PUBLISHED ON : ஏப் 29, 2018

சபாபதிக்கு, அவ்வப்போது, வசுமதி ஞாபகம் வந்தாலும், இன்று, ஏனோ அதிகமாக வந்தது. எதைப் பற்றியேனும் அதிக அளவில் ஞாபகம் வரும்போதெல்லாம், அவ்விஷயம் சார்ந்த மனிதர்கள் பற்றி, புதிதாய் ஏதேனும் தெரிய வரும். 'ஒருவேளை வசுவுக்கு உடம்புக்கு முடியலயோ... அதனால் தான், டெலிபதி மாதிரி அவள் ஞாபகம் வருகிறதோ...' என்று யோசித்து, கவலையுற்றான்.
அவளைப் பற்றி இந்த அளவுக்கு கவலை கொள்வதற்கு, அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. உண்மையில், அவன், அவளை பார்த்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. அவளை பெண் கேட்டு சென்ற போது, அவள் அப்பா சண்முகம், வேலையாட்களை ஏவி, கழுத்தை பிடித்து தள்ளியபின், ஒரே ஒரு தடவை தான் அவளை பார்த்துள்ளான். அதுவும்கூட, தன் அம்மாவுடன், அவள் ஒரு பேருந்தினுள் ஏறும் போது... அவள் அம்மா, அவனை கவனிக்கவில்லை; ஆனால், அவள் பார்த்து விட்டாள். ஓடிச்சென்று என்ன, ஏது என்று விசாரிக்க ஆசை தான்; ஆனால், அன்று அவன் கழுத்தை பிடித்து தள்ளிய வேலையாள், கிங்கரன் மாதிரி சற்று தொலைவில் நின்றிருந்தான்.
அவர்கள் ஏறிச் சென்றது, திருச்சி செல்லும் பேருந்து. தன் மகள் இங்கே இருந்தால், எப்படியேனும், அவனை சந்திப்பாள் என்பதற்காக, திருச்சியில் உள்ள தன் அக்காவின் வீட்டுக்கு அவளை, அவள் அப்பா அனுப்பி வைப்பதாக புரிந்து கொண்டான், சபாபதி.
திருச்சியில் அவள் அத்தை வீட்டுக்காரர் பெரிய மிராசுதாரர் என்று கேள்விப்பட்டிருந்தானே தவிர, அவர் பெயர் கூட அவனுக்கு தெரியாது. எனினும், உடனே புறப்பட்டு போய் சுற்றியலைந்து, அவளது இருப்பிடத்தை கண்டுபிடித்து, வேலையாளுக்கும், அவள் அம்மாவுக்கும் தெரியாதபடி, அவளை கவலையுடன் பார்த்து கையசைத்தான். அவள், தன் தாய் அறியாவண்ணம் பெட்டிக்கடை பக்கம் விரலை நீட்டி, தங்கள் வீட்டு வேலையாள் அருகே இருப்பதை உணர்த்தினாள். அவன் பார்வையில் படும் முன் தான் போய்விட வேண்டும் என்று அவள் விரும்பியதை புரிந்துகொண்ட அவன், உடனே வீட்டுக்கு திரும்பினான்.
மறுநாள் திருச்சிக்கு கிளம்ப, அவன் போட்ட திட்டம் நிறைவேறவில்லை. அவன் அம்மாவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாகி விட்டது. இதயத் தாக்குதல் என்றனர்; அம்மா வீடு திரும்பி, எல்லாம் ஒரு நிலைக்கு வருவதற்குள், இரண்டு வாரம் ஓடிவிட்டன. அதற்குள், அவள் அப்பா, திருச்சியிலேயே அவளுக்கு திருமணத்தை முடித்துவிட்ட தகவல் தெரிந்து, உடைந்து போனான்.
