sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 12, 2017

Google News

PUBLISHED ON : நவ 12, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமக்கு நாமே திட்டம் இப்படியும் செய்யலாம்!

என் தந்தை நினைவு தினத்தில், திதி கொடுக்க, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு, கிராமத்தில் என்னுடன் படித்த நண்பனை சந்திக்க நேர்ந்தது. ஜெர்மனியில் பொறியாளராக பணிபுரியும் அவன், 'அடுத்த மாதம், என் தாயாரின் நினைவு நாள் வருகிறது; அன்று, பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில், ஏதாவது நற்காரியம் செய்ய நினைக்கிறேன்; ஒரு யோசனை சொல்...' என்றான். நானும் சில ஐடியாக்களை கொடுத்தேன்.

உரிய அனுமதியுடன், நண்பர் வீடு இருக்கும் வார்டிலுள்ள பொதுக் குழாய்களுக்கு, திருகு குழாயும், மேடு, பள்ளமாக இருந்த சாலைக்கு சிமென்ட் கலவையும் போடப்பட்டது. எரியாத மின் விளக்குகள் சரி செய்யப்பட்டன. ஆசிட், பினாயில், பிளீச்சிங் பவுடர் போட்டு துப்புரவு பணியாளர்கள் மூலம், பொதுக் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்டது.

பஸ் நிலையத்தில், நேர அட்டவணையும், குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டது.

இப்பணிகள் நடைபெற்ற போது, 'மந்திரி யாரும் வருகின்றனரா...' என, ஆச்சரியப்பட்டனர், மக்கள். என் நண்பனுக்கு முழு திருப்தி ஏற்பட்டது.

எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்காமல், பிறந்த நாள், திருமணம் மற்றும் நினைவு நாளில், வசதி உள்ளவர்கள், இப்படி பொது சேவையில் ஈடுபட்டால், பல பிரச்னைகள் தீரும்!

— மாரி.தனுஷ்கோடி, மதுரை.

பயனளிக்கும் செயல்முறை பாடம்!

தோட்டத்தில் வீடு கட்டி குடியிருக்கும் என் நண்பரை பார்க்க, சமீபத்தில், அங்கு சென்றிருந்தேன்.

தேர்வு விடுமுறை என்பதால், நகரில் குடியிருக்கும் உறவுக்கார குழந்தைகள் சிலர், அவர் வீட்டிற்கு வந்திருந்தனர்.

மக்காச்சோளப் பயிருக்கு உரம் போட்டபடி இருந்தார் நண்பர். அதை, வரப்பில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள், 'மானாவாரின்னா என்ன...' என்று, அவரிடம் கேள்வி கேட்க, 'மானாவாரின்னா மழையை மட்டுமே நம்பி செய்யப்படும் விவசாயம்...' என்று விளக்கமளித்தவர், அதற்கு உதாரணமாக, பக்கத்தில் விளைந்திருந்த, கடலை மற்றும் பருத்திச் செடியையும், ஆமணக்கு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, தக்காளி, கத்தரி, மிளகாய் செடிகளையும் காட்டினார்.

மடக்கி உழவு செய்வதற்காக விதைக்கப் பட்டிருந்த தக்கைப்பூண்டு (தழை உரம்) பற்றிக் கூறியவர், அவுரி, சணப்பு, கொழுஞ்சி, தக்கைப்பூண்டு ஆகியன தழைச்சத்து தரும் தாவரங்கள் என விளக்கம் கொடுத்தார். அத்துடன், பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியவர், நீர் இறைக்கப் பயன்பட்ட கமலையையும் காட்டினார்.

பாட நுால்களில் உணவு தானியங்கள், தாவர வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பூச்செடிகள், சிறு தானியங்கள், பாசன முறைகள் பற்றி புரியாமலேயே படிப்பதும், பரீட்சை எழுதுவதும் வாடிக்கையாகி விட்டது.

மாணவர்கள், கிராமப் பகுதிக்கு சென்று, இவ்வகை தாவரங்களை நேரில் பார்க்க, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வேளாண்மையின் அவசியம், முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் மனதில் பதிவு செய்திட வேண்டும். செய்வரா!

— வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.

நேர்மை கடை!

என் மகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில், நியாய விலைக் கடை ஒன்றை அமைத்துள்ளார். அக்கடையில் மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், புத்தகம் போன்றவை கிடைக்கும். அதற்குரிய விலையை ஒரு அட்டையில் எழுதி வைத்திருப்பர். அந்த கடையை நிர்வகிக்க யாரும் கிடையாது.

மாணவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து, அதற்குரிய விலையை அங்கிருக்கும் உண்டியலில் போட்டுச் செல்வர். இதன் மூலம் வரும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து விடுவார், தலைமை ஆசிரியர்.

இதனால், மாணவர்களிடையே நேர்மை குணமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் வளர்கிறது. இதைப் பார்த்து நானும், மற்ற பெற்றோரும் தலைமை ஆசிரியரை வெகுவாக பாராட்டினோம்.

இதை, மற்ற பள்ளிகளும் பின்பற்றினால், குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கமும், நல்ல குணங்களும் ஏற்படுமே!

கா.சிவகுமார், சிவகங்கை.






      Dinamalar
      Follow us