sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர்., (12)

நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர்., (12)

நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர்., (12)


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017

ஆரியமாலா படத்தில், சின்னப்பா நடித்திருந்த பகுதிகளை, இயக்குனர் நந்தலாலுக்கு திரையிட்டு காட்டுகின்றனர் என்ற தகவல், என் காதுக்கு எட்டியது. என்ன நடக்கிறது என்பதை வெளியே இருந்து கவனித்தபடி இருந்தேன். அப்படக்காட்சி முடிந்ததும், 'ஜங்கிலி வாலா, ஜங்கிலி வாலா...' என்று கூறியவாறு, படக் கொட்டகையிலிருந்து வெளியே வந்து, கோட்டை தூக்கி தோளில் போட்டு, வண்டியிலேறி போய் விட்டார், நந்தலால்.

இடையில் என்ன நடந்தது; ஏன் அவர் கோபமாகப் போகிறார், யாரை, 'ஜங்கிலி வாலா' என்று சொல்கிறார் எதுவுமே புரியவில்லை.

ஆரியமாலா படக்கம்பெனி முதலாளியின் திட்டப்படி, படப்பிடிப்பு விரைவில் முடிய வில்லை. எனவே, கம்பெனியில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதென்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், குறித்த நேரத்தில் என் சம்பளம் வந்து விடும். சம்பளத் தேதி ஞாயிற்றுக் கிழமை என்றால், முதல் நாளே தந்து விடுவர். பணத் தட்டுப்பாடு என் வரைக்கும் தெரியவே இல்லை.

ஒருநாள், நான் நடித்துக் கொண்டிருந்த, சாயா படத்தின் ஒளிப்பதிவாளர் கூப்பர், அவரை வந்து பார்க்கச் சொல்லி, ஆள் அனுப்பினார்; ஸ்டுடியோவிற்குப் போனேன். என்னை பார்த்ததும், கண் கலங்க, அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த செய்தியைச் சொன்னார்...

அதாவது, நாராயணன் கம்பெனியார், என்னை அவ்வேடத்திலிருந்து நீக்க விரும்பியதாகவும், நந்தலால் அதை ஏற்க மறுத்து, நான் தான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சொன்னதாகவும், எதற்கும் நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, என்னிடம் சொல்லச் சொன்னதாகவும் கூறினார்.

என் வேடம் மற்றவர்க்கு மாற்றப்படப் போகிறது என்பதைக் காட்டிலும், எந்த இயக்குனரை, எடுத்தெறிந்து பேசினேனோ, அந்த இயக்குனரே, எனக்காக பரிந்து பேசினார் என்பதை கேட்டதும், என் உள்ளம், வியப்பால் அதிர்ந்தது. அவர், எனக்காக பரிந்து, தயாரிப்பாளரிடம் பேசியதோடு, ஒளிப்பதிவாளர் மூலம், எனக்கு தகவல் கொடுத்து நம்பிக்கை ஊட்டி, அறிவுரை வழங்கியதை நினைத்த போது, அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

'எப்பவும், அவரை கை கூப்பி, கும்பிடுவேன்னு சொல்லுங்க...' என்று மட்டும் சொன்னேன். இதைக்கூட, அவர் காதில் விழுகிற அளவுக்கு, சத்தமாக சொன்னேனா இல்லையா என்பது, தெரியாது. அந்தளவுக்கு தொண்டை கரகரத்து இருந்தது.

எனக்காகவே உருவான வேடமென்று நினைத்திருந்த, நானே முழுவதும் நடிக்கப் போகிறேன் என்று நம்பியிருந்த அந்த வேடத்திற்கு ஆபத்தா!

பட்டாளத்துக்கு போக வேண்டியவனை தடுத்து, அதைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுத்து, ஏழெட்டு மாதங்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள செய்துவிட்டு, எல்லாராலும் அவ்வேடத்திற்கு பொருத்தமுடையவன் என்ற நல்ல பேரையும் தேடித் தந்து, கோபுரத்தின் உச்சியில் வைத்திருக்கும் கலசம் போல, மற்றவர்களால் மதிக்கப்படும் நிலைக்கு உயர்த்தி, பின், திடீரென்று என் காலைப் பிடித்து இழுத்து நடுவீதியில், குப்பைத் தொட்டியில் தள்ளினாற் போன்ற நிலைக்கு என்னை ஆளாக்க முயல்கின்றனரே... எனக்கு கதாநாயகன் வேடம் கொடுங்கள் என்று நானா கேட்டேன்...

எப்போதும் குதித்து, கும்மாளம் போட்டவாறு வீட்டுற்குள் நுழைபவன், அன்று, கொந்தளித்த நெஞ்சக் குமுறலை அடக்கி, தலை குனிந்தவாறு வீட்டிற்குள் சென்று, மூலையில், நாற்காலியில் போய் அமர்ந்தேன். அந்த விடுதியில், எங்களுடன் என் தாயாரும் தங்கியிருந்தார். மாலை நேர பிரார்த்தனைக்கு, பூமாலையுடன் வந்த என் தாயார், நான் மூலையில் தனித்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, பெருமூச்சு விட்டவர், பூஜையை செய்து முடித்தார்.