அப்பா இல்லாத அவன், அம்மாவின் திருமண வற்புறுத்தலை மிக எளிதாய் பல ஆண்டுகள் தாக்கு பிடித்து, பிடிவாத பிரம்மசரியம் காத்தான். இதனிடையே தனிப்பட்ட முறையில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேறி, முதல் இடத்தை பெற்று, வட மாநிலத்தில், ஒரு மாவட்டத்தின் கலெக்டர் ஆனான். அவன் கலெக்டர் ஆனதை பார்த்த சில மாதங்களில், அவன் அம்மா காலமானாள்.
அவன் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண், அவனை காதலித்தாள். அவன், தன் காதல் தோல்வி பற்றி சொல்லியும், பிடிவாதமாய் வற்புறுத்தி அவனை மணந்து கொண்டாள். அவனுடைய நண்பன் ஒருவன் தான், 'நாம் தேடிப் போகும் காதலை விடவும், நம்மை தேடி வரும் காதலே உயர்ந்தது; அதை, உதாசீனப்படுத்தக் கூடாது...' என்று எடுத்துச் சொல்லி, திருமணத்துக்கு இணங்க வைத்தான். அவனோடு, 20 ஆண்டுகள் வாழ்ந்த பின், அவன் மனைவியும் காலமானாள்.
சபாபதிக்கு ஒரே மகள்; தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறாள். இந்தியாவில் இயங்கும், அமெரிக்க கிளையின் தலைமை பொறுப்பு, 25 வயதே ஆன அவளை தேடி வந்தது. மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம். சபாபதி ஓய்வு பெறுவதற்கு இரண்டே ஆண்டுகள் இருந்த நிலையில், சென்னைக்கு மாற்றல் கேட்டு வந்து, ஆறு மாதங்களே ஆயின. மகள் தீபிகா சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்ததாலேயே, தமிழகத்துக்கு மாற்றல் கேட்டு வந்திருந்தார், சபாபதி.
''என்னப்பா யோசனை?'' என்று கேட்டாள், மகள், தீபிகா.
''எல்லாம் உன்னை பத்திதாம்மா... சீக்கிரம், உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா, என் மனசுக்கு நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருக்கும்...'' என்றார்.
''அப்பா... அது வந்து...'' என்று மகள் இழுக்கவும், ''ஏம்மா தயங்குறே... உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா?'' என்று கேட்டார்.
பதில் சொல்லாமல் தலையை தாழ்த்தினாள், தீபிகா. முகம் சற்றே சிவந்திருந்தது.
''யாரும்மா அது...'' என்று கேட்டதும், அவளது முகம் மேலும் சிவந்தது.
''மாப்பிள்ள தேடுற வேலைய சுலபமாக்கிட்டே... யாரு அந்த அதிர்ஷ்டக்கார பய...''
''அவரும் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியிலதாம்ப்பா, ஜி.எம்.,மா இருக்காரு; மாதவன்னு பேரு...''
''அம்மா, அப்பா என்ன செய்றாங்க?''
''அவருக்கு அப்பா இல்ல; அம்மாவும், அம்மா வழி தாத்தா மட்டும் தான் இருக்காங்க.''
''அவங்க வீட்டுல உன்னை பத்தி சொல்லிட்டாரா?''
''அவங்க வேற ஜாதி; ஆனா, அவரோட அம்மா சரின்னுட்டாங்களாம்; தாத்தாதான் கொஞ்சம் தகராறு பண்ணுவாருன்னு நினைக்கிறாரு.''
''நீ, அவங்க வீட்டுக்கு போனதுண்டா?''
''அதுக்கெல்லாம் எங்கேப்பா நேரம் இருக்கு... ரெண்டு பேரும் ரொம்ப பிஸி; இனிமேதான் போகணும்.''
''அது சரி, உங்களுக்குள்ள எப்படி அறிமுகம் ஆச்சு?''
