PUBLISHED ON : ஜூலை 16, 2017

இந்த வாரத்தில், விசேஷமாக யாரையும் சந்திக்காததால், கேட்காததால், படித்துச் சுவைத்த சமாசாரங்கள் மட்டுமே எழுதப் போகிறேன்...
அன்று, அலுவலக நூலகத்தை துழாவினேன். ஆகஸ்ட், 1970 - வார இதழ் ஒன்று, கையில் கிடைத்தது. அந்த இதழில், எம்.ஜி.ஆர்., பேட்டி ஒன்று, இடம் பெற்றிருந்தது.
பேட்டியில் இருந்து கேள்வியும், பதிலும் இதோ...
கேள்வி: மொழி, இனம் மற்றும் மதத்தால் பிரிந்து கிடக்கும் இந்தியாவை ஒன்றுபடுத்த கம்யூனிசத்தால் தான் முடியும் என்பது என் கருத்து; இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: முதலில், கம்யூனிசம் என்றால் என்ன என்பதை, கம்யூனிச கொள்கைகளின் அடிப்படையில் உள்ள ரஷ்யா, சீனா, செக்கோஸ்லோவேகியா, போலந்து போன்ற நாடுகளில், விளக்கி, பிரசாரம் செய்து ஒற்றுமைப்படுத்திய பின், இந்தியாவுக்கு வாருங்கள்.
நான், மீண்டும் சொல்கிறேன்... அண்ணாதுரையின் சமதர்ம கொள்கை ஒன்றினால் தான், மொழி, ஜாதி, மதப் பிரச்னை, சமுதாய சீர்கேடுகள், ஏற்றத்தாழ்வு போன்ற எதிர்ப்புகளையெல்லாம் பொடிப் பொடியாக்கி, மக்கள் நலன், உலக நல்வாழ்வு என்ற ஓர் எல்லைக்குள் மனித சமுதாயம் சென்றடைய முடியும்.
— பின்னர், எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்த போது, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம் தான், அ.தி.மு.க., கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாராம்.
கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர், சக்தி வசந்தன்; அவர் ஒரு நூலில் கூறியது: ஒருமுறை கண்ணதாசன், என்னிடம், 'ஒரு தடவை, சம்பத்தும், அண்ணாதுரையும் சென்னையிலிருந்து காரிலேயே டில்லிக்கு போயிருக்காங்க. வடமாநிலங்களில் எல்லாம் வறுமையையும், மதுப்பழக்கத்தின் கோர தாண்டவத்தையும் பார்த்திருக்காங்க.
'இதில், மதுவிலக்கு உள்ள மாநிலம், இல்லாத மாநிலம் என்ற பேதமே இல்லை. 'விலக்கு' இல்லாத மாநிலத்தில் நல்ல சாராயமும், விலக்கு உள்ள மாநிலத்தில் கள்ளச்சாராயமும் இருந்துள்ளது.
'இதுபற்றி, அண்ணாதுரையிடம், 'இந்த நாட்டில் மதுவிலக்கு சட்டம் வெற்றிபெறும் என்று நினைக்கிறீர்களா...' என்று கேட்டாராம், சம்பத்.
'அதற்கு அண்ணாதுரை, 'வெற்றி பெறுமா, பெறாதா என்ற கேள்விக்கே இங்கு இடமில்ல; இந்த நாட்டிற்கு மதுவிலக்கு சட்டம் அவசியம் தேவை...' என்றாராம்.
இருவருக்கும் கடும் வாக்குவாதம்.
ஒரு கட்டத்தில் சம்பத், 'அண்ணா... நீங்க, காந்திஜியின் தத்துவ தாக்கத்தால் இப்படி பேசுறீங்க... மதுவிலக்கு நடைமுறைக்கு ஒத்து வராது. அது, அவர்களுக்கும் தெரியும்; மேலை நாடுகளில் இதை ஒரு விஷயமாக பொருட்படுத்துவதேயில்ல. இங்கே தான் ரொம்ப அலட்டிக்கிறாங்க. இதை, நீங்க கூட ஆதரிப்பது தான் எனக்கு வியப்பாக இருக்கு...' என்றாராம்.
