PUBLISHED ON : ஜூன் 03, 2018

எம்.நீலமேகம், தேனி: என் பங்காளி ஒருவர், எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கு போவேன் என மிரட்டிக் கொண்டே இருக்கிறாரே...
பரிதாபப்படுங்கள்; எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்கு செல்பவர்கள் எல்லாவற்றுக்கும் கஷ்டப்படுவர். அவசியமானவற்றுக்கு மட்டும் எப்போதாவது கோர்ட்டுக்குப் போகிறவர்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும். பங்காளி காதில் போட்டு வையுங்கள்!
ஆர்.பத்மா, விழுப்புரம்: விலைவாசி விஷம் போல் ஏறி வரும் இக்காலத்தில் சவுகரியமாக வாழ்பவர் யார்?
சிறைக் கைதிகள் இருக்கின்றனரே... விலைவாசி உயர்வை பற்றியோ, மண்ணெண்ணெய், அரிசி மற்றும் ரேஷன் க்யூ பற்றியோ இவர்களுக்கு என்ன கவலை... மணி அடித்ததும் சோறோ, களியோ கிடைத்து விடுகிறதே!
* பி.கலைச்செல்வி, பொள்ளாச்சி: புகழ் யாரைத் தேடி வரும்?
புத்திசாலிகளை! அது இல்லாதவர்கள் தேடிப் போனாலும் கிடைக்காது; பணத்தால் அதை வளைத்துப் போட்டாலும், நீண்ட நாள் ஒட்டிக்கொண்டு இருக்காது!
அ.முருகேசன், திருப்பூர்: என் நண்பன் எப்போதும் பிடிவாதம் பிடிக்கிறானே...
என்ன காரியத்துக்காக பிடிவாதம் செய்கிறார்... நல்லது செய்ய, நற்காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகவா அல்லது தன் வறட்டு கவுரவத்திற்காகவா... இரண்டாவதற்காக என்றால், அவரது அழிவு காலம் ஆரம்பமாகி விட்டதை எடுத்துச் சொல்லுங்கள்!
கே.தனபால், மதுரை: புகழ்ந்து பேசினால் மயங்கி விடுவார்களாமே பெண்கள்...
அதெல்லாம் அந்தக் காலமாக இருக்கலாம்... நாய் ஏன் வாலாட்டுகிறது, மாடு ஏன் வாலைத் துாக்குகிறது என்ற சூட்சுமங்களை இக்கால பெண்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர்.
* என்.முத்தையா, திருவள்ளூர்: எதைக் கண்டாலும், நினைத்தாலும் எனக்கு பயமாக இருக்கிறதே...
உங்களுக்கு திட சிந்தனை இல்லை எனத் தெரிகிறது... எதிலும் திடமான புத்தி இருந்தால், இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் பயம். கோழையாக இருந்தால், வாழ்வில் முன்னேறவே முடியாது. திட சிந்தனையை, உயர்த்திக் கொள்ள முயலுங்கள்!
எஸ்.ஐஸ்வர்யா, திண்டிவனம்: புகழுடனும், பணத்துடனும் வாழ ஆசைப்படுகிறேன்... இதற்கு வேண்டியது என்ன?
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமை. இதைக் கோட்டை விட்டவர்கள் பின்னர் வருந்துகின்றனர்!
எஸ்.உஷாராணி, சென்னை: இலக்கியவாதியின் சொற்பொழிவிற்கும், அரசியல்வாதியின் சொற்பொழிவிற்கும் என்ன வித்தியாசம்?
வித்தியாசம் ஒன்றும் இல்லை; ஒற்றுமை தான் உண்டு. இரண்டுமே மனிதனின் பொன்னான நேரத்தை பாழ்படுத்துபவை, சோம்பேறி ஆக்குபவை, ஏமாற்றி, பம்மாத்து செய்பவை!
