PUBLISHED ON : ஜூலை 16, 2017

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.
மருதநாட்டு இளவரசி படத்தில், ஜானகியுடன் சேர்ந்து நடித்த போது, எங்களிடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது.
நான், ஜானகியை மணந்து கொள்ள பிடிவாதமாக இருந்த நேரம் அது... ஜானகியின் உறவினரும், கார்டியனுமாக இருந்தவர், அதை எதிர்த்து, நான், பணத்திற்காகவே ஜானகியை மணக்க விரும்புவதாக நம்பினார்.
அது குறித்து பேச, என்னை அழைத்திருந்தார்.
மகிழ்ச்சியோடு சென்றேன்; 'ஜானகியை எனக்கு மணமுடித்து வைக்க சம்மதம் அளிப்பதாகவும், அதற்கு நான் சில நிபந்தனைகளுக்குட்பட வேண்டும்...' என்று கூறி, 'டைப்' செய்து வைத்திருந்த, 'அக்ரிமென்ட்'டை எடுத்துப் படித்தார். அதில், எழுதியிருந்தது இதுதான்...
'திருமணத்திற்கு பின்பும் அவள் தொடர்ந்து நடிக்க, சம்மதிக்க வேண்டும். அத்துடன், நாங்கள் இருவரும், பத்தாண்டுகளுக்கு, அவர் எந்தெந்த படங்களில் எங்களை சேர்ந்தோ, தனியாகவோ நடிக்கச் சொல்கிறாரோ, அவற்றில் நடிக்க வேண்டும். இதற்கு, நான் சம்மதித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், ஜானகியை எனக்கு மணம் செய்து கொடுக்க தயார்...' என்று ஒப்பந்தம் எழுதியிருந்தார்.
முதன்முதலில், நான், ஜானகியை மணக்க விரும்புவதாக அவளிடம் சொன்ன போதே, 'திருமணத்திற்கு பின், நடிப்பு தொழிலிலிருந்து விலகி விட வேண்டும்...' என்பது தான்!
காரணம், அவளுக்கு நடிப்பதில் சிறிதும் விருப்பமில்லை; இல்லத்தரசியாக மட்டும் இருக்கவே விரும்பினாள்.
கார்டியனின் நாற்காலிக்கு பின் நின்று, என்னையே பார்த்தபடி இருந்தாள், ஜானகி.
அவர் படித்த நிபந்தனைகளை கேட்டதும், கோபத்துடன் அவரை முறைத்து, 'என்னை உங்க அடிமையின்னா நினைக்கிறீங்க...' என்றேன்.
என் கோபத்தை கவனித்த ஜானகி, கண்ணில் நீர் தளும்ப, 'பேச வேண்டாம்...' என்று சைகை செய்தாள்.
அதைக் கண்டதும், எனக்கு மேலும் கோபம் அதிகமாயிற்று. அதற்குள், கார்டியனே, 'ஜானகியோட பணத்துக்கு நீங்க ஆசைப்படலேன்னா, இந்த ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டா என்ன... அவளை உங்க இஷ்டத்துக்கு பயன்படுத்தி, அவ சம்பாதிக்கிறத அனுபவிக்கலாம்ன்னு நினைச்சீங்கன்னா, அதுக்கு நான் எப்படி சம்மதிக்க முடியும்...' என்றார்.
'ஜானகியை நடிக்க வைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கும் நிலையில், அவளுடைய பணத்தில் வாழ விரும்புகிறேன் என்று, நீங்கள் எப்படி நினைக்கலாம்...' என்றேன்.
ஜானகி, அவர் பின்னாலிருந்து சைகை காட்டி, 'சரின்னு சொல்லுங்க; நாளைக்கு பேசுவோம்...' என்றாள்.
'நான் கணவனாக விரும்பினேனே தவிர, அடிமையாக விரும்பல; வர்றேன்...' என்று சொல்லி, வேகமாக அறையை விட்டு வெளியே வந்தேன். என்னை பின்தொடர்ந்து ஓடி வந்த ஜானகி, 'கொஞ்சம் பொறுமையாயிருங்க; நான், அவர்கிட்டே பேசி, எப்படியாவது சம்மதிக்க சொல்றேன். நாலு பேர் கேட்டா, அவர் சொல்றது நியாயம்ன்னு தானே சொல்வாங்க... சம்மதிச்சுடுங்க; கையெழுத்து போட்டா என்ன... நான் நடிச்சா தானே...' என்று, கண் கலங்க கெஞ்சினாள்.
நான் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.
இது நடந்து சில மாதங்களுக்கு பின், தன் கார்டியனிடம் விவாதித்து, புதியதொரு முடிவுக்கு, அவரும் சம்மதித்து விட்டதாக கடிதம் எழுதியிருந்தாள், ஜானகி.
அவர், 'மருதநாட்டு இளவரசி படம், இரண்டொரு மாதங்களில் முடிந்து விடும்; அப்படி ஒருவேளை முடியாவிட்டாலும், இன்னும் மூன்று மாதங்களுக்கு,
திருமண விஷயத்தை பற்றி, இருவரும் பேசக் கூடாது. மூன்று மாதங்களுக்கு பின்னும், நீங்களிருவரும் திருமணம் செய்ய விரும்பினால், தடையேதும் சொல்வ தில்லை...' என்று, உறுதி அளித்திருக்கிறார்.
அந்த மூன்று மாதம், திருமண பேச்சே பேசக் கூடாதென்ற அவருடைய நிபந்தனைக்கு, இவளும், எதிர் நிபந்தனையாக, அந்த மூன்று மாதங்களுக்கு இடையில், எந்த புதிய படங்களிலும், தன்னை ஒப்பந்தம் செய்ய கூடாது என்று, கூறியுள்ளாள். இதை, அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தாள், ஜானகி.
அதன்பின் தான், எப்படியும் திருமணத்திற்கு அனுமதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
படப்பிடிப்புகளில், கார்டியனை சந்திக்கும் போதெல்லாம், நான், அவரை வென்று விட்டது போன்று அவரைப் பார்ப்பேன்; ஆனால், அவரோ, எதுவுமே நடக்காதது போல் நடந்து கொண்டார்.
எப்போதும் போல் சிகரெட்டுடன், நிமிர்ந்த நடையோடு, அங்குமிங்கும் செல்வார். குறிப்பிட்ட பொறுப்புகளில் இருப்பவரிடம் மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார்... போவார். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.
இந்நிலையில், 'பல தார தடைச்சட்டம் இன்னும் இரண்டரை மாதங்களில் தமிழகத்தில் சட்டமாக்கப்பட போகிறது...' என்று வந்த எதிர்பாராத சேதி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நானோ மணமானவன்; மனைவி சதானந்தவதி நோய்வாய்ப் பட்டிருப்பினும், உயிரோடு இருக்கிறாள். சதானந்தவதி உயிரோடிருக்கும் போது, ஜானகியை எப்படி மணக்க இயலும்... மூன்று மாதங்களுக்கு பின் தான் திருமணம் என்று, ஜானகியிடம் அவர் சொன்னது, இந்த தடை சட்டம் வரும் என்று தெரிந்த பிறகா அல்லது இது எதிர்பாராத நிகழ்ச்சியா என்று குழம்பி, எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தேன்.
இதை, ஜானகிக்கு தெரிவிக்க வேண்டும் என்று துடித்தேன். நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிபந்தனைகளில், இந்த படம் முடியும் வரை, நாங்கள்
இருவரும் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது கூட, அதற்குரிய வசனங்களை தவிர, சொந்த பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை என்பதும் ஒன்றாகும்!
ஜானகி, தன் பாதுகாப்பில் இருக்கும் போது, அவள், வேறு ஒரு நபருடன் காதல் உறவு கொண்டு பேசுவதும், அதை அறிந்த பிறகும், தான் அதை தடுக்காது, அவளுக்கு துணை வருவதும், தன், தன்மானத்திற்கு பெரிய இழுக்கு என்று எண்ணினார், கார்டியன். அதை அவளிடமே சொல்லி, 'என்னை தலைகுனிய வைக்கிறாயே... நான், உன் மானத்திற்கு பாதுகாப்பு தர வேண்டியவன்; ஆனால், உன் மானத்தை நீ இழந்து விட்டதாக பலர் பேசும் சூழ்நிலையை உருவாக்கி, அதற்கு, நான் காவல் இருக்கிறேன் என்று, என்னையும் கேலி பேச வைக்கிறாயே...' என்று, வேதனையோடு கேட்டாராம்.
அதன்பின், சில நாட்களுக்கு பின் வந்த கடிதம், என்னை மேலும் திடுக்கிட வைத்தது. ஜானகியை பலவந்தமாக என் பாதுகாப்பில் வைத்திருப்பதாக, போலீசில் புகார் கொடுக்கப் பட்டிருப்பதாகவும், என்னை கைது செய்ய, 'வாரன்ட்' வாங்க ஏற்பாடுகள் நடைபெறு வதாகவும், அக்கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது.
திருமணமாகிய ஒரு பெண்ணை, நான் அபகரித்து, என் பாதுகாப்பில் வைத்திருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, என்னை கைது செய்து, வழக்கு போடச் செய்யவும், மருத நாட்டு இளவரசி படப்பிடிப்பை நிறுத்தி விடவும் முயலுவதாக அறிந்தேன்.
அப்போது, பணத்தின் பலமோ, பெரிய அதிகாரிகளின் சிபாரிசோ, புகழின் பாதுகாப்போ எதுவும் அற்ற நிலையில் இருந்தேன்.
இருப்பினும், அத்தனை சோதனைகளையும் கடந்து, என் மனைவி சதானந்தவதியின் அனுமதியுடனும், குடும்பத்தினரின் ஆசியுடனும், நல்ல நண்பர்களின் உதவியுடனும், ஜானகியை என்னுடையவளாக்கிக் கொண்டேன்.
—- தொடரும்.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை.
