PUBLISHED ON : ஏப் 09, 2017

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.
ஒருநாள், பட தொகுப்பு வேலைக்காக, ஸ்டுடியோவுக்கு வந்த நந்தலால், என்னிடம் ஆங்கிலத்தில், 'என்ன மிஸ்டர் ராமச்சந்திரன்... கூப்பர் எல்லாம் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன்; அதனால தான், நீ நடிக்கயிருக்கும் காட்சிகளுக்கான, 'செட்'டையே போட சொல்லி படமெடுத்தேன்; நீ, இப்படத்தில இல்லன்னா, நானும் இல்ல...' என்றார்.
அவ்வார்த்தைகள், என்னை பரவசத்தில் ஆழ்த்தின.
பின், படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போதெல்லாம் காலை, 10:00 மணிக்கு படப்பிடிப்பு துவங்கும்; 1:00 மணியிலிருந்து, 2:00 மணி வரை இடைவேளை. பின், 2:00 மணிக்கு துவங்கி, 5:00 மணி வரை படப்பிடிப்பு. சிலசமயம், இரவு, 10:00 மணியிலிருந்து விடியற் காலை, 5:00 மணி வரை படப்பிடிப்பு நடைபெறுவதும் உண்டு.
ஒருநாள், படப்பிடிப்பு முடிந்து புறப்படும் போது, இயக்குனர் நந்தலால், என்னிடம், 'தைரியமாக இரு... நன்றாக நடி; எதற்கும் அஞ்சாதே... தொழில்ல அக்கறை காட்டுறதோட, உடலை கட்டுக்கோப்பாக வைச்சுக்க; குட் பை...' என்று சொல்லி, சென்று விட்டார்.
'ஏன் இப்படியெல்லாம் சொன்னார்...' என புரியாமல், அவர் சொன்னதை என் தாயிடம் கூறினேன்.
சிறிது நேரம் பேசாதிருந்த அவர், 'கூடிய சீக்கிரம் நாம சென்னைக்கு போக வேண்டியிருக்கும்; நாளைக்கே நம்ம வீட்டுக்கு எழுதி போட்டுடு...' என்றார்.
அப்போது தான், எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக, புரியத் துவங்கியது.
மறுநாள் காலையில் படப்பிடிப்பு இருந்தது; குறிப்பிட்ட நேரத்திற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்து காத்திருக்கும் நந்தலால், அன்று, 11:00 மணி ஆகியும் வரவில்லை.
காரை அனுப்பினர்; அவர் வீட்டை காலி செய்து, சென்று விட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். முதல் நாளிரவே, அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
நாராயணன் கம்பெனி நிர்வாகி, மேற்பார்வையாளர் மற்றும் ஆலோசகரான வரதாச்சாரியார், 'ஏதோ வீட்டில் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும்; அதனால் தான், சொல்லாமல் சென்றிருக்கிறார். இரண்டொரு நாட்களில் வந்து விடுவார். பின், படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்...' என்றார்.
ஆனால், என் உள் மனம், 'இப்படத்தை இயக்க, இனி அவர் வர மாட்டார்...' என்றே சொல்லிற்று.
அந்த மாதம் எனக்கு சம்பளம் தரவில்லை; தருவர் என்ற நம்பிக்கையுமில்லை. படப்பிடிப்பு, அப்படியே நின்று விட, பின், 'செட்' பிரிக்கப்பட்டும் விட்டது; 'இனி, சாயா என்ற இந்தப் படத்தை எடுக்க மாட்டார்கள்...' என்று எனக்கு தோன்றிவிட்டது.
எனவே, சீக்கிரம் சென்னைக்கு புறப்பட தயாராக வேண்டியது தான் என்று நினைத்தேன். அதேநேரம், சென்னையிலுள்ள நண்பர்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது... இந்நினைப்பு, என்னை கொஞ்சம் கொஞ்சமாக அரித்தது.
'நான் கதாநாயகன் வேடத்திற்கு தகுதியற்றவன்...' என்று சொல்லி, என்னை நீக்கி விட்டனர் என்றல்லவா கூறுவர்.
நான், சம்பளம் கேட்டனுப்பினேன்; கொடுத்தனுப்புவதாக பதில் வந்தது; ஆனால், பணம் வரவில்லை.
சில வாரங்களுக்கு பின், அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு வந்தது; சென்றேன்.
கணக்கு தீர்த்து, ரொக்கமாக பணத்தை தந்தனர்.
இரண்டொரு நாட்களுக்கு பின், சென்னைக்கு புறப்பட்டோம்.
சென்னையில் சில நாட்கள் வரை, வெளியே போகவே மனம் இடம் தரவில்லை.
ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு மேல் எனக்கும், சென்னைக்கும் தொடர்பே இல்லாதது போல், வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தேன்.
ஆனால், அதற்குமுன், சென்னைக்கு வந்த சில நாட்களில், டி.ஆர்.ரகுநாத்திடமிருந்து அழைப்பு வந்தது. 'எனக்கு விரோதமாக செயல்பட்டவருடைய தம்பியை போய் பார்ப்பதா...' என்றெல்லாம் நினைக்கவில்லை.
'எனக்கு, வீம்பும் ஒரு கேடா..' என நினைத்து, அவரை போய் பார்த்தேன்.
'ஏம்ப்பா... எப்போ வந்தே...' என்று, கேட்டார்.
நான், அதற்கு பதில் சொன்னதும், 'ஏதாவது, புது படத்துக்கு ஒப்பந்தமாயிருக்கியா?' என்று கேட்டார்.
'இதுவரையிலும் இல்ல...'
