தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.சங்கரநாரயணன், திருப்பூர்: 'கேட்டரிங் டெக்னாலஜி' படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமா?

மனித இனம் இருக்கும் வரை, தீனியின் தேவை குறையவே குறையாது. அதனால், இப்படிப்புக்கும் மதிப்பு குறைய போவதில்லை. இன்ஜினியரிங் படித்தவர்கள் வேலை இல்லாமல் இருப்பதைக் காண்கிறேன்; ஆனால், கேட்டரிங் படித்தவர்கள் வேலை இல்லாமல் சுற்றுவதை பார்க்கவே இல்லை!

எம்.ஆகாஷ், பொள்ளாச்சி: எனக்கு மணமுடிக்க பார்த்திருக்கும் பெண்ணுக்கு, படிப்பும், சம்பளமும் என்னை விட அதிகம்; என்ன செய்வது?

இது போன்ற பெண்கள் பெரும்பாலும், தமது அந்தஸ்தை நினைத்து கர்வம் கொண்டு, மற்றவரை மதிக்காமல் போகும் குணம் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். அதற்கு, அவர்கள் கற்ற கல்வி உதவும். நீங்கள் தான், உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்!

எப்.இஸ்மாயில், சோத்துப்பாறை: உணர்ச்சிகளை எப்போது அடக்க வேண்டும்?

கோபம் உச்சந்தலைக்கு ஏறும் போது! அப்போது எடுக்கப்படும் முடிவுகளில் நிதானமோ, விவேகமோ இருக்காது; வேகம் தான் இருக்கும். இந்த வேகத்தின் பின் விளைவு, மிகுந்த வருத்தத்தில் கொண்டு விடும்.

எம்.தேவசகாயம், கரூர்: உலகமெங்கும் குடியேறியுள்ள மலையாளிகள் போல, வேறு மொழி பேசும் இந்தியர் எவர், வெளிநாடுகளில் அதிகம் குடியேறி உள்ளனர்?

பஞ்சாபிகள்! ஆங்கிலம் பேசும் நாடுகளில் மட்டு மல்லாமல், மொழியே தெரியாத இத்தாலியில் கூட, 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குடியேறி, அம்மொழியை கற்று, அங்கே வாழ்கின்றனர்!

எம்.சச்சிதானந்தன், மேட்டுப்பாளையம்: ரூபாய் நோட்டுகளில், காந்திஜி உருவம் தவிர, வேறு யாருடைய உருவத்தையும் அச்சடிப் பதில்லையே...

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்காதீர்கள். இதுவரை அரசியல்வாதி களின் மனதில் இந்த எண்ணம் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். வெறும் ஸ்டாம்புடன் நிற்கிறது. நீங்கள் ஐடியா கொடுத்து விட்டால், வட்ட செயலாளர் துவங்கி, பேட்டை தாதா வரை படம் போடச் சொல்லி, உண்ணாவிரதம் இருந்து விடப் போகின்றனர்!

ஜெ.எஸ்.ராஜா, அரண்மனைபுதூர்: பிரச்னைகளே இல்லாமல் வாழ முடியுமா?

அப்படிப்பட்ட வாழ்வில், 'த்ரில்' இல்லை; போரடித்து விடுவதுடன், சிந்தனை மழுங்கிப் போய் விடும். மூக்கு என்று ஒன்று இருந்தால், சளி இருக்கத்தான் செய்யும் என்பார்களே... அது போல, பிரச்னைகளுடன் வாழ்வதும், அதை சமாளிப்பதும் தான் வாழ்க்கை. பிரச்னைகளைக் கண்டு பயந்து ஓடாமல், அதை சமாளிக்கும் திறனை, மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

ஒய்,எம்.ஆராதனா, திருவள்ளூர்: சிக்கனமாக இருக்க நினைக் கிறேன். அக்கம், பக்கத்து வீட்டு பெண்கள் கவிழ்த்து விடுகின்றனரே...

முன் யோசனை இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்... அது, உங்களிடம் அறவே இல்லை. வீண் ஜம்பம், டாம்பீக எண்ணம் மனதில் ஓங்கியுள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்; யாராலும் உங்களை கவிழ்க்க முடியாது!

ஜெ.எஸ்.கங்காதரன், சென்னை: நேரத்தை வீணாக்கி, வேலை செய்யவிடாமல் தடுக்கும், 'மேதாவி'களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

அப்படிப்பட்ட, 'மேதாவி'களிடம் உங்களுக்கு ஏதோ, 'சாப்ட் கார்னர்' இருக்கிறது. 'இவன் உதவி என்றேனும் வேண்டியது இருக்கும்...' என, கருதுகிறீர்கள். அதனாலேயே, சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறீர்கள். இல்லை என்றால், ஒரே வார்த்தை, 'எனக்கு வேலை இருக்கிறது... அப்புறம் பார்ப்போம்...' என, சொல்லிவிட மாட்டீர்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us