''கம்பெனி மீட்டிங்ல ஏற்பட்ட அறிமுகம் நட்பா மாறி, காதலாயிடுச்சு.''
''அவரை நான் பாக்கணுமே...''
''கூட்டிட்டு வரேம்பா...''
''சரிம்மா... ஒரு நாள் சந்திக்கலாம்; அதுக்குள்ள அவர் தாத்தாவ வழிக்கு கொண்டு வரச் சொல்லு.''
''அந்த பொறுப்பை, அவங்கம்மாவே ஏத்துகிட்டாங்க.''
''அவர் வழிக்கு வரலேன்னா...''
''பதிவுத் திருமணம் தான்; வேற என்ன செய்ய முடியும்!''
''இந்தக் காலத்துப் பிள்ளைங்கல்லாம் ரொம்ப துணிச்சல்காரங்களாத்தான் இருக்கீங்க,'' என்றவர், 'எங்கள மாதிரி இல்லே...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
''என்னப்பா சொல்றீங்க?''
''ஒண்ணும் இல்லம்மா... அவங்க பரம்பரைப் பணக்காரங்களா?''
''ஆமா.''
''சொந்த ஊரு எது?''
''வத்தலகுண்டு.''
''என்னது, வத்தலகுண்டா...''
''ஆமா...'' என்றவள், ''அப்பா, உங்க ஊரு கூட அதுக்கு பக்கம் தானே...'' என்று கேட்டாள். 'ஆம்' என்பது போல் தலையாட்டிய சபாபதி, ''அவங்க தாத்தா பேரு தெரியுமா?''
''தெரியலப்பா... கேட்டுட்டு வந்து சொல்றேன்.''
''நீ வத்தலகுண்டுன்னதும், எனக்கு ஆவலா இருக்கு; இப்பவே பேசணும்ன்னு தோணுது.''
''அவங்க வீட்டு போன் நம்பர் சொல்லட்டுமா?''
அவள் சொல்ல, குறித்துக் கொண்ட சபாபதி, ''பேரு தெரியாட்டி என்ன... மாதவனோட தாத்தா இருக்காரான்னு கேக்கறேனே...'' என்றார்.
அந்த இலக்கத்தை தன் தொலைபேசியில் ஒற்றினார்.
மறுமுனையில் மணியடித்தது; ஒரு பெண்மணி எடுத்தாள்.
''ஹலோ... மாதவனோட தாத்தா இருக்காருங்களா?''
''வெளியே போயிருக்காரு... நீங்க யாருங்க?''
''என் பேரு சபாபதி; நீங்க யாருங்க பேசுறது?''
''நான் மாதவனோட அம்மா பேசறேன்.''
''ஓ அப்படிங்களா... ரொம்ப சந்தோஷம்; உங்ககிட்டயும் ஒரு விஷயம் பேச வேண்டி இருக்கு. உங்க மகனும், என் மகளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அதுபத்தி பேசி, கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்றதுக்காக, எப்ப வரலாம்ன்னு கேக்குறதுக்காக தான் போன் செய்தேன்.''
''இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு...'' என்றவள், ''இதோ, அவரே வந்துட்டாரு... பேசுங்க,'' என்று அவரிடம் தொலைபேசியைக் கொடுத்தாள்.
சபாபதி சுருக்கமாய் சேதியை சொல்லி, அவரை பார்க்க எப்போது வரலாம் என்று வினவினார். பின், ''எங்க ஜாதி தெரியுமில்ல...'' என்று கேட்டார்.
''என்ன, சொல்லுங்க.''
''நாங்க தாழ்த்தப்பட்ட ஜாதி.''
''அதப்பத்தி என்ன... நீங்க கலெக்டர்; உங்க மக, ஐ.டி., கம்பெனியில பெரிய பதவியில இருக்குறா. அப்புறம் என்னங்க ஜாதி... கல்யாணம் நிச்சயம்ன்னே வச்சுக்குங்க.''
