தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பத்திரிகை.காம்' என்ற, இணைய தளத்திற்காக, அந்துமணி அளித்த சிறப்பு பேட்டியின் கடந்த வார தொடர்ச்சி...

'தினமலர்' நாளிதழ் மீது, பா.ஜ., சார்பு முத்திரை இருக்கிறதே...

நிச்சயமாக இல்லை; எந்த ஒரு கட்சி, அமைப்பு, ஜாதி, மதச்சார்பும், 'தினமலர்' இதழுக்கு கிடையாது. இன்னும் சொல்லப் போனால், வெறும் வியாபார நோக்கம் என்பதே, 'தினமலர்' இதழுக்கு கிடையாது.

'தினமலர்' நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் இவ்விதழை துவக்கியது, தமிழர்களுக்கான உரிமைக்காகவே என்பது அனைவருக்கும் தெரியும். 'தமிழர்கள் பெருவாரியாக வாழும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பட்டில் இருந்த, நாஞ்சில் நாட்டை (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தமிழகத்துடன் இணைக்க வேண்டும்' என்ற, தமிழ் மக்களின் உரிமைக்குரலை வெளிப்படுத்த, துணிச்சலாக, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலேயே, 'தினமலர்' இதழை துவக்கினார். எங்களது நோக்கம், மக்கள் நலன் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.

ராஜீவ் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அப்போதைய காங்கிரஸ் அரசு, பத்திரிகைகளுக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தபோது, 'கறுப்பு சட்டம்' என்று, 'தினமலர்' உட்பட பல நாளிதழ்கள் கடுமையாக எதிர்த்தன. பின், அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது. சமீபத்தில், மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, அப்படியான ஒரு சட்டத்தை கொண்டு வந்தபோது, 'தினமலர்' உட்பட பல இதழ்கள், பெரும்பாலும் அதை கடுமையாக எதிர்க்கவில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பிரதமர் மோடி, அந்த சட்டத்தை உடனே திரும்பப் பெற்று விடுவார் என்று தெரிந்ததாலோ என்னவோ, பெரிய அளவில் யாரும் எதிர்க்காமல் இருந்திருக்கலாம். (சிரிக்கிறார்)

ஆனால், தொடர்ந்து, 'தினமலர்' நாளிதழ் மீது ஒரு குறிப்பிட்ட ஆதரவு முத்திரை இருந்து வருகிறது. முன்பு, எம்.ஜி.ஆர்., பின், ஜெயலலிதா, தற்போது, பா.ஜ.க., இது எல்லாம் ஜாதி என்கிற குறிப்பிட்ட ஒரு புள்ளியில் இணைவதை உணர்கிறீர்களா?

மக்கள் நலன் இன்றி, ஜாதி உட்பட வேறு எந்த உணர்வும், 'தினமலர்' நாளிதழுக்கு கிடையாது.

கடந்த, 1967ல் இருந்து, எடப்பாடி பழனிசாமி காலம் வரை, மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகளை, சிக்கல்களை எதிர்கொண்டு தான், 'தினமலர்' நாளிதழ் இயங்கி வருகிறது.

ஓர் உதாரணம் சொல்கிறேன்...

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், அவருக்கு ஆதரவான இதழ் என்று சிலர், 'தினமலர்' இதழை, வழக்கம்போல் முத்திரை குத்தினர். ஆனால், மாநில அரசின் தவறான நடவடிக்கைகளை, வழக்கம்போல் அம்பலப்படுத்தி வந்தது, 'தினமலர்' இதழ். இதனால், ஆத்திரமடைந்த மாநில அரசு, எங்களுக்கு அரசு விளம்பரங்கள் அளிப்பதை நிறுத்தியது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 'தினமலர்' இதழ் சார்பாக வழக்கு தொடுத்தோம்.

ஆனால், ஜெயலலிதா ஆதரவு இதழ், 'தினமலர்' என்ற பொய் பிரசாரத்தை, அந்த சிலர், அப்போதும் நிறுத்தவில்லை; நாங்களும் கவலைப்படவில்லை.

'தினமலர்' இதழ் உட்பட எல்லா நாளிதழ்களும் சாதாரண தாளில் வெளிவந்து கொண்டிருந்தபோது, எண்பதுகளின் நடுப்பகுதியில், 'தினமலர்' இதழ், தரமான தாளில், வித்தியாசமான பக்க வடிவமைப்பில் அசர வைக்கும் அச்சாக்கத்தில் வெளிவர ஆரம்பித்தது. 'தினமலர்' இதழுக்கு, அப்போதைய முதல்வர், எம்.ஜி.ஆர்., பெரும் நிதி உதவி அளித்தார் என்று ஒரு பேச்சு உண்டே...

அது வெறும் பேச்சு தான்;

எம்.ஜி.ஆர்., உட்பட, எவரும், 'தினமலர்' இதழுக்கு அப்படி நிதி உதவி எதுவும் அளித்ததில்லை. அளித்தாலும், 'தினமலர்' ஏற்றிருக்காது; ஏற்காது: ஏற்கப்போவதும் இல்லை.

நாளிதழுக்கு என்று கொள்கை, கோட்பாடு வைத்து செயல்படுகிறீர்கள்; மக்கள் நலனே முக்கியம் என்கிறீர்கள். எல்லா இதழ்களும் அப்படி இருக்கின்றனவா... அப்படி இல்லாத இதழ்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

எல்லா பத்திரிகையாளர்களும், மக்களுக்கானவர்களாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிகைகளுக்கு, ஏதோ ஒருவிதத்தில் பணப்பலன் இருக்கலாம்.

எல்லாரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதில்லை... ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கிறது... ஆகவே, அது குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை.

