PUBLISHED ON : ஏப் 02, 2017

தாய்நாட்டை காக்கும் வீரர்களுக்காக...
சமீபத்தில், விமானத்தில் டில்லிக்கு பயணிக்க நேர்ந்தது. விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருக்கும் போது, அவசர அவசரமாக, 15 இந்திய ராணுவ வீரர்கள் ஏறி, என் இருக்கையை சுற்றி அமர்ந்தனர். நான், அவர்களுடன் பேசிய போது, ஆக்ராவில் நடக்க இருக்கும், இரண்டு வார பயிற்சிக்கு பின், காஷ்மீர் எல்லையில், பாதுகாப்பு பணிக்காக செல்ல இருப்பதாக கூறினர்.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்... விமானத்தில், 'மதிய உணவு தயார்; தேவையானவர்கள் வாங்கிக் கொள்ளலாம்...' என்று அறிவித்தனர்.
அப்போது, எனக்கு பின் அமர்ந்திருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேர்ந்தது.
'ஏன்... சாப்பாடு வாங்கலயா...' என்று ஒருவர் கேட்க, 'வேணாம்; இங்கு விலை அதிகம். என்னால, அவ்வளவு காசு செலவழிக்க முடியாது; மூணு மணி நேரம் போனால், டில்லி வந்துடும்; அங்கு சாப்பிட்டுக்கலாம்; விலை குறைவாக இருக்கும்...'என்றார் மற்றொருவர்.
இதைக் கேட்ட போது, மனம் கனத்துப் போனது. உடனே, உணவுடன் நின்றிருந்த விமான பணிப்பெண்ணிடம், 15 உணவுக்கான காசை கொடுத்து, அவ்வீரர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னேன்.
அப்பணிப்பெண், என் கைகளை பிடித்து, கண்ணீர் மல்க, 'இது, கார்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து...' என்றாள்.
நான் உண்டு முடித்து, 'ரெஸ்ட் ரூம்' சென்ற போது, ஒரு முதியவர் என்னை நிறுத்தி, 'நீங்கள் செய்ததை, நான் பார்த்தேன். நான் வெட்கப்படுறேன்; இந்தாருங்கள், என் பங்குக்கு, 500 ரூபாய்...' என்று, கொடுத்தார்.
என் இருக்கைக்கு திரும்பினேன். அந்த விமானத்தில் பயணம் செய்த விமான பைலட் ஒருவர் என்னிடம் வந்து, கண்ணில் நீர் தளும்ப, என் கைகளை பிடித்து குலுக்கி, 'இது மிக நல்ல செயல்; ரொம்ப சந்தோஷமா இருக்கு...' என்று கூறி சென்றார்.
முன் சீட்டில் அமர்ந்திருந்த, 18 வயது இளைஞன் ஒருவன், என் கைகளை பிடித்து குலுக்கி, ரூபாயை திணித்தான்.
விமானம், டில்லி விமான நிலையத்தை அடைந்தது; நான் இறங்கும் போது, ஒருவர், என் சட்டை பையில் சில நோட்டுக் கற்றைகளை திணித்து விட்டு சென்றார்.
அந்த வீரர்கள், ராணுவ வண்டிக்காக காத்திருந்தனர். அவர்கள் அருகில் சென்று, 'உங்களுக்காக நான் செலவழித்த பணத்தை விட, இப்போது என்னிடம் அதிக பணம் சேர்ந்து விட்டது. இவை அனைத்தும், உங்களுக்கு சேர வேண்டியது...' என்று கூறி, அந்தப் பணத்தை அவர்களிடம் கொடுத்து, 'காஷ்மீர் செல்லும் வழியில், நன்றாக சாப்பிடுங்கள்; கடவுள், உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்...' என்று கூறி வழியனுப்பினேன்.
இந்த இளம் வீரர்கள், தங்களுடைய உயிரை துச்சமாக மதித்து, நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்து, நம்மை பாதுகாக்கின்றனர். இவர்களுக்கு நான் கொடுத்த தொகை ஒன்றுமேயில்லை.