''அய்யா பேரு...''
''என் பேரு சண்முகம்; எனக்கும் உங்கள மாதிரியே ஒரே மகதான். மருமகப்பிள்ள காலமாயிட்டாரு.''
''உங்க மக பேரு என்னங்க?''
''வசுமதி; எதுக்கு கேக்குறீங்க?''
''சும்மாத்தான்... தெரிஞ்சவங்களா இருப்பீங்களோன்னு சின்னதா ஒரு எண்ணம்; அதான்.''
''நேர்ல சந்திக்கப் போறமே... அப்ப, விவரமாப் பேசினா போகுது.''
''சரிங்க... அப்புறம் பேசறேன்; எப்ப சந்திக்கிறதுன்றத உங்க மக கிட்ட கேட்டுட்டு ஒரு தேதி சொல்லுங்க; வச்சுடட்டுங்களா...''
தன் சொந்த ஊர் எது என்று பெரியவர் கேட்க மறந்ததையும், தானும் சொல்ல மறந்ததையும் எண்ணி, தனக்குள் சிரித்துக் கொண்டார், சபாபதி.
தன் மகளை முன்னொரு நாள் மணமுடிக்க ஆசைப்பட்டவன், பின்னாளில் கலெக்டர் ஆனதும், அவருக்கு தெரிந்திருக்கவில்லையோ... அப்போது, தன் முழுப் பெயர் ரத்தினசபாபதி என்பதாலேயே அறியப்பட்டு சுருக்கமாய், 'ரத்தினம்' என்று அழைக்கப்பட்டதும் அவரது நினைவுக்கு வர, இன்று கலெக்டராக இருக்கும், என்.ஆர்.சபாபதி, அன்றைய அழுக்கு சட்டை ரத்தினம் என்பது அவரது கற்பனையிலும் உதித்திராது என்று நினைத்து சிரித்துக் கொண்டார்.
''என்னப்பா... உங்களுக்கு தெரிஞ்சவங்களா?''
''நேர்ல சந்திச்சதுக்கு பின் தான், அது தெரியும்.''
மறுநாள் மாலை, அடக்கிக்கொள்ள இயலாத ஆவலுடன் சண்முகத்தின் வீட்டு தொலைபேசி இலக்கத்தை இயக்கினார், சபாபதி. வசுமதியே எடுத்து பதில் சொன்னாள்.
''ஹலோ, வசுமதி... எப்படி இருக்கீங்க?''
''நீங்க?''
''என்னைத் தெரியலயா... நேத்தே கண்டுபிடிச்சுடுவீங்கன்னு நினைச்சேன்; ஆனா, கண்டுபிடிக்கல.''
''தெரியலீங்க... இதுக்கு முன், உங்களோட போன்ல பேசினதா ஞாபகம் இல்ல; அதனால, யாருன்னு கண்டுபிடிக்க முடியல.''
''நீங்க சொல்றது சரி; நாம போன்ல பேசிக்கிட்டது இல்லேதான்... ஆனா, நேர்ல நிறையவே பேசி இருக்கோம்.''
அவளுக்கு புரிந்து விட்டது என்பது அவருக்கு புரிய, அவர் கண்கள் சற்றே கலங்கின.
''நீங்களா...''
''ஆமா... நானே தான்,'' என்று பதில் சொன்ன அவர், ஒருவேளை, அவள் வேறு யாரையேனும் நினைவுபடுத்தி, 'நீங்களா...' என்கிறாளோ என நினைத்து, ''அன்னிக்கு ரத்தினம் என்கிற ரத்தின சபாபதி... இப்ப, என்.ஆர்.சபாபதி; கலெக்டர். அதனால தான் நான் போன்ல பேசினப்ப, உங்கப்பாவால என்னை இன்னாருன்னு கண்டுபிடிக்க முடியல. நேர்ல என்னை பாத்தாருன்னா அதிர்ச்சியாய் இருக்கும்,'' என்றார்.
