PUBLISHED ON : ஜூன் 03, 2018

அறிமுகப்படுத்தும் போது...
கடந்த வாரம், பேருந்தில் பயணம் செய்தபோது, நடந்த சம்பவம் இது...
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அச்சமயத்தில் திருநங்கை ஒருவர் ஏறினார். அருகில் இருந்த சிறுமி, தன் அம்மாவிடம், 'இது யார்?' என்று கேட்டாள். அதற்கு அந்த அம்மா, கிண்டலாக, 'அலி' என்றார். இது, அந்த திருநங்கைக்கு கோபமுண்டாக்கவே சண்டை போட்டார்.
அடுத்த ஸ்டாப்பில், சிலர் இறங்கவே, காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தார், திருநங்கை. அவர் பக்கத்தில் இடம் இருந்தும் யாரும் அமர முன்வரவில்லை. கவனிக்காமல் அமர்ந்தவர்களும் மெல்ல எழுந்து, வேறு இடம் சென்றனர். நின்றிருந்த நான், அவர் பக்கத்தில் அமர்ந்தேன். உடனே, அந்த திருநங்கை முகத்தில் மகிழ்ச்சி... 'அம்மா வணக்கம்...' என்றவர், மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார். நாட்டு நடப்பு மற்றும் சினிமா என்று பேசிக் கொண்டிருந்தவர், இடையிடையே சில ஜோக்குகளையும் கூறி கலகலப்பூட்டினார். நேரம் போனதே தெரியவில்லை. இறங்கும்போது, 'குட் டே' என்று கூறி, 'டாட்டா' காட்டினார். எனக்கு அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ரயில், பேருந்து நிலையங்களில், பிள்ளைகளிடம் திருநங்கையரை அறிமுகப்படுத்த நேர்கையில், நல்ல வார்த்தை கூறி அறிமுகப்படுத்துங்கள். இதனால், அவர்கள் கோபம் கொள்வது நின்று, அன்பை பொழிய ஆரம்பித்து விடுவர்!
— இந்திராணி தங்கவேல், சென்னை.
சூப்பர் ஐடியா!
சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அச்சமயம், 8ம் வகுப்பு பயிலும் என் உறவினரின் மகள், தன் தாயாரிடம், 'அம்மா... எங்கள் வகுப்பில், 'கிவிங் டே' கொண்டாடுகிறோம். அதற்காக, மிஸ் எங்களால் முடிந்த பரிசு பொருளை வாங்கி வர சொன்னாங்க...' என்று கூறினாள். அதைப் பற்றி அவளிடம் விசாரித்த போது, அவள் சொன்ன விஷயம், ஆசிரியைக்கு, 'சபாஷ்' போட வைத்தது.
அதாவது, மாணவியர் அனைவரும் தங்களால் முடிந்த பரிசு பொருளை, 'கிப்ட்' பேப்பரில் சுற்றி அழகாக எடுத்து வரவேண்டும். அதில், எண்களை எழுதி அடுக்கி, மாணவியரின் வரிசை எண்களையும் சீட்டுகளில் எழுதி, ஒரு பெட்டியில் போட்டு குலுக்கி எடுப்பர். யாருக்கு எந்த எண் வருகிறதோ அந்த பரிசு பொருளை மாணவியிடம் தருவாராம் ஆசிரியை.
அன்று மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமியின் கைகளில் அழகிய பொம்மை. வாய் நிறைய சிரிப்புடனும், மனம் நிறைய மகிழ்வுடனும் அவள் வந்ததை பார்த்த எனக்கு, இப்படியொரு புதுமையை செய்யும் ஆசிரியையைப் பாராட்ட வேண்டும் போல் இருந்தது. அடுத்த நாள், அவளுடன் நானும் பள்ளி சென்றேன்.
ஆசிரியையிடம் பேசியபோது, 'இந்த வயதில் பிள்ளைகள் இடையே போட்டி, பொறாமை ஏற்படுவது இயற்கை. இதைத் தவிர்க்கவே, 'கிவிங் டே' என்ற பெயரில், இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலேயே பரிசு தந்து, பரிசை பெறுவது அவர்களிடையே அன்பை வளர்க்கும். விரோதி, நண்பர்ன்னு பாகுபாடுகள் மறைவதுடன், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவமும், எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் வளரும். அதற்கு இது பிராக்டிக்கல் விளையாட்டு...' என்றார். 'சூப்பர் ஐடியா!' என்று பாராட்டி வந்தேன்.
- சுபா தியாகராஜன், சேலம்.
திருமண வீட்டினரே...
சமீபத்தில், நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாலை வரவேற்பு நிகழ்ச்சியில், கூட்டம் அதிகமாக இருந்தது.
அதனால், 'தயவு செய்து, முதல் பந்தியில் வெளியூரிலிருந்து வந்தவங்க மட்டும் அமரவும்...' என, மைக்கில் கூறினார், ஒருவர்.
அவர் அறிவித்தபடியே, வெளியூர் உறவினர்கள் முதல் பந்தியில் சாப்பிட்டு முடித்தனர்.
அவர்கள் முகங்களில், இருட்டுறதுக்குள்ள ஊருக்கு கிளம்பிடலாம் எனும் சந்தோஷம் பளிச்சிட்டது.
சாப்பிட்டு வெளியே வந்த பெண்மணி ஒருவர், 'இப்படி செஞ்சது நல்லதா போச்சு... இருட்டுறதுக்குள்ள பஸ் பிடிச்சு ஊருக்கு போயிடுவேன்... வயசுக்கு வந்த பொண்ணு வீட்ல தனியா இருக்கா...' என்று, மகிழ்வுடன் கூறினார்.
திருமண வீட்டினர், இந்த மாதிரி செய்தால், வெளியூரிலிருந்து வருபவர்கள் மனம் மகிழ்வர்.
—எம்.வடுகநாதன், நாகப்பட்டினம்.