அவர் பெருமூச்சு விடுவதை கவனித்த நான், 'ஏன் பெருமூச்சு விடுகிறார்... அதற்குள் தகவல் தெரிந்து விட்டதா...' என்று சந்தேகப்பட்டு, அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

அவர், நிதானமாக வந்து, என் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து, 'நான், தினமும் கடவுளை கும்பிட்டு மாலை போடுறேனே எதுக்காக... எனக்கு பின், அனாதைகளாக நிற்கப்போற என் குழந்தைகளுக்கு, நல்வாழ்வு கிடைக்கணும்ங்கிறதுக்காகத் தான்... நீ, ஏன் கவலையா, சோர்ந்து போயிருக்கறே...' என்று உருக்கமாக கேட்டார்.

'நான் சோர்ந்திருக்கேன்னு உங்களுக்கு எப்படிம்மா தெரியும்?' என்றேன்.

'வீட்டுக்குள்ளே நுழைஞ்சதுமே, 'அம்மா'ன்னு ஓடி வந்து, என்னை கட்டிப்பிடிச்சு, என் வயிற்றிலே இருக்கிற மடிப்ப அமுக்கிப் பிடிச்சு, கிச்சுமுச்சு மூட்டி விளையாடுவியே... இன்னைக்கு எங்கே அதெல்லாம்... வளர்ந்துட்டாலும், நீ என் குழந்தைங்கிறத ஞாபகம் வெச்சுக்க. உங்களையெல்லாம் சரியா புரிஞ்சுக்காம இருந்தா, நல்லபடியா வளர்த்திருக்க முடியுமா... டேய்... எங்க கறுத்தா, எங்கே மழை பெய்யும்ன்னு எனக்கு தெரியுண்டா. சொல்லு, என்ன சமாசாரம்?' என்று கேட்டார்.

தாயாரின் அந்த வார்த்தைகளை கேட்ட போது, என் தவிப்பிலிருந்து தெளிவு ஏற்பட்டது. அதனால், அவர் முகத்தை பார்த்தவாறே, எனக்குச் சொல்லப்பட்ட செய்தியை, அப்படியே சொன்னேன்.

அதைக் கேட்டதும், என் தாயின் முகத்தில், எந்த மாறுதலும் இல்லை. மாறாக, 'ச்சே... இதுக்கு தானா இவ்வளவு கவலைப்பட்டு உட்கார்ந்திருக்கே... நம் சக்திக்கு உட்பட்ட விஷயங்களை பற்றித் தான் நாம கவலைப்

படணும். சக்திக்கு மீறின காரியங்கள் நடக்கறபோது, அதை பற்றி கவலைப்படக் கூடாது. வானம் இடிஞ்ச விழுதுன்னா, கோழி முட்டைய கொண்டு போயா தடை கொடுப்பாங்க... உருவம், அமைப்பு ஒண்ணா இருந்தா, அளவு வித்தியாசம் இல்லயா... இன்னைக்கு நல்ல புட்டு செஞ்சிருக்கேன்; வா, வந்து சாப்பிடு...' என்றார்.

வீட்டுக்குள் நுழைந்த போது, எத்தனை பெரிய வேதனையுடன் இருந்தேன். வெளிப்படையாக வாய்விட்டு அழுது, அரட்டவில்லையே தவிர, என் எல்லா அவயங்களுமே, சோகத் தீயின் அனற் வேக்காட்டில் நைந்து போய் ஆடிக் கொண்டல்லவா இருந்தன!

ஆனால், அவை யாவும், என் தாயின் சொற்களைக் கேட்ட நொடிப்பொழுதில் எப்படி மறைந்தன என்பது புரியவில்லை.

என்னை அறியாமல், எனக்கு தெளிவு ஏற்பட, அன்று வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டேன். பின், என் எதிர்காலத்தை பற்றி, யோசித்து பார்த்தேன்...

என் தாயோ வெளியே சென்று காரியமாற்ற சக்தியற்றவர். நாளை, நான் வேறொரு சினிமா கம்பெனியில் சேர முடியுமா என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும், தாயின் ஆறுதல் வார்த்தை எனக்குள் துணிவையும், மலர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

மறுநாள் காலை எழுந்ததும், எனக்கொரு செய்தி காத்திருந்தது; அது, என் சம்பந்தப்பட்ட காட்சியை படமெடுக்க, 'செட்' போடுகிறார்கள் என்பது தான்!

'ஒருவேளை, எனக்கு பதிலாக, வேறு யாராவது நடிக்க போகின்றனரோ... அதற்காக தான் ஏற்பாடு நடக்கிறதோ...' என நினைத்து, அதுகுறித்து தெரிந்து கொள்வதற்காக விசாரித்தேன்.

அதுபோன்று எதுவுமில்லை; வழக்கம் போல் நானே நடிக்க இருப்பதை அறிந்து நிம்மதியானேன்.

எனக்கான புதிய உடைகளுக்கு அளவும் எடுத்தனர்.

'இயக்குனர் நந்தலால், உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் படமெடுக்க முடிவு செய்து, படப்பிடிப்புக்கும் ஏற்பாடு செய்து விட்டார்...' என்று, என்னிடம் சொன்னார், கேமராமேன், கூப்பர்.

என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விட்டால், பட முதலாளிகள், என்னை, அவ்வளவு எளிதாக விலக்கி விட முடியாது அல்லவா?

இதைக் கேட்டதும், என் மீது அவருக்கிருந்த அனுதாபம் மற்றும் அக்கறையை நினைத்து, அந்த நல்ல உள்ளம் படைத்தவருக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் நின்றேன்.

தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us