PUBLISHED ON : ஜூன் 03, 2018

சந்தையில் நல்ல கூட்டம்; எப்போதும் காலையிலேயே சந்தைக்கு வந்து விடும் பத்மா, அன்று வெளிவேலைகள் நிறைய இருந்ததால், நேரம் ஆகிவிட்டது.
வண்டியை நிறுத்தி, வேகமாக சந்தைக்குள் நுழைந்தாள்.
''அக்கா... டோக்கன் வாங்கிக்கங்க,'' என்ற சத்தம் கேட்டு திரும்பினாள்.
''சில்லரை இல்லப்பா... வரும்போது வாங்கிக்கறேன்...'' என்றாள். அதேநேரம், ''அம்மா... நீங்க வர்றதுக்குள்ள வண்டிய கழுவி வெச்சுடுறேன்... 20 ரூபாய் கொடுங்க,'' என்றார், வயதான ஒருவர்.
''வேணாம்ய்யா...'' என்று சொல்லி, 'அப்பப்பா... பணம் சம்பாதிக்க தான் எத்தனை வழிகள்...' என்று நினைத்தவாறு, காய்கறி கடை நோக்கி சென்றாள்.
'பிள்ளைங்க பள்ளிக் கூடத்துல இருந்து வருவதற்குள் திரும்பணும்...' என நினைத்தவள், 'மளமள'வென காய்கறிகளை வாங்கி, வெளியே வந்தாள்.
''தாயி... ஏதாவது தர்மம் பண்ணும்மா,'' என்ற குரல் கேட்டு திரும்பினாள். 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நின்றிருந்தாள்; திடகாத்திரமாக இருந்தாள்.
பார்த்ததும் எரிச்சல் வந்தது பத்மாவுக்கு!
'இந்த அம்மாளை விட வயதான பலர் சந்தையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, இவளோ பிச்சை கேட்கிறாள்; சோம்பேறி...' என நினைத்து, எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள்.
''என் பொண்ணு மாதிரி இருக்க... ஏதாவது கொடும்மா...'' என்றாள் அப்பெண்மணி தொடர்ந்து வந்து!
பெண்களின் பலவீனமும், பலமுமான பாசம் எனும் ஆயுதத்தை எறிந்து, பத்மாவின் பச்சாதாபத்தை வீழ்த்தப் பார்த்தாள், பிச்சைக்கார பெண்.
வெயில் புழுக்கம், வீட்டுக்கு போக வேண்டிய அவசரம், அந்த பெண்ணின் திடகாத்திரம் மற்றும் அந்தம்மாளின் வார்த்தை என எல்லாம் சேர்த்து பத்மாவை உசுப்பேற்றியது; கோபமாக திரும்பியவள், ''பொண்ணு கிண்ணுன்னு சொன்ன, பல்லை உடைச்சிருவேன்,'' என்றாள். இதை எதிர்பார்க்காததால், ஆடிப் போனாள், பிச்சைக்காரப் பெண்.
''எந்த பொண்ணும், தன் அம்மாவ பிச்சை எடுக்க விடமாட்டா... எந்த அம்மாவும், அவ மககிட்ட போய் பிச்சை கேட்க மாட்டா... நல்லாதானே இருக்க... உழைச்சு பிழைக்க வேண்டியது தானே... பொண்ணாம் பொண்ணு, என் அம்மா மட்டும் இப்படி பிச்சை எடுத்திருந்தா, விஷம் வெச்சே கொன்னுருப்பேன்,'' என்றாள் பத்மா.
அவளின் கோபத்தில், விக்கித்து போனாள், பிச்சைக்கார பெண்மணி.
''அதோ பார்,... அந்த அம்மாவுக்கு உன்னை விட பத்து வயசு கூட இருக்கும்; சந்தையை கூட்டி காசு வாங்கல... அந்த ஐயாவுக்கு, 65 வயசுக்கு மேலே இருக்கும்; வண்டி கழுவி பிழைக்கல... உனக்கு என்ன வந்தது,'' தன் நிலை மறந்து கத்தினாள், பத்மா.
திடுக்கிட்ட கூட்டம், ஒரு நிமிடம் நின்று வேடிக்கை பார்க்க, சுய நிலைக்கு வந்தவள், சட்டென தன் கைப்பையிலிருந