மக்களுக்கான நலனை முன்னிறுத்தாத இதழையும், மக்களுக்கான நலனை விரும்பும் இதழையும், மக்கள் ஒரே மாதிரிதான் பார்க்கின்றனர் என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா?

அப்படி இல்லை; உங்கள் கருத்து தவறு. மக்கள், தங்களுக்கான இதழை தேர்ந்தெடுப்பதில், கவனமாகவே இருக்கின்றனர். ஒருமுறை எங்கள் குடும்பத்தில், குறிப்பிட்ட ஒரு நாளிதழின் பெயரைச் சொல்லி, 'அதுபோல நம் இதழ் இல்லை...' என்று பேச்சு வந்தது.

அப்போது, நான் ஊரில் இல்லை; இந்த விவாதம் ஆசிரியர் கவனத்துக்கு வந்தது. உடனே, குறிப்பிட்ட அந்த நாளிதழ் போலவே, 'தினமலர்' முதல் பக்கத்தை வடிவமைக்கும்படி உத்தரவிட்டார், ஆசிரியர்.

கோவையில், கடையில், 'தினமலர்' இதழை கேட்டிருக்கிறார் பெரியவர் ஒருவர். எடுத்துக் கொடுத்தவுடன், 'இது வேறயாச்சே... நான், 'தினமலர்'தானே கேட்டேன்...' என்று திருப்பி கொடுத்திருக்கிறார். இதுபோல பல இடங்களில் நடந்தது. ஆக, 'தினமலர்' நாளிதழுக்கென்று தனித்துவம் உண்டு; தனித்துவமான வாசகர்கள் உள்ளனர்.

தொலைக்காட்சி மற்றும் இணையதள பயன்பாடு அதிகரிப்பால், அச்சிதழ்கள் விற்பனை பாதிக்கிறதா?

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அச்சிதழ்களின் விற்பனை சரிந்தாலும், இந்தியாவில் அச்சிதழ்கள், குறிப்பாக நாளிதழ்களின் விற்பனை உயர்ந்து இருக்கிறது. இதை, 'ஆடிட் பீரோ

ஆப் சர்குலேஷன்' என்ற அமைப்பு மிகத் தெளிவாக சொல்கிறது.

பருவமுறை இதழ்களின் விற்பனை சற்றே சரிந்திருக்கலாம். ஆனால், இன்று மட்டுமல்ல; என்றுமே நாளிதழ்களுக்கு தனி வாசகர் வட்டம் உண்டு. அது நீடிக்கும். ஆகவே, நாளிதழ்களின் ஆதிக்கம் தொடரவே செய்யும். அதே நேரம், தொலைக்காட்சி மற்றும் இணையதள இதழ்களின் ஆதிக்கமும் பெருகும்.

செய்தித் தொலைக்காட்சிகள் அதிகரித்துள்ள நிலையில், செய்தி மாசு அதிகரித்துள்ளதே...

ஆம்; குறிப்பாக, 'பிரேக்கிங் நியூஸ்' என்று வருகிற சத்தம், மிகுந்த எரிச்சலை தருகிறது; நான் பார்ப்பதே இல்லை. என்னைப் பொறுத்தவரை, செய்திக்காக, என்.டி.டி.வி., பார்ப்பேன்; மற்றபடி காமெடி சேனல்கள் தான், என், 'சாய்ஸ்!'

'தினமலர்' குழுமத்திலிருந்து, 'மலர் டிவி' என்று வெளி வர இருப்பதாக நீண்டநாட்களாக ஒரு பேச்சு இருக்கிறதே...

நீண்டநாள் திட்டம் அது. இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தின் முதல் சாட்டிலைட் சேனலாக வந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு நற்பெருமகனால் தடைபட்டது. ஆனாலும், தொலைக்காட்சி துறையிலும் தடம் பதிப்போம்.

சமூக வலைதளங்களில், 'தினமலர்' இதழ், கடுமையாக விமர்சிக்கப்படும்போது, என்ன நினைப்பீர்கள்?

மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நம் இதழை படித்து விட்டுதானே விமர்சிக்கின்றனர்! ஒரு இதழை படிப்பவர்களுக்கு, விமர்சிக்கவும் உரிமை உண்டு.

புதிய செய்தியாளர்களுக்கு நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன?

ஆசிரியரின் மகன் கிருஷ்ணமூர்த்தி, இதழியல் துறைக்கு வந்தபோது, சில அடிப்படை விஷயங்களை சொல்லிக் கொடுத்தார், ஆசிரியர். மற்றபடி, 'உனக்கு என்னென்ன புதுப்புது ஐடியாக்கள் தோன்றுகின்றனவோ அதை செய்...' என்றார். கொஞ்ச நாள் அந்த புது ஐடியாக்கள் ஆசிரியர் பார்வைக்கு வந்து போனது; இப்போது, முழுமையாக இயங்கி வருகிறார், கிருஷ்ணமூர்த்தி.

நீச்சலில் பலவகை உண்டு; ஆரம்பத்தில் அடிப்படை நீச்சலை கற்றுத் தருவர். பின், அவரவர் கற்பனை திறனுக்கு ஏற்ப, அவரவர் ஸ்டைலில் நீச்சல் அடிக்க வேண்டியது தான்.

'தினமலர்' முதலாமாண்டு நிறைவு நாளில், நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் குறிப்பிட்டதை இங்கே சொல்லலாம்...

'வகுப்புவாதிகள், மத வெறியர்கள், பிற்போக்கு கும்பல்கள், நாட்டை காட்டிக் கொடுப்போர், தமிழனத்துக்கு துரோகம் செய்வோர் எமது விரோதிகள்; இவர்களை முறியடிப்பதில், 'தினமலர்' நாளிதழ் முன்னணியில் நின்று பணியாற்றும்...'

இதுதான் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், நான் குறிப்பிட விரும்புவது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us