ஆனால், இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ளாத இவர்களின் வயதை ஒத்த இளைஞர்களோ சினிமா, 'டிவி' 'வாட்ஸ் - ஆப், பேஸ் - புக்' என்று தங்களது வாழ்க்கையை, சீரழித்து கொள்கின்றனரே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
— எஸ்.ஷண்முக சீனிவாசன், சென்னை.
வெங்காய விரல்!
எங்களது கூட்டுக் குடும்பம். என் பெற்றோருடன், அண்ணன் மற்றும் என் குடும்பம் என, மொத்தம், 10 பேர். ஒரே சமையல்; அண்ணி தான் சமைப்பார். அவரது சமையல் பிரமாதமாய் இருந்தாலும், கை, கால் விரல் நகங்களை வெட்டி இருக்கும் அவர், ஒரே ஒரு விரலில் மட்டும், வெங்காயம் உறிக்கவென்று நகம் வெட்டாமல் விட்டிருப்பார்; அந்நகத்தில், அழுக்கு படர்ந்து, கறுமையாய் காட்சியளிக்கும்.
ஒருநாள், 'அண்ணி... ஒன்று வெங்காய விரலில் இருக்கும் அழுக்கை அகற்றுங்கள் அல்லது நகத்தை வெட்டி, வெங்காயம் உரிக்க கத்தியை பயன்படுத்துங்கள். விரல் அழுக்கு, வீட்டு சமையலில், சுகாதார கேட்டை விளைவிப்பதை தவிருங்கள்...' என, அறிவுரை கூறினேன்.
மறுநாள், வெங்காய விரல் நகத்தை வெட்டி விட்டார். வெங்காய விரல் வைத்திருக்கும் பெண்மணிகளே திருந்துங்கள்!
— எஸ்.திரிபுர சுந்திரி, திருமங்கலம்.
குழந்தைகளை காப்பகத்தில் விடுகிறீர்களா?
என் மகளும், மாப்பிள்ளையும் வேலைக்கு செல்வதால், தங்களது ஒரு வயது பெண் குழந்தையை, 'க்ரீச்' எனப்படும், குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வது வழக்கம்.
வெளியூரில் இருக்கும் நான், சமீபத்தில், அவர்களை பார்க்க சென்ற போது, குழந்தை மிகவும் மெலிந்து, பயந்தவளாக காணப்பட்டதுடன், கோபம் வந்தால் தட்டு, முட்டு சாமான்கள் போட்டு வைக்கும், இருட்டான அறைக்கு சென்று, மறைந்து கொள்வதையும் கண்டேன்.
அவளது இந்த நடவடிக்கைகள் புதிராக இருக்கவே, விசாரித்த போது, காப்பக மேலாளர், குழந்தைகளை பயமுறுத்த, இருட்டு அறையை பயன்படுத்தியதுடன், சாப்பிட மற்றும் தூங்க மறுத்தாலோ, கண்ணில் மிளகாய் பொடி தூவி விடுவதாக, பயம் காட்டி இருப்பதும் தெரிய வந்தது.
உடனே, எங்கள் குழந்தையை, அக்காப்பகத்திலிருந்து நிறுத்தி விட்டோம்; இருப்பினும், அப்பழக்கத்திலிருந்து குழந்தை இன்னும் மீளவில்லை; பிரமை பிடித்த மாதிரி இருப்பதுடன், சாப்பிட்டாலும், சாப்பிடவில்லையென்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கியே தீர வேண்டும் என அடம்பிடிப்பது, யாரும் பார்க்காத நேரத்தில், இருட்டான இடத்திற்கு சென்று அமர்ந்து கொள்வது, யாருடனும் ஒட்டாமல் இருப்பது மற்றும் எதை பார்த்தாலும் மிரளுவது போன்ற செயல்கள், அவளை விட்டு அகலவில்லை.
மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெற்று வருகிறோம். 'பூரண நலம் பெற, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்...' என கூறுகிறார்.
குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்கும் போது, பலமுறை தீர விசாரித்து, பின், குழந்தைகள் நலம் பேணும் இடமாக பார்த்து சேருங்கள்.
— சி.எஸ்.ராஜேஸ்வரி, குனியமுத்தூர்.
