என்னை தேடி வந்தது. அது, எனக்கு பதிலாக, பி.யு.சின்னப்பாவை நடிக்க வைக்க, முயற்சி செய்வதாக!
இதைக் கேட்டு நான் பயப்படுவேன் என்று எதிர்பார்த்து, எனக்கு ஆறுதல் சொல்ல தயாராக இருந்தார், சேதியைச் சொன்ன நண்பர்; ஆனால், நான் சிரித்தேன்.
'என் வேடத்தில் சின்னப்பா நடிக்கப் போறாரா... அவரே என்னை சொந்தக் குரலில் பாடச் சொல்லி, உற்சாகப்படுத்தும் போது, அவராவது, என் வேடத்தில் நடிக்கிறதாவது...' என்று எண்ணி, அவர் சொன்னதை நம்பவில்லை.
— தொடரும்.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை.