'அண்ணாதுரை பொறுமையாக, 'சம்பத்... மேலை நாடுகளில், ஒரு சிலரைத் தவிர, எல்லாருமே மது அருந்துவர் என்பது எனக்கும் தெரியும். ஏன், ஒவ்வொரு நாட்டிற்குமே, அவர்களுக்குப் பிடித்தமான தேசிய பானமே உண்டு. பிரான்சில், 'ஷாம்பெயின்' ரஷ்யாவில், 'வோட்கா' அமெரிக்காவில் விஸ்கி, பிராந்தி, பீர் என்று எல்லாவற்றையும் கலந்து, 'காக்டெயில்' என்று குடிக்கின்றனர்.
'அங்கெல்லாம் வக்கீல் - நீதிபதி, டாக்டர்கள் - நோயாளிகள் என, எல்லாருமே குடிப்பர். அங்கே, பல விஷயங்களில் ஆண் - பெண் பேதமில்லாதது போலவே, இதிலும் பேதமில்லை. அத்துடன், இந்த விஷயத்தில் அவர்களுக்கு எந்த குற்றவுணர்வும் இருப்பதில்லை.
'காரணம், அவர்களுக்கெல்லாம் முறையாக குடிக்கத் தெரியும். மது அருந்துவதில் அதை அருந்தும் அளவை பொருத்து தான், அதன் விளைவுகள் என்பதில், அவர்களுக்கு மிகுந்த எச்சரிக்கை உண்டு.
'ஆனால், நம்ம நாட்டுக்காரன் கதை அப்படியல்லவே... இங்கே, எப்படி படிக்கத் தெரியாதவர்களின் தொகை அதிகமோ, அப்படித்தான் குடிக்கத் தெரியாமல் குடிப்பவர்களது தொகையும் அதிகம்.
'இங்கே சாதாரணமாக ஒருவன் குடிக்கத் துவங்கினால், போதையால் குடை சாய்ந்து விழுந்தால் தான் அவனுக்குத் திருப்தி. அப்போது தான் அவனைப் பொறுத்தவரை மோட்சம்...
'இப்படிப்பட்ட மொடாக் குடிகாரர்கள் மலிந்த ஒரு தேசத்தில், சட்டம் மற்றும் போலீசாரின் துணை கொண்டு கட்டாயப்படுத்தி, அவர்களை மதுவிலிருந்து விடுவிப்பது தவறென்று நினைக்கவில்லை. எனவே, இது, காந்தியத் திட்டமென்பது
ஒரு வகையில் சரி என்றாலும், உண்மையில் இது மனிதநேயத் திட்டமே...' என்று அண்ணாதுரை சொன்னதாக நினைவு
கூர்ந்தார், கண்ணதாசன்.
'கல்கண்டு' இதழ் ஆசிரியர், மறைந்த தமிழ்வாணனின் நண்பர்களில் ஒருவரான, லியோ ராமலிங்கம் என்பவர் எழுதிய, 'நீங்காத நினைவுகள்' என்ற புத்தகத்திலிருந்து...
அரை நூற்றாண்டு வாழ்ந்து, ஏராளமான நூல்களை எழுதிக் குவித்த புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன், இவர், என் முதல் நூல் வெளியீட்டு விழாவிற்கு, தம் செலவில் வந்து பாராட்டுரை வழங்கினார்.
பொதுவாக, சென்னையில் இருக்கும் பிரமுகர்கள், நம் ஊருக்கு வரும்போது நம்மிடம் நன்கு பழகுவர்; அங்கு சென்றால் கண்டுகொள்ள மாட்டர். இவரோ இதற்கு விதிவிலக்கு. எப்போதும் எளிமையாகப் பழகுவார்; விருந்தோம்பும் பண்பு இவரிடமுள்ள தனிச்சிறப்பு.
இவர் எழுத்தைப் படித்து, சிகரட் பிடித்துக் கொண்டிருந்த நான், சிகரட் பிடிப்பதை நிறுத்தினேன். ஆனால், இவரே இப்பழக்கத்திற்கு ஆளானதை எண்ணி வருந்தி, அவரிடமே குறிப்பிட்டதுண்டு.
இளமையில் அவர் மரணம் அடைய அது ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்!
— என்ன காரணத்தால், யாரால் இந்த பழக்கத்திற்கு ஆளானார் தமிழ்வாணன்... 'குருஜி' லேனாவிடம் தான் கேட்க வேண்டும்!
