PUBLISHED ON : ஏப் 09, 2017

சொந்தமாக, 'கிணிங்... கிணிங்' இரட்டைச் சக்கர வண்டி வாங்கியதில் இருந்து, பஸ்சில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. உள்ளூர் சவாரிக்கு, 'கிணிங்... கிணிங்' தான்; வெளியூர்களுக்கு இரவல் கார்!
இரண்டு நாட்களுக்கு முன் பஸ்சில் செல்லும் ஆசை ஏற்பட்டது. இரண்டு ஸ்டாப்பிங் தூரம், பஸ்சில் செல்ல தீர்மானித்தேன். பஸ்சில் ஏறி அமர்ந்ததுமே, சுவாரசியம் ஆரம்பித்து விட்டது...
'பயணச் சீட்டை கேட்டு வாங்குங்கள்...'
'சற்று முன் செல்லுங்கள் ஐயா...'
'சகோதரி... இருக்கை காலியாக இருக்கிறதே... சென்று அமரக் கூடாதா...' என்று, சுத்த தமிழில் பேசிக் கொண்டிருந்தார் கண்டக்டர்.
அருகில் நின்றிருந்த கல்லூரி மாணவர்கள், 'சுத்த மறை கழண்ட கேஸ் போலிருக்கிறதே...' என்று, கமென்ட் அடித்தனர். அவர்களுக்கு அருகில் நின்ற நடுத்தர வயதுக்காரர், 'இந்தக் கால பசங்களுக்கு, தமிழ்ன்னாலே இளப்பம் தான். தஸ்சு, புஸ்சுன்னு மூக்கால இங்கிலீசு பேசுறவங்களுக்கு, கை கட்டி சேவகம் செய்வாங்க...' என்று, கோபத்துடன் சத்தமாக சொன்னார்.
கல்லூரி மாணவர்கள் சும்மா விடுவரா... நேரடி தாக்குதலை ஆரம்பித்தனர். 'சார்... எந்த மொழியை எடுத்துக்கிட்டாலுமே, பேச்சு நடையும், எழுத்து நடையும் மாறுபடும். பேச்சு நடை சற்று கொச்சையாத்தான் இருக்கும். அதை விட்டுட்டு, எழுத்து நடை போன்றே இலக்கண சுத்தமாப் பேசினால், கிண்டலாகத்தான் இருக்கும்...' என்றனர். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, இருதரப்பு சொல்வதிலுமே நியாயம் இருப்பது புரிந்தது. பஸ்சை விட்டு இறங்கினேன்.
சென்ற வேலை முடிந்ததும், அலுவலகத்துக்கு பஸ்சிலேயே திரும்பி வரும் போதும், சுவாரசியம்தான்... பிரபல நடிகர் ஒருவரைப் போன்று ஸ்டைல் செய்து, ஆங்கிலத்திலேயே பேசி அசத்தினார் கண்டக்டர். ஒரு அம்மணி டிக்கெட் வாங்க மறந்து விட்டார் போலும். அருகில் சென்று, 'பேசன்ஜர் பேசன்ஜர்... வொய் நாட் பாட் டிக்கெட்?' என்றார். அருகில் இருந்தவர்கள், 'கொல்'லென்று, சிரித்தனர். அவர் பேசியது தப்பு ஆங்கிலம் என்பதை, விசாரித்து தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசுவதில் எனக்கு தோஸ்த் ஒருவரும், சென்னையில் இருப்பதை அறிந்த போது, மகிழ்ச்சியாக இருந்தது.
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது ஆலம் பூண்டி என்ற கிராமம். வருமான வரித் துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவரின் மாமனார் ஊர் அது; அவரது மாமனார் நிலச்சுவான்தார். அவரைப் பார்ப்பதற்கும், நகர வாழ்க்கைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்கவும் விரும்பிய நண்பர், என்னையும் அழைத்தார்.
மிகப் பெரிய ஓட்டு வீடு அது; வீட்டின் நடுவே பெரிய முற்றம். வாசலில் இருபுறமும் பெரிய திண்டுகள் இருந்தன. திண்டில் சாய்ந்தபடி, எடுத்துச் சென்றிருந்த புத்தகம் ஒன்றை விரித்தேன்.
