PUBLISHED ON : ஏப் 29, 2018

எஸ்.திருமலை, சென்னை: ஆம்னி பஸ் என்கின்றனரே... 'ஆம்னி' என்றால் என்ன அர்த்தம்?
'ஆம்னஸ்' என்பது பிரஞ்சு மொழி சொல்; இதன் பொருள், 'எல்லாருக்கும் பயன்படக் கூடியது' என்பதாகும். ஆம்னஸ் என்ற சொல்லில் இருந்து, 'ஆம்னி' என்ற ஆங்கிலச் சொல் உருவானது. எல்லாருக்கும் பயன்படக் கூடிய பஸ் என்பதைக் குறிப்பிட, 'ஆம்னி' என்கின்றனர்.
* எஸ்.பாண்டியராஜன், சீர்காழி: பேசியே காரியம் சாதிப்பவர்களையும், அடுத்தவர்களை ஏவியே காரியம் சாதிப்பவர்களையும் எப்படி அழைப்பது?
கெட்டிக்காரன், சிறந்த நிர்வாகி, கடுமையான போட்டி நிலவும் இந்த உலகில், பிழைக்கத் தெரிந்தவர்கள் என, அழைக்கலாம். நீங்கள் குறிப்பிடும், 'குவாலிட்டியை' வளர்த்துக் கொண்டவன் என்றும் சோடை போக மாட்டான்.
ஆர்.வான்மதி, கோவை: எதற்கெடுத்தாலும், எப்போதும், எவரிடமும் கத்துகிறேன்; இதை, நீக்க என்ன செய்வது?
உங்களிடம் தாழ்வு மனப்பான்மை குடி கொண்டுள்ளது; இது உள்ளவர்களே, பிறரை பார்த்து கத்திப் பேசுவர். நீங்கள் மனது வைத்தால், இக்குறையை போக்க முடியும்!
பி.பார்த்தசாரதி, விழுப்புரம்: மேல் நாடுகளிலும், இங்குள்ளது போன்ற, 'டிவி' பைத்தியங்கள் உண்டா?
உண்டு; ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல், நம்மை போன்றே விவசாய நாடு, அந்நாட்டின் ஜனத் தொகையில், 88 சதவீதம் பேர், 'டிவி' முன்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். இதனால், ஐரோப்பாவிலேயே சோம்பேறிகள் மிகுந்த நாடு என, பெயர் எடுத்துள்ளது, போர்ச்சுக்கல். நாம் அவ்வளவு மோசமாகவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
* பி.முருகன், காஞ்சிபுரம்: ஒருவனுக்கு நன்மையும், தீமையும் எப்படி நடக்கின்றன?
எவருடைய பேச்சில் நல்ல வார்த்தைகளும், சத்தியமும் இருக்கிறதோ, அவர்களுக்கு நன்மையே நடக்கும். நன்மையும், தீமையும் ஒருவருடைய நாவினால் நடப்பவை தான் என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்!
ஜி.இளங்கோ, திண்டுக்கல்: என் நண்பன் எப்போதும் பதவி, பட்டம், புகழுக்காக அலைகிறானே...
பட்டம், பதவி, புகழ் ஆகியவைகளில் எப்போதும் நாட்டம் கொண்டுள்ள உள்ளங்கள் உயரியதாய் இருக்காது; எனவே, உங்கள் நண்பனுடன் ஜாக்கிரதையாகப் பழகுங்கள்!
ஆர்.பரமேஸ்வரி, திருப்பூர்: நம் நாட்டு உணவு வகைகள், இங்கிலாந்து நாட்டில் மிகப் பிரபலம் என, லண்டன் சென்று வந்த என் தோழி கூறுகிறாளே...
உண்மைதான்! நம்மூர் மசாலாவிற்கு மயங்கி விடுகின்றனர், வெள்ளையர்கள். 1950ல் இங்கிலாந்தில் இருந்த இந்திய உணவு விடுதிகளின் எண்ணிக்கை, 300; 2000ம் ஆண்டில், இதுவே, 3,500 ஆக உயர்ந்து, 56 ஆயிரம் பேருக்கு வேலையும் கொடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் மற்றும் லெபனான் உணவுகளும் அங்கு பாப்புலர்!
* பி.தங்கவேலு, தேனி: வறுமையை விட கொடியது எது?
கடன்; வறுமையைக்கூட சமாளித்து விடலாம்; கடன் இருக்கிறதே... இது, வறுமையை விட கொடிய துன்பத்தைத் தரும்!
