PUBLISHED ON : ஏப் 29, 2018

தனுஷ் படத்தில், ஹாலிவுட்நடிகர்கள்!
தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார், தனுஷ். அவருடன், பெரனைஸ் பெஜோ, பர்காத் ஆதி மற்றும் ஏபெல் ஜாப்ரி என, பல ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார், தனுஷ். அப்படத்திலும் தனுஷுடன், ஹாலிவுட் நடிகரும், ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவருமான, பியர்ஸ் பிராஸ்னன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
சினிமா பொன்னையா
ரூட்டை மாற்றும் காஜல் அகர்வால்!
விஜய் மற்றும் அஜித்துடன் நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு, தற்போது, முன்னணி நடிகர்களுடனான பட வாய்ப்பு குறைந்து விட்டது. அதனால், ஹன்சிகா பாணியில், மூன்றாம் தட்டு கதாநாயகர்களுடன் நடிக்க, தயாராக இருப்பதாக சுற்றறிக்கை விட்டுள்ளார். அதேசமயம், இளவட்ட நடிகர்களுடன் நடிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இணையாக, தன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனையும் முன் வைத்துள்ளார். இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கலாம்!
— எலீசா
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஞ்சலி!
ஜெய்யுடன் காதலில் விழுந்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த அஞ்சலி, பின், அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனாலும், ஜெய்யுடனான நட்பை தொடர்ந்தே வருகிறார். ஜெய்யின், 34வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஆட்டம் பாட்டம் என்று செம லுாட்டி அடித்திருக்கிறார். அத்துடன், கிசுகிசுக்களுக்கு அஞ்சாமல், எப்போது சென்னை வந்தாலும் ஜெய்யை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். எல்லாம் சொல்லும் பல்லி, கழுநீர் பானையில் விழுந்ததாம் துள்ளி!
— எலீசா
வில்லனான சித்தார்த்!
பாய்ஸ் படத்திலிருந்து, இதுவரை கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள சித்தார்த், தற்போது, மலையாளத்தில் திலீப் நாயகனாக நடிக்கும், கம்மர சம்பவம் என்ற படத்தில் முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார். இந்த வேடத்திற்காக, தன் பாடி லாங்குவேஜை மாற்றி, பெரிய அளவில் மீசை வைத்து, மிரட்டலாக நடித்திருப்பதாக சொல்லும் சித்தார்த், 'இனிமேல் தமிழிலும் இதுபோன்ற அழுத்தமான வில்லன் வேடங்கள் கிடைத்தால், நடிப்பேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பீட்சா நடிகரின் பாசறைக்குள் இருந்து வெளியேறிய, காக்கா முட்டை நடிகை, தற்போது, சில மேல்தட்டு இயக்குனர்கள் மூலம் முன்வரிசை நடிகர்களின் படங்களுக்கு கல்லெறிந்து வருகிறார். மேலும், திரையுலகில் நடக்கும், 'மிட்நைட்' பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக ஆஜராகி, நடிகர்களுடன் லுாட்டி அடித்து, நட்பு வளர்க்கத் துவங்கியுள்ளார்.
சமீபத்தில் ஒரு சினிமா மீட்டிங்கில், நடிகர்கள், தங்களது சம்பளத்தை குறைக்குமாறு தயாரிப்பாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு வந்த வம்பு நடிகர், 'நாங்கள் சம்பளத்தை குறைக்கிறோம்; ஆனால், முதலில் நீங்கள் பிளாக் மணியை தவிர்த்து, ஒயிட் மணியில் படமெடுக்கிறோம் என்கிற ரெக்கார்டை காட்டுங்கள். அதன்பின், நடிகர்கள் சம்பளத்தை குறைப்பதை பற்றி யோசிக்கலாம்...' என்று சொன்னார். அதைக்கேட்டு, வாயடைத்து போயினர், தயாரிப்பாளர்கள்.
சினி துளிகள்!
* திண்டுக்கல் அருகே, அறக்கட்டளை சார்பில், ஏழைக் குழந்தைகளுக்காக நடத்தப்படும், 'மவுண்டன் வியூ' என்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார், நடிகை கத்ரீனா கைபின், அம்மா சுசானே.
* நடிகர், மம்மூட்டியின் மனைவியாக மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், அனுஷ்கா.
* மணிரத்னம் இயக்கி வரும், செக்கச் செவந்த வானம் படத்தில், முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷும்; இன்ஜினியராக சிம்புவும் நடிக்கின்றனர்.
அவ்ளோதான்!
