தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குரு உபதேசம்!

குரு உபதேசம்!

குரு உபதேசம்!


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்ண பரம்பரைக் கதைகளைப் பற்றி, மூல நுால்களில் தேடினால் கிடைக்காது. அதற்காக, அவற்றை ஒதுக்கி விடக் கூடாது; காரணம், அவை எல்லாம் கருத்துப் புதையல்கள். அத்தகைய, ஸ்ரீராமர் - ஆஞ்சநேயரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை இது:

ஒரு சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால், இதை மனதிற்குள் உருவேற்று; வெளியிடாதே...' என்று கூறினார்.

மறுநாள், ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு, உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ஸ்ரீராமர், திடுக்கிட்டார். காரணம், அங்கே, ஸ்ரீராமர், ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து, வீதிவீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். கோபமடைந்த ராமர், ஆஞ்சநேயரை வரவழைத்து, 'என்ன காரியம் செய்கிறாய்... பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து சொல்கிறாயே...' என்றார்.

அமைதியாக ஸ்ரீராமரை நமஸ்கரித்து, 'தெய்வமே... அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன்; தங்கள் உத்தரவை மீறவேயில்லை. வேண்டுமானால், அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து, தாங்களே விசாரிக்கலாம்...' என்றார், ஆஞ்சநேயர்.

உடனே, சிலரை வரவழைத்து, 'ஆஞ்சநேயன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா?' எனக் கேட்டார், ஸ்ரீராமர்.

கேள்வி ஒன்றுதான்; ஆனால், பதில்கள் தான் பலவிதமாக வந்தன...

'புரியவில்லை...' என்றனர். சிலர், 'மாருதி, ஏதோ மனம்போன போக்கில் உளறிக்கொண்டு போனான்...' என்றனர், மற்றும் சிலர்.

இன்னும் சிலரோ, 'அனுமன் பேசியது புரியாவிட்டாலும், நகைச்சுவையாக இருந்தது...' என்றனர்.

இவ்வாறு பலரும் பலவிதமாக கூற, பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும், 'ஸ்ரீராமச்சந்திர பிரபுவே... அனுமன் உபதேசித்தது, சாதாரண மந்திரமா... பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே...' என்று சொல்லி, மெய் சிலிர்த்தனர்.

விதை ஒன்று தான்; நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட, அவ்வப்போது நீர், உரம் இட்டு, பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல, குரு உபதேசிக்கும் மந்திரத்தை, எல்லாரும் பெற்றுக்கொண்டாலும், அது, பக்குவப்பட்டோரின் உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.

குரு பக்தியும், குரு உபதேசித்த மந்திரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் சேர்வதாலேயே, சித்தியாகிறது. ஆகையால், யாரிடம், எவ்வளவு பேரிடம் மந்திர உபதேசம் பெற்றோம் என்பதை விட, பெற்ற மந்திரத்தை, அதற்குண்டான முறைப்படி உச்சரித்து வந்தால், மந்திரத்தின் சக்தி அதிகரிக்கும். தெய்வத்தை எண்ணி பாராயணம் செய்யும்போதும், இந்த நியதி நிறைவேற்றப்பட்டால், வாழ்வில் என்றும் குறையேதும் இருக்காது!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

வீட்டில் சுவாமி படங்களுக்கு அணிவித்த பூக்கள் மற்றும் மாலைகளை என்ன செய்வது?

சுவாமி படங்களுக்கு அணிவித்த பூக்கள் மற்றும் மாலைகளை காலால் மிதிபடும் இடங்களிலோ, குப்பையிலோ போடக் கூடாது. பாத்திரத்திலோ, கூடையிலோ, அட்டை பெட்டியிலோ தனியாக சேர்த்து வைத்திருந்து, ஓடும் நீர் நிலையில் சேர்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us