PUBLISHED ON : ஜூலை 16, 2017

மன தைரியம் வேண்டுமா?
என் நெருங்கிய நண்பர்களில் ஒருவன், அவ்வப்போது, 'எனக்கொரு சவால்...' என்று, அவனுக்கு வந்த ஏதாவது ஒரு சிக்கல் பற்றி சொல்வான். 'இப்பிரச்னையை எப்படி சமாளிக்கப் போற...' என்றால், 'இதை பிரச்னைன்னு சொல்லாதடா; சவால்ன்னு சொல்லு...' என்பான்.
இதுபற்றி அவனிடம் கேட்டதற்கு, 'பிரச்னை இல்லாத மனுஷனே இல்ல... பிரச்னைன்னு நினைச்சோம்ன்னா கவலையும், பயமும் தான் வரும். இதனால், பிரச்னைகளை சரியான முறையில் அணுக முடியாமல், நாம் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காததுடன், தோல்வியில் முடிந்து விடும்.
'அதேசமயம், பிரச்னைகளை சவால்களாக நினைத்தால், தன்னம்பிக்கையும், தைரியமும் தானாகவே வந்துவிடும்; அது, சுறுசுறுப்பை கொடுத்து, வெற்றியை தேடித்தரும்...' என்றான்.
தற்போது, நானும், பிரச்னையை சவால் என்று சொல்ல பழகிக் கொண்டேன்.
— ஆர்.பிரபு, கோவை.
திறமையை பாராட்டுங்கள்!
முகநூலில், கவிதைகள் எழுதி, 'போஸ்ட்' செய்யும், என் தோழியை கடந்த வாரம் சந்தித்தேன்.
சமீபகாலமாக அவளின் படைப்புகள் வெளிவராததால், ஏன் என்று விசாரித்தேன். அதற்கு, என்ன தான் பெண்கள் முன்னேற்றம் என்று, வாய் கிழிய பேசினாலும், இன்னமும், பெண்களை தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் போக்கு போகவில்லை. காதல் கவிதைகள், 'போஸ்ட்' செய்தால், அது, அவளின் சொந்தக் காதல் என்று நினைத்து, 'இன்பாக்சில்' வந்து தொந்தரவு செய்வதாகவும், வேறு சில ஆண்களோ, அதை, 'அட்வான்டேஜ்' ஆக எடுத்து கொள்வதாகவும் கூறி, வருத்தம் அடைந்தாள்.
திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களை, உங்கள் சகோதரியாக எண்ணாவிட்டாலும், நல்ல தோழியாக எண்ணி, ஊக்குவிப்பு தாருங்களேன் ஆண்களே!
— ம.ஜெயமேரி, சிவகாசி.
தூய்மை இந்தியா கடை!
நான், தினமும் பள்ளி சென்று வரும் வழியில், புதிய ஸ்டேஷனரி கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. அக்கடையின் உரிமையாளர், அக்கடைக்கு, 'தூய்மை இந்தியா' என்று பெயர் வைத்து, கடையின் முகப்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் விளக்கப் படமும் வைத்திருந்தார்.
அக்கடைக்கு வந்து போகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அத்திட்டத்தின் பயனையும், அவர்களின் கடமையையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதைப் போல், நாமும், அரசின் திட்டங்களை, மற்றவர்களின் பார்வைக்கு கொண்டுச் செல்ல, நம்மால் முடிந்த முயற்சியை எடுக்கலாமே!
— ஜெ.ராமகோபாலன், தேனி.
