தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா (8)

ஆச்சி மனோரமா (8)

ஆச்சி மனோரமா (8)


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வைரம் நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தபோது, சென்னைக்கு வரவேண்டிய வாய்ப்பு கிட்ட, அம்மாவுடன் முதன் முறையாக சென்னைக்கு வந்தார், மனோரமா.

அப்போது, அவர், நாடக நடிகை என்பதிலிருந்து திரைப்பட நடிகை என்ற உயர்வை அடைய வேண்டும் என்ற ஆசையையும் சுமந்து வந்தார். அது, அவருள் மிகப்பெரிய கனவாகவும் உருப்பெற்றிருந்தது.

ஆரம்ப காலத்தில், அவருள் சினிமா ஆசை பெரிதாக ஊறியிருக்கவில்லை. நிறைய நாடகங்களில் நடிக்கத் துவங்கி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் கிடைக்கப் பெற்றதும், அவருள் சினிமா ஆசை துளிர்க்கத் துவங்கியது. சென்னைக்கு ரயில் ஏறியதும், அந்த ஆசை பிரமாண்டமாக வளர்ந்தது.

சென்னையில், எஸ்.எஸ்.ஆர்., (நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்) நாடக மன்றத்தின் சார்பில் நடந்த, மணிமகுடம் உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்ததன் மூலம், தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல், சென்னையிலும் கலக்க ஆரம்பித்தார், மனோரமா.

நாடகங்களில் நடித்தாலும், கிடைத்த நேரங்களில் எல்லாம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடுவதிலும், தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

இன்று யார் வேண்டுமானாலும், திரைப்பட துறையில் எளிதாக வாய்ப்பை பெறுவது போல, அன்று முடியாது; இவ்வளவு அதிகமாக அப்போது படங்கள் தயாரிக்கப்பட்டதும் இல்லை. எனவே, வாய்ப்புகளும் மிக குறைவாகவே இருந்தது.

நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும், இனிமேல், சென்னையில் இருப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்து, ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். மறுநாள் ஊருக்கு போகலாம் என்று, மூட்டை முடிச்சுகளை கட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, இவர்களை தேடி வந்தார், தயாரிப்பாளர், ஜானகிராமன்.

தன்னை அறிமுகப்படுத்தி, 'இன்ப வாழ்வு என்ற சினிமா தயாரிக்க இருக்கிறேன்; அந்த படத்தில் நடிக்க, உங்கள ஒப்பந்தம் செய்வதற்காக வந்திருக்கேன்...' என்றார்.

மனோரமாவிற்கு இது, இன்ப அதிர்ச்சியாக இருந்தது; ஊருக்கு கிளம்புகிற நேரத்தில் அதிர்ஷ்ட மழை பெய்கிறது!

'எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்றத்தின், மணிமகுடம் நாடகத்தில் நீங்க நடிச்சதை, எம்.ஆர்.ராதா பாத்திருக்கார்... அதில், உங்க நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இந்த நேரத்துல என்னோட, இன்ப வாழ்வுங்கற புதிய படத்துக்கு கதாநாயகியாக நடிக்க, ஒரு ஆள் தேவைன்னு சொல்லிட்டிருந்தேன்; அவர் தான் உங்கள, 'ரெக்கமண்ட்' செய்தார். அவரை வச்சுதான் இந்த படத்தை எடுக்கப் போறேன். என்ன சொல்றீங்க...' என்று கேட்டார்.

இப்படி ஒரு வாய்ப்பிற்காகத்தானே ஆசைப்பட்டார்... உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.

இதனால், மகிழ்ந்து போன ஜானகிராமன், முன்பணமாக, 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.

அது, 1958ம் ஆண்டு; அக்காலத்தில், 100 ரூபாய் என்பது, இப்போது, பல ஆயிரம் ரூபாய்க்கு சமானமாகும். அதிலும், அன்றைய நிலைமையில் இவ்வளவு பெரிய தொகையை அவர் பெற்றதே கிடையாது.

