தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுயதொழில் இருக்க பயமேன்!

சமீபத்தில், என் நண்பரின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, மேடை அலங்காரம், வீடியோ, விருந்து மற்றும் உறவினர்களை வாகனங்களில் அழைத்து வருவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர், பல இளைஞர்கள்.

'இந்த தொழில்களில் இவர்களுக்கு அனுபவம் இருக்காதே... சரியாக செய்கின்றனரா?' என்று, நண்பரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், 'அவங்க எல்லாரும் என் மகனோட (மணமகனின்) நண்பர்கள். கல்லுாரி படிப்பு முடிந்தவுடன், அவரவருக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் சில மாதம் பயிற்சி பெற்று, வங்கிக் கடன் பெற்று, தற்போது சொந்தமாக தொழில் செய்றாங்க. ஒருவன், வீடியோ கடை, இன்னொருவன் டிராவல்ஸ், மற்றொருவன் கேட்டரிங் சர்வீஸ் போன்ற வேலைகள செய்றாங்க.

'இவங்கள தவிர, இவர்களோட நண்பர்கள் பலர், மொபைல் போன், லேப்டாப் சர்வீஸ், சேல்ஸ், டிஜிட்டல் பிரிண்டிங், ஸ்டிக்கர் பிரிண்டிங்ன்னு பலவகை தொழில் செய்றாங்க. இப்ப, இணைய தளத்தில் அதற்கான வசதிகள் இருக்கிறதால, தங்கள் தொழில் தொடர்பான புதுமையான தகவல்களை அறிந்து, தொழிலை மேம்படுத்திக்கிறாங்க. இவங்க எல்லாரும், 'வாட்ஸ் - ஆப்' குரூபில் இணைந்துள்ளதால், தங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது வாய்ப்புகள் வந்தால், அதை, அவர்களுக்குள் பகிர்ந்துகிறாங்க. கிடைக்கும் வாய்ப்பில், சிரத்தையாக ஈடுபட்டு, சிறப்பாக செய்றாங்க...' என்றார்.

வாட்ஸ் - ஆப் போன்ற நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை, பொழுது போக்கிற்காக மட்டும் அல்லாமல், இப்படியும் பயன்படுத்த முடியுமா என வியந்து, அந்த இளைஞர்களை பாராட்டினேன்!

— தி.உத்தண்டராமன், சிவகாசி.

எந்த பேருந்து என்று தெரிய வேண்டுமா!

பெங்களூரிலிருந்து திருச்சிக்கு, இரவு நேர பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒரு கிராமப்புற பெரியவர் அமர்ந்திருந்தார். பேருந்து கிருஷ்ணகிரியை அடைந்ததும், நடத்துனர், 'பேருந்து பத்து நிமிடம் நிற்கும்...' என்றதும், பலர் இறங்கி, டீ குடிக்க சென்றனர்.

அந்த பெரியவரும், நானும் இறங்கினோம். அவர், தன் மேல் துண்டை, ஜன்னலில் கட்டி வெளிப்புறமாக தொங்கவிட்டு வந்தார். 'ஏன் துண்டை கட்டினீங்க...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நாம் காபி சாப்பிட்டு வருவதற்குள், நிறைய பேருந்துகள் வந்து நின்றிருக்கும்; இருட்டில் நாம் வந்த பேருந்து எதுவென்று அடையாளம் தெரியாது. துண்டை பார்த்து, கண்டுபிடித்து விடலாம்...' என்றார்.

காபி குடித்து வந்தபோது, அவர் சொன்னது போல, ஆறு பேருந்துகள் நின்றிருந்தன. துண்டை அடையாளம் வைத்து, பேருந்தில் ஏறினோம்.

கிராமத்தை சேர்ந்த, படிக்காதவரானாலும், அவருடைய சமயோசித புத்தியை எண்ணி, பாராட்டினேன்!

— பெ.ஹரிகிருஷ்ணன், திருச்சி.

பெயர் பொறித்ததால் குழப்பம் இல்லை!

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தோம்; நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியில், கயிறு கட்டி, ஈர துணிகளை காயப் போட்டிருந்தோம். காய்ந்த துணிகளை எடுக்கும்போது, டவல் மற்றும் உள்ளாடைகள் ஒரே மாதிரி இருந்ததால், பார்த்துப் பார்த்து, விசாரித்து எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால், நான், என் குடும்பத்தாரின் எல்லா உடைகளிலும், 'இன்ஷியல்' பொறித்திருந்ததால், எங்கள் துணிகளை தொலையாமலும், சிரமமில்லாமலும் எடுத்தேன். என் செயலை அனைவரும் பாராட்டினர்.

சுற்றுலா செல்லும்போது, மட்டுமல்லாமல், எப்போதும், உங்கள் துணியில் ஏதாவது அடையாளம் வைத்து, செல்லுங்கள்!

- ப்ரேமி கிரிஜா ராமநாதன், கோவை.

வெளியூரில் கையிருப்பு காணாமல் போய் விட்டால்...

உங்கள் உறவினரோ, நண்பர்களோ வெளியூரோ அல்லது சுற்றுலாவோ செல்கின்றனர்; செல்லும் இடத்தில் திடீரென, ஏ.டி.எம்., கார்டு உட்பட, பணப்பையை தவற விட்டு விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்... அவருக்கு, இங்கிருந்தே உதவ ஒரு வழி இருக்கிறது.

பணப் பையை தவற விட்டோர், அருகிலுள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையத்திற்கு சென்று, ஐ.எம்.ஓ., (இன்ஸ்டென்ட் மணி ஆர்டர்) அனுப்ப வேண்டும் என்று சொல்ல வேண்டும். இந்த சேவையில், 1,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பலாம்.

விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் தொகை மூன்றையும் நிரப்பி கொடுத்தால், ஒரு சீலிடப்பட்ட கவர் தருவர்.

அந்த கவரை பிரித்தால், உள்ளே, 16 இலக்க எண் இருக்கும். அந்த எண்ணை, யாரிடம் பணம் அனுப்ப சொல்ல வேண்டுமோ, அவருக்கு, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும். அந்த எண் என்னவென்று, கவரை கொடுத்த தபால் ஊழியருக்கு கூட தெரியாது.

யாருக்கு அவர்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பினார்களோ, அவர்கள், தங்கள் ஊரில் உள்ள பெரிய தபால் நிலையத்திற்கு சென்று, அங்கு, இதே போல் கொடுக்கப்படும் விண்ணப்பத்தில், இந்த, 16 இலக்க எண்களை எழுதி, பணத்தை கொடுத்தால் போதும்; பணம் கொடுக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்டவர், தாங்கள் இருக்கும் ஊரின் தபால் நிலையத்தில், அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

இது, 'வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர்' போலதானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், 'வெஸ்டர்ன் யூனியன்' வங்கி கிளைகள் இல்லாத இடங்களிலும், அஞ்சல் துறை அலுவலகம் உள்ளதால், அதன் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சேவை, இந்தியா முழுவதும், 40 ஆயிரம் இடங்களில், உள்ளது; தமிழகத்தில், 1,500 கிளைகளில் இந்த சேவை கிடைக்கும்.

சுற்றுலாவுக்கோ, அவசர வேலையாக வெளியூர் கிளம்பும்போதே, இத்தகைய சேவை, அந்த ஊரில் உள்ள தபால் நிலையத்தில் இருக்கிறதா என்று முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.

புஷ்பலதா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us