தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசு பணியில் இருக்கும் அந்தப் பெண் உயர் அதிகாரி, நன்கு பழக்கமானவர்; நல்ல பேச்சாளர், எழுத்தாளர், எல்லாவற்றுக்கும் மேலாக துணிச்சலானவர், மனித நேயமிக்கவர். நாடி வருவோரின் கோரிக்கை நியாயமானது என்றால், தம் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு இருப்பினும், உரியவரிடம் தொடர்பு கொண்டு நன்மை செய்து கொடுப்பார்.

தகுதியான ஜோடி, பெற்றோர் சம்மதமின்மை என இருப்போருக்கு, திருமண ஏற்பாடுகளும் செய்து கொடுப்பார்.

நண்பர் ஒருவருக்கு இந்த அதிகாரி மூலம் ஒரு காரியம் ஆக வேண்டும்; நியாயமான சமாசாரம் தான்... என்னை அனுப்பி விட்டார். வரவேற்று அமரச் செய்த அதிகாரி, டீ கொடுத்து உபசரித்தார்.

வந்த வேலையை சொன்னதும், முடித்துத் தருவதாகக் கூறிய பின், அவருடன் பேச சில விஷயங்கள் இருந்ததால், தயங்கித் தயங்கி எழுந்தேன்...

'என்ன விஷயம் சொல்லுப்பா... ஏன் தயக்கம்?' எனக் கேட்டார்.

இந்த வார்த்தை போதாதா...நாற்காலியை இறுக பற்றி அமர்ந்தேன்.

'மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, சக ஆண் பணியாளர்களும், உயர் ஆண் அதிகாரிகளும், 'பிசிக்கல் ஹாரஸ்மென்ட்' - பாலியல் தொல்லையும், இரட்டை அர்த்தப் பேச்சுகளுடன் தொல்லை கொடுப்பர் என கேள்வி பட்டிருக்கிறேனே... அதெல்லாம் உண்மைதானா?' எனக் கேட்டேன்.

சற்றும் தாமதிக்காமல் பதிலளித்தார் அந்தப் பெண் அதிகாரி.

'ஒரு சிலர் இருக்கத் தான் செய்கின்றனர்; மற்றபடி அனைத்து ஆண் ஊழியர்களும், சக பெண் ஊழியர்களை சகோதரியாக, தோழியாக, தாயாகவே மதிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இரண்டு, மூன்று உயரதிகாரிகள் வாலாட்டிப் பார்த்தனர்.

'துணிச்சலும், தைரியமும், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் இயற்கையிலேயே எனக்கு உண்டு என்பதால், இந்த வாலாட்டல்களை எல்லாம் சாதுர்யமாக சமாளித்திருக்கிறேன்.

'எனக்கு உயரதிகாரியாக வைணவர் ஒருவர் பணியாற்றி வந்தார்; இப்போது ஓய்வு பெற்று விட்டார். அவர் சிறந்த பேச்சாளர் என்பதால், மடக்கிப் போடும் பேச்சுகளை எடுத்து விடுவார். நான் புரியாதது போல் நடிப்பேன். பொறுத்துப் பொறுத்து பார்த்தவர், 'டார்ச்சர்' கொடுக்க ஆரம்பித்தார்.

'ஒரு நாள் அலுவலகத்திற்கு அரை மணி நேரம் தாமதமாகச் சென்றேன். இதற்கெனவே காத்திருந்தவர் போல, ஆ... ஊ... என ஆர்ப்பாட்டம் செய்து, 'ஏன் லேட்?' எனக் கேட்டார்.

'முகத்தை பாவமாக வைத்து, 'எங்கள் வீட்டில் இன்று ஹோமம் சார்... அதான் லேட்டாயிடுச்சி; ஆனா, நேற்றே, 'பர்மிஷன்' கேட்டு, 'அப்ளை' செய்துட்டேன்...' என்றேன்.

'என்ன ஹோமம்?' என்றார் அதிகாரி.

'சுதர்ஸன ஹோமம் சார்!' என, மிகப் பணிவாகக் கூறினேன்.

'எதற்காக அந்த ஹோமம் செய்வர்?' எனக் கேட்டார் அதிகாரி. வேண்டுமென்றே இந்தக் கேள்வியைக் கேட்டார். ஏனென்றால், அவர் வைணவர்; இந்த ஹோமம் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

'உடனே முகத்தை மிக பவ்யமாக வைத்து, 'நமக்கு தொல்லை கொடுப்போர், எதிரிகள், வேண்டாதவர்கள் ஆகியோரை அடக்கி வைக்க, கட்டுப்படுத்த, அழிக்க இந்த ஹோமம் செய்வாங்க சார்...' எனக் கூறியதும், அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே... பரிதாபம் தான்! அதன்பின் என்னிடம் எந்த வம்பு, தும்பும் வைத்துக் கொள்ளவில்லை அந்தப் பெரிய மனிதர்...'

பெண் அதிகாரியின் சமயோஜிதத்தையும், புத்திசாலித்தனத்தையும் எண்ணி வியப்படைந்து, 'ஆ...'வென வாய் பிளந்து, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, தொடர்ந்தார்...