'கதாநாயகனாத்தான் நடிக்கிறதா இருக்கியா... இல்ல எந்த வேஷமானாலும் நடிப்பியா...'
'நடிகனுக்கு எந்த வேஷமானால் என்ன; நல்ல வேஷமா இருக்கணும், அவ்வளவுதான்!'
'நீ மாதம், 300 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியவன்; அதுக்கு குறைஞ்சதுன்னா, சம்மதிப்பியா...'
'வேஷத்துக்கு தகுந்த மாதிரி தானே சம்பளம் குடுப்பாங்க; கதாநாயகனுக்கு கொடுத்த சம்பளத்தையே, எல்லா வேஷத்துக்கும் எதிர்பாக்க முடியுமா...' என்றேன்.
உடனே, 'நான் இயக்கும் படத்துல, கதாநாயகன் வேஷம் ஒண்ணு இருக்கு... தமிழறியும் பெருமாள் என்பது, படத்தோட பேரு; படத்தில், விறகு தலையனாக, டி.எஸ்.துரைராஜ் நடிக்கிறார்; இப்படத்தில் அவர் தான் கதாநாயகன். இக்கதாபாத்திரம், முற்பிறவியில் இளவரசனாக இருந்தது போல கதை அமைத்துள்ளனர். அந்த இளவரசன் வேஷத்தை, உனக்கு கொடுக்கலாம்ன்னு முடிவு செய்திருக்கேன்.
'முற்பிறவியை பற்றிய கதையை காண்பிக்கும் போது தான், நீ நடிக்கணும்; கொஞ்சம் தான் வேலை; ஆனால், மக்கள் மனதில் நினைவிருக்கும். பத்து நாட்கள் கூட வேலையிருக்காது. ஆனால், சில்லரை வேஷம் என்று பெயர் இருக்காது; கதாநாயகனாவே மக்கள் மதிப்பர். பத்து நாள் வேலைக்கு, அதிக சம்பளம் கொடுக்க மாட்டார்கள் என்ன சொல்ற...' என்றார்.
எனக்கு அப்போது சம்பளமா முக்கியம்... வேலையல்லவா தேவை. அதுவும், கவுரவமாக சொல்லி கொள்ளக் கூடிய வேடம் ஆச்சே... சம்மதித்தேன்.
மாதத்திற்கு, 300 ரூபாய் வாங்கிய நான், ஒரு படத்தில் நடிக்க, 300 ரூபாய்க்கு ஒத்துக் கொண்டேன்.
இப்படத்தில், என் காதலி இறந்து விட்டதை அறிந்து, பதறி ஓடும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது.
மூன்று நாட்களாக, உடல் நலமில்லாது, நடக்க கூட சக்தியற்றிருந்த நேரம் அது! இருந்தும், வெளிப்புறக் காட்சியில் நடிக்கச் சென்றேன்.
ஓடி வரும் போது, கால் இடறி விழுவது போல் நடிப்பதாக சொன்னேன்;
டி.ஆர்.ஆரும் சம்மதித்தார்.
ஓடி வந்து, தண்ணீர் தேங்கி நிற்கும் ஒரு குட்டையின் அருகில் இடறி விழுந்தேன்; எழுந்து, மேலும் வேகமாக ஓடினேன்.
'கட்...' என்று சொன்னார், டி.ஆர்.ஆர்., ஆனால், அவர், 'கட்' என்று சொல்வதற்கு முன், கேமராவை நிறுத்தி விட்டார், கேமராமேன்.
'நான் சொல்லும் முன், ஏன் நிறுத்தினீர்?' என்று கேட்டார், டி.ஆர்.ஆர்.,
'ராமச்சந்திரன் கீழே விழுந்து விட்டாரே... அதனாலே நிறுத்திட்டேன்...' என்றார், கேமராமேன்.
'விழுந்தது வரைக்குமாவது, படமெடுக்கப் பட்டிருக்குமில்ல...' என்று கேட்டார், டி.ஆர்.ஆர்.,
'விழுந்த உடனேயே நிறுத்திட்டோமே...' என்று கேமராமேன் சொன்னதும், டி.ஆர்.ஆருக்கு ஆத்திரமாக வந்தது. ஏனெனில், நான் உடல் நலமில்லாதிருக்கிறேன் என்பது மட்டுமல்ல; கீழே விழுந்த போது, குறைந்தது ஏழெட்டு அடிகள் சறுக்கியபடி சென்றேன்.
நான், மீண்டும் நடிப்பதாக சொல்லி, ஓடினேன்; விழுந்தேன்.
பின், எழுந்து ஓடினேன்.
நடக்கவே சக்தியற்றிருந்த நான், அன்று ஓடிய ஓட்டத்திற்கு அளவேயில்லை.
வீட்டிற்கு வந்தபின், ஒரு வாரம் காய்ச்சல்; உடல் வலி இருந்தும், மனதில் மட்டும் நிறைவு; மகிழ்ச்சி.
அப்படம் வெளிவந்து, நன்கு ஓடிய போது, என் ஓட்டமும், அவ்வெற்றியில் பங்கு கொள்கிறது என்ற பெருமையில் ஆனந்தப்பட்டேன்.
மனிதன், எவ்வளவு விரைவில், தான் பட்ட மிகப்பெரிய கஷ்டங்களை கூட, சிறு வெற்றியில் மறந்து விடுகிறான்...
ஆனால், சாயா படத்திற்கு பின், அதன் தொடர்ச்சியாக, எனக்கு ஏற்பட்ட ஒரே ஒரு வேதனை மட்டும் என்னால் மறக்கவே முடியாததாக இருந்தது.
— தொடரும்.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை.