எனவே, மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார், மனோரமா.

கட்டி வைத்த மூட்டை முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, படப்பிடிப்பு முடிகிற வரை சென்னையிலேயே தங்குவது என்று முடிவானது.

அன்றிரவு, மனோரமாவிற்கு உறக்கமே வரவில்லை. தியேட்டர்களில், அகன்ற வெள்ளித் திரையில், தான் கதாநாயகியாக நடிக்கும், இன்ப வாழ்வு படம் ஓடுகிற மாதிரி கலர்கலராக கனவு வந்தது.

தன் தாயையும் இரவில் உறங்கவிட வில்லை. திரைப்படத்தில் நடிப்பதை பற்றி ஏதேதோ கேட்டுக் கொண்டே இருந்தார்.

அவ்வளவு ஆசை!

படப்பிடிப்பு என்னவோ வேகமாகதான் நடந்தது; அதில் நடிப்பது, நாடகத்தில் நடிப்பதை போல இல்லை என்றாலும், சந்தோஷமாகதான் இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விடுவார். கஷ்டப்பட்டு தன் திறமையை எல்லாம் கொட்டி நடித்து வந்தார். ஆனால், கடவுள் கணக்கு வேறாக இருந்தது; ஏதோ பிரச்னை என்று படம் பாதியிலேயே நின்று விட்டது.

'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்கிற மாதிரி, முதல் பட வாய்ப்பே இப்படி பாதியில் நின்று போனது மனோரமாவிற்கு மிகுந்த கவலையை அளித்தது. தன் திரைப்பட ஆசை, வெறும் கனவாகவே முடிந்து விடுமோ என்ற அச்சமும் தலைதுாக்கியது.

இனி, என்ன செய்வது என்று தாயும், மகளும் கவலையடைந்தனர். ஆனாலும், எப்படியும் திரைப்படத்தில் நடிக்காமல், ஊருக்கு திரும்பக் கூடாது என்ற முடிவை எடுத்தனர்.

இன்னொரு வாய்ப்பிற்காக முயற்சிகளை மேற்கொண்டனர்; அதுவும் வாய்க்கப் பெற்றது.

கவிஞர் கண்ணதாசன், ஊமையன் கோட்டை என்ற படத்தை தயாரித்தார்; அதில் நடிப்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

திரைப்படத் துறையில் தொடர்வதற்கு மற்றொரு சந்தர்ப்பம் கிடைத்தது, மனமகிழ்ச்சியை கொடுத்தது. கடவுளை வேண்டி, இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், என்ன ஒரு துரதிர்ஷ்டம்!

ஊமையன் கோட்டை, திரைப்படம் ஆரம்பத்திலேயே நின்று போனது.

சினிமாவில் நடிக்கும் பாக்கியமே தனக்கு இல்லையோ என்ற கவலை, மனோரமாவை ஆட்டிப் படைத்தது.

ஆண்டவனை நம்புவதை விட, வேறு என்னதான் செய்ய முடியும்!

தன் திரைப்பட ஆசையை வெற்றிகரமாக முழுமையடையச் செய்யுமாறு கடவுளிடம் இடைவிடாமல் பிரார்த்தனை செய்தார்.

இதையடுத்து, கவிஞர் கண்ணதாசனே, மாலையிட்ட மங்கை என்ற படத்தை தயாரிக்க ஆயத்தமானார்.

தொடர்ந்து அவரை சந்தித்த மனோரமா, அந்த படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, ஊமையன் கோட்டை படத்தில் நடித்து, அது நின்று போனதால், வாய்ப்பில்லாமல் இருப்பதை புரிந்துகொண்ட கண்ணதாசன், தன் புதிய படமான, மாலையிட்ட மங்கையில், மனோரமா நடிப்பதற்கு வாய்ப்பளித்தார்.

தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம்

சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

குன்றில் குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us