'இன்னொரு சம்பவம்... இவர் வேறு ஒரு அதிகாரி; சம்பவம் நடப்பதற்கு முன்தினம், எங்களது கேளிக்கை மன்றத்தின் சார்பாக திரைப்படம் ஒன்று காட்டினர். அதிகாரி உட்பட ஊழியர்கள் பலரும் படம் பார்த்தோம். நடிகை சரிதாவும், மோகனும் நடித்த படம் அது; பெயர் தெரியவில்லை. அப்படத்தில் மோகனும், சரிதாவும் மிக நெருக்கமாக இணைந்து நடித்த படுக்கை அறை காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது.

'படம் பார்த்த மறுதினம், அலுவலகத்தில் இருந்த என்னை, 'இன்டர்காமில்' அழைத்து, முக்கியமான, 'பைல்' ஒன்று குறித்து விசாரித்தார். நான், 'பைல்' முழுவதையும் படித்து, கரும சிரத்தையாக குறிப்புகள் எடுத்து அவரது கேபினுக்குச் சென்றேன்.

'அங்கு அவர், 'பைல்' பற்றி எதுவும் பேசாமல், படத்தை பற்றி பேச ஆரம்பித்தார். அந்தப் படத்தில் அவருக்கு மிகவும் பிடித்தது, அந்த படுக்கை அறை காட்சி தான் என்றார். நான் நெளிந்தபடி நின்றிருந்தேன். அத்துடன் இல்லாமல், எனக்கு எந்தக் காட்சி பிடித்தது எனக் கேட்டார்.

'இதன் பொருள் என்னவென்றால், எனக்கும் படுக்கை அறை காட்சி தான் பிடித்தது என்று சொல்வேன் என எதிர்பார்த்தார். நானோ, 'வம்பு செய்யும் அலுவலக மேலாளர் தலையில், கையில் வைத்திருந்த பைலால் 'மொத்து மொத்து' என்று சரிதா மொத்துவாரே... அந்தக் காட்சி தான் மிகவும் பிடித்திருந்தது...' என, பரம சாதுவாக பதில் சொன்னேன்.

'இதைக் கேட்ட பின்பும் வாலாட்டுவாரா என்ன... அத்துடன் அவர் பிரச்னையும் முடிந்தது. இப்படியாக சில சம்பவங்கள். பெண்களிடம் சமயோஜிதமும், துணிச்சலும் எப்போதும் இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால், எந்த பிரச்னையையும் சமாளிக்க முடியும்...' எனக் கூறி முடித்தார்.

'மேடம்... பெரும்பாலான பெண்களிடம் இல்லாத நகைச்சுவை உணர்ச்சி உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன். தமாஷ் சம்பவம் ஏதேனும் இருந்தால் கூறுங்களேன்...' என்றேன்.

பாராட்டை எண்ணி உள்ளுக்குள்ளேயே அவர் மகிழ்வதை முகம் காட்டிக் கொடுத்தது. சிறிது நேரம் யோசித்தபின் ஆரம்பித்தார்...

'நான் ஒரு மேடைப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் ஆக இருப்பதால், பத்திரிகைகள், லோக்கல் கேபிள், 'டிவி'க்களின் மூலம் என் முகம் பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயம். வேலுாரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் வழியில், 'குட்டி வாட்ச் ரிப்பேர் கடை!' என்று ஒரு கடை இருந்தது.

'குட்டி என பேர் வைத்துக் கொள்வது மலையாளிகளிடையே சகஜம்... குட்டி என்பவர் அந்த வாட்ச் ரிப்பேர் கடையை வைத்திருக்கிறார் என்பது தெரிந்தும், ஒருநாள் ஒரு குசும்பு செய்தேன். என் காரை அக்கடை முன் நிறுத்தி, உள்ளே சென்றேன். லோக்கலில் நான் தான் பிரபலமாயிற்றே... தடபுடலாக என்னை வரவேற்றார், கடை முதலாளி.

'அவரிடம், 'சார்... எங்க வீட்ல பெரிய கடிகாரம் ஒன்று ரிப்பேரா இருக்கு... அதை பழுது பார்ப்பீர்களா?' எனக் கேட்டேன். 'ஓ... தாராளமாக... ஏன் இப்படிக் கேட்டு விட்டீர்கள்?' எனக் கேட்டார். 'இல்ல... வெளியே, 'குட்டி வாட்ச் ரிப்பேர் கடை'ன்னு போட்டிருக்கே... அதான் சந்தேகத்துல கேட்டேன்...' எனக் கூறவும், என் குறும்பைப் புரிந்து கொண்ட கடைக்காரரும் சிரிக்க, நானும் சிரித்தபடியே வெளியேறினேன்...' என முடித்தார்.

'பெண்கள், 'லொள்ளு' செய்ய ஆரம்பித்தால், தாக்கு பிடிக்க முடியாதது போல் உள்ளதே...' என எண்ணியபடியே விடைபெற்றேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us