கே.சீனிவாசன் என்பவர், '50களில் எழுதியது... அவர், 'பழி' போடுவது பற்றி சொல்கிறார்:
மனித வாழ்வை கவனியுங்கள். மனிதரின் வாழ்வை படம் பிடித்து வைத்திருக்கும் கதைகளையோ, நாடகங்களையோ பாருங்கள். அபவாதப் பேயின் அட்டகாசங்கள் பொறுக்க முடியாதவை என்பது புரியும்.
சத்தம் அடங்கும்; புயல் ஓயும்; தீ தணியும்; வெள்ளம் வடியும்; மின்சார ஓட்டம் கத்தரித்துப் போகும். ஆனால், அபவாதம் அடங்காது; ஓயாது, தணியாது, வடியாது, கத்தரித்துப் போகாது. பிராணனோடு வியாதி மறையும்; ஆனால், மரணத்திற்குப் பின்னும் மறையாது நிற்பது அபவாதம்!
ஜனங்களை, பொய் எப்படி ஏமாற்றுகிறது என்று கேட்கலாம்... பொய் ஏமாற்றுவதில்லை!
'ஒவ்வொரு மனித உள்ளத்திலும் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது கயமை...' என்கிறார் பெட்ராண்டு ரசல். கயமையின் குணம் - அவதூறு பேசுவதும், அவதூறு கேட்பதும். அவதூறு எளிதில் விலையாகிற சரக்கு. வாங்குவதை விட, விற்பது எப்போதும் அதிகம்; ரொக்க வியாபாரம். சேர்த்து வைக்க கிடங்கு வேண்டாம்; கைக்குக் கை சுலபமாக மாறும்; விலையும் ஏறும். வியாபாரம் ஓயாது நடந்து கொண்டே இருக்கும்.
வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அவதூறு பிறக்கும். பணம் வரும் வழியில் உண்டாகும்; பதவிக்கும் அப்படியே! ஆயினும், அவதூறுக்கு முக்கிய வேலை, துர்நடத்தை கற்பித்து, ஆண், பெண் இருபாலரின் பெயரையும் கெடுப்பது தான்.
ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் தட்டிப் பார்த்து வாங்குவர்; பழியைச் சொன்னால் ஆராய மாட்டார்கள். அதிலும், நல்லவர்களைப் பற்றி, எளிய மனிதர்களைப் பற்றி அவதூறு சொல்வதென்றால், சொல்கிற நாக்கிற்கு ருசி; கேட்கிற காதிற்கு குஷி. வேம்பில் விருப்பம் காக்கைக்கு; பேசுவதில், விருப்பம் கயவர்க்கு! ஒவ்வொரு உள்ளத்திலும், கயமை இருக்கிறது. திடமாக இருந்து, எடுத்து எறிந்தால் தான், அது போகும்!
பகை எதிர்த்தால் சண்டையிடலாம்; பழி எதிர்த்தால் போராட முடியாது. பழி நேர் நின்று போராடாது; மறைந்திருந்து தாக்கும். நேர் நின்று அதை உடைப்பது கோடியில் ஒருவருக்குத் தான் முடியும்...
- எவ்வளவு அருமையான தத்துவ முத்து!
மழையின் அறிகுறி தென் பட்டது... எதிரே இருந்த தோப்பில், குயில் கூவும் குரல் கேட்க, மனத் திரையில் மீண்டும் மீண்டும் அவரது கருத்தோட்டத்தை, திரையிட்டுக் கொண்டே இருந்தேன்!
இம்மாத முதல் வாரத்தின் வியாழக்கிழமை; நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகே உள்ள ஒரு ஊர். காலை, 5:30க்கு அங்கிருந்து கிளம்பினேன்; கிளம்பும் நேரம் நல்ல மழை! 120 கி.மீ., வேகத்தில், சென்னையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தேன்; வழியில் ஆங்காங்கே, 'ஹால்ட்' உண்டு.
உளுந்தூர்பேட்டையில் இருக்கும் மோட்டலில், 3:00 மணி அளவில், டீ சாப்பிட இறங்கினேன்.
அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்திருப்பேன்; நடு ரோட்டில், 'ஆக்சிடென்ட்!' ரத்த வெள்ளத்தில் கிடந்தார் நடுத்தர வயது மனிதர் ஒருவர். மோதிய வண்டியை அருகே காணோம்.
நாகரிக உலகில் மனித மனம் கல்லாகி, இரும்பாகி, இரக்கமில்லாமல் போய் விட்டதே என, மற்றவரைப் பற்றியும், என்னைப் பற்றியும், நினைக்க வைத்த சம்பவம் இது!
தூரத்தில் வரும்போதே இக்காட்சியை கண்ட நான், வண்டியின் வேகத்தை குறைத்தேன். சிலர் வண்டியை நிறுத்த சைகை காட்டினர். விபத்து காட்சியை பார்த்தபடியே வண்டியை நிறுத்தாமல், சென்றேன். 7:30 மணிக்கு சென்னையில் இருக்கும் அப்பாயின்மென்ட் நினைவு ஒருபுறம்; விபத்து கேஸ்களில் உதவ சென்று, நம் மீதே பழி போட்ட முன் அனுபவம் ஒருபுறம்... வண்டியை நிறுத்தாமல் செல்லத் தூண்டியது; என் மீதே எனக்கு கோபமும்
வந்தது.
மேலும், கொஞ்ச தூரம் சென்று இருப்பேன். அரசு போக்குவரத்துக் கழக லாரி ஒன்று, மிக மெதுவாகச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அந்த லாரியின் ஓட்டுனர் கை அசைத்து, என் வண்டியை நிறுத்த சைகை செய்தார். வண்டியின் வேகத்தை குறைப்பதற்கு முன், லாரியில் இருந்து காவல் அதிகாரி ஒருவர் குதித்து, என் வண்டியை நிறுத்தினார். வேகமாக கதவை திறந்து உள்ளே அமர்ந்து, 'சார்... கொஞ்சம் வேகமாகப் போங்க... 'கன்டெய்னர்' லாரி ஒன்று, ஒரு ஆளை மோதிட்டு நிற்காம போகுது...' என்றார்.
எனக்காக பாடிக் கொண்டிருந்த, 'பெரி கோமா' வாயை அடைத்து, குளிர் சாதனத்தை அணைத்து, கியரை மாற்றி, வேகம் எடுத்தேன். 'அந்த ஆளை ஆஸ்பத்திரியில சேர்க்க ஏற்பாடு செய்துட்டீங்களா?' எனக் கேட்டேன். புலம்ப ஆரம்பித்து விட்டார்... 'இந்த சாலையில, என் ஸ்டேஷனுக்கு,
15 கி.மீ., வரை ரேஞ்ச் இருக்கு; இதனால், வாரத்தில நான்கு நாட்கள் ராத்திரி தூக்கம் கிடையாது. இதே பேஜாராப் போச்சு! இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்புறது என் வேலை இல்ல; குற்றவாளியைப் புடிக்கணும்...' என, அதிகாரி கூறியதும், எரிச்சல் தான் வந்தது.
ஒரு வழியாக அந்த லாரியை பிடித்தவர், எனக்கு நன்றி கூறினார். என் மன உளைச்சல் தீரவில்லை. தவறு செய்துவிட்ட உள் உணர்வுடன், சென்னையில் இருக்கும், 7:30 அப்பாயின்மென்ட்டை உதறி, வண்டியை மீண்டும் ஸ்பாட்டுக்கு திருப்பினேன். நான் போய் சேருமுன், மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருந்தனர்.
இறுகி கல்லாகிய இரக்கமற்ற நெஞ்சங்கள், 99 இருந்தால், அதில் ஒன்று அவற்றிலிருந்து மாறுபட்டே இருக்கிறது; அதனால் தான் மழையும் பெய்கிறது. இதுவே, இயற்கையின் நியதி என, எண்ணியபடி திரும்பினேன். மிக நீண்ட நேரத்திற்குப் பின்,
'பெரி கோமோ'வை பாட விட்டேன்!