''எத்தினி வருஷம் ஆச்சு... நீங்களும் தோற்றத்தில மாறியிருப்பீங்க. தவிர, எங்கப்பாவுக்கு கண் பார்வை கொஞ்சம் மங்கலாயிடுச்சு; அதனால, உங்க சொந்த ஊரு, அப்போதைய பேரு, மத்த விவரங்களையெல்லாம் விவரமா சொன்னாத்தான் நீங்க இன்னார்ங்கிறதே அவருக்கு தெரிய வரும்,'' என்றாள்.
''அப்படி தெரிய வந்தா, நம்ம பசங்க கல்யாணத்துக்கு குறுக்கே நிப்பாராங்கிற கேள்விக்கு இப்ப பதிலை ஊகிக்க முடியாது. நான் அவர்கிட்ட போன்ல என் ஜாதியை சொன்னப்ப, 'அதைப் பத்தி என்ன, நீங்க கலெக்டர்; உங்க பொண்ணு, ஐ.டி., கம்பெனியில பெரிய பதவியில இருக்கா'ன்னு சொல்லிட்டாரே...'' என்றார்.
கசப்புடன் சிரித்த வசுமதி, ''ஆமாமா... எங்கப்பா ஒண்ணும் மனசளவில பெரிசா மாறல்ல; எதிராளி பணம், பதவியோட இருந்தா, அவங்க ஜாதிய பத்தி அவருக்கு கவலை கிடையாது.''
''இருக்கலாம்; ஆனா, இப்ப வந்து சம்பந்தம் பேசுறது, ஒரு காலத்துல, தான் ஒதுக்கித் தள்ளின ரத்தினம்கிறது தெரிய வந்துச்சுன்னா, அவருக்கு கவுரப் பிரச்னையா தோணுமே...''
''அதுபத்தி நீங்க கவலைப்படாதீங்க; என் மகன், உங்க மகளை கட்டிக்கிறதுக்கு நான் பொறுப்பு. எங்கப்பா ஏதாச்சும் தகராறு பண்ணினாருன்னா, அவர் வராமயே, பசங்க கல்யாணத்தை நாம நடத்திடலாம்... அது சரி, உங்கள பத்தி சொல்லுங்க.''
''என்ன இருக்கு சொல்றதுக்கு... அவ போய் சேந்து, 20 வருஷம் ஆயிடுச்சு; கட்டாய கல்யாணம் தான். என்னை வெரட்டி வெரட்டி, 'லவ்' பண்ணின பொண்ணு; என் காதல் விஷயத்தப் பத்தி சொல்லி மறுத்தும், விடல. தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமுறுத்திச்சு. அப்ப, என் பிரெண்ட் ஒருத்தன், 'நாம தேடிப் போற, 'லவ்'வை விட, நம்மைத் தேடி வர்ற, 'லவ்'தாண்டா ஒசத்தி'ன்னு சொல்லி, என்னை ஒரு வழியா சம்மதிக்க வெச்சான்.''
''நல்லதுங்க; அப்ப நாளைக்கு வர்றீங்களா?''
''ஆமா; ஜாதி இரண்டொழிய வேறில்லைன்னு அவ்வை பாட்டி பாடினது சரிதான். ஒண்ணு, பணக்கார ஜாதி; இன்னொண்ணு ஏழைப்பட்ட ஜாதி. ஏழை, பணக்கார ஜாதிக்கு மாறினா எந்தக் குழப்பமும் இல்ல,'' என்றதும், ''பணக்கார ஜாதி, ஏழைப்பட்ட ஜாதிக்கு மாறினாலும் சரிதான்,'' என்று வசுமதி சிரித்த சிரிப்பில், ரத்தின சபாபதி ஐ.ஏ.எஸ்.,சும் கலந்து கொண்டார்.
ஜோதிர்லதா கிரிஜா
