தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துணிந்தால் துக்கம் இல்லை!

என் தோழி படித்தவள்; பண்பானவள்; ஆனால், சுமாரான அழகு. திருமணமாகி, பத்து மற்றும் ஏழு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி, 11 ஆண்டுகள், நல்ல முறையில் தான் வாழ்க்கை ஓடியது. இடையில், ஒரு பெண் அவள் வாழ்க்கையில் குறுக்கிட, இப்போது, வில்லங்கம் ஆரம்பமாகி விட்டது.

தோழி நினைத்திருந்தால், இவ்விஷயத்தை நாறடித்திருக்க முடியும். ஆனால், அப்படி எதுவும் செய்யாமல், இரு குடும்பத்து பெரியவர்களையும் அழைத்து, 'இவர், எங்கு வேணா போகட்டும்; யாரோடு வேணா பழகட்டும்; குடிக்கட்டும், கூத்தடிக்கட்டும். ஆனா, வீட்டுக் கடமைகள முறையாக செய்யணும். பொம்பளப் பிள்ளைகள படிக்க வைத்து, திருமணம் செய்து வைக்கணும். அதுமட்டுமல்லாமல், வேறொருத்தி, இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வைக்க, சம்மதிக்க மாட்டேன்.

'என் கடமைகள சரி வர செய்வேன்; இரவில் வீட்டில் தான் தங்கணும். இனி, அவருக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்ல. இவற்றுக்கெல்லாம் கணவரும், பெரியவர்களும் ஒத்து வந்தால், குடும்ப கவுரவம், மான, அவமானம் எதுவும் போகாது. இல்லயேல், இன்றைக்கு மகளிருக்கு இருக்கும் சட்ட திட்டங்களை கையாண்டு, என்ன செய்யணுமோ அனைத்தையும் செய்வேன். தர்மம், நியாயம் என் பக்கம் இருப்பதால், கடவுளும் எனக்கு துணை இருப்பார்...' என்று போட்டாளே ஒரு போடு... கணவர் உட்பட, அனைவரும் வாயடைத்து போயினர்.

தற்சமயம் கணவன் - மனைவிக்கு இடையே பேச்சு வார்த்தைகள் குறைந்தாலும், குடும்பம் அமைதியாக நடக்கிறது.

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

தந்தைக்கு அளித்த வாக்கு!

சமீபத்தில், வேலை நிமித்தமாக வெளியூரில் ஒருநாள் தங்கும்படி நேர்ந்தது.

கல்லூரியில் என்னுடன் படித்த, அவ்வூரில் உள்ள என் நண்பனின் நினைவு வர, அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னை அன்பாக வரவேற்ற நண்பனின் தோற்றத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். காரணம், படிக்கும் போது, ரொம்ப ஸ்டைலாகவும், மிடுக்காகவும், பெரிய செல்வந்தரின் மகனை போலவும் பந்தா காட்டியவன், இப்போது, மிகுந்த எளிமையாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டான்.

பி.ஏ., பி.எல்., முடித்த அவன், தற்போது விவசாயம் செய்வதாகவும், அத்துடன், வீடுகள் மற்றும் கடைகளுக்கு பால் வினியோகம் செய்வதாகவும் கூறிய போது, மேலும் பிரமித்துப் போனேன்.

'நண்பா... ஏன் இந்த மாற்றம்?' என்று கேட்ட போது, தன் தந்தை இறக்கும் போது, தனக்கு பின் குடும்பத்தில் விவசாயம் செய்ய யாரும் இல்லையே என்று கவலைப்பட்டதாகவும், அப்போது, தான் விவசாயத்தை பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறி, 'அதனால் தான், விவசாயம் செய்து வருகிறேன். விவசாயம் செய்வதால், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன்...' என்றான்.

விவசாயத்தின் மீது அவனது தந்தை வைத்திருந்த ஈடுபாட்டையும், தந்தை மீது அவனுக்கிருந்த அன்பையும் மனம் திறந்து பாராட்டினேன்.

சாரதி சரவணன், திருச்சி.

கடிதம் எழுதுங்கள்!

சமீபத்தில், என் நண்பரை சந்திக்க, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர், என்னைக் கண்டதும், எழுதுவதை நிறுத்தி, வரவேற்றார்.

அவர் மனைவி, மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றிருந்தார். 'ஏதோ முக்கியமாக எழுதும் போது, தொல்லை செய்துட்டேனா...' எனக் கேட்டதற்கு, 'என் மனைவிக்கு, கடிதம் எழுதிட்டு இருந்தேன்...' என்றார்.

நான், ஆச்சரியமாக பார்க்கவும், 'நாங்க வாரம் ஒருமுறையாவது, கடிதம் எழுதி பரிமாறிக்குவோம். அதில், எழுதியிருப்பதை பற்றி, நேரடியாக விவாதிக்க மாட்டோம்; கொஞ்சம் கொஞ்சல் மற்றும் பாராட்டு இதை இப்படி செய்தால் நல்லாயிருக்கும் போன்ற, சாதாரண விஷயங்கள் தான்.

'ஆனாலும், மனஸ்தாபம் ஏற்படும் போது, எங்களை இணைக்கும் பாலமாக அக்கடிதங்கள் தான் இருக்கு. இருவரும், தனித்தனியே கடிதங்களை பத்திரப்படுத்தி வைப்பதால், இருவரில், யார் தனிமையில் இருந்தாலும், அக்கடிதங்கள் தான் ஆறுதல்...' என, நீண்ட விளக்கம் கொடுத்தார்.

பரபரப்பான நகர வாழ்க்கையில், கணவன், மனைவி இடையே, கடிதம் பறிமாறுவது, அன்பை வளர்க்கும் என்பதை அறிந்து நானும், அதை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளேன்.

சிசு.சூர்யபிரியன், பட்டுக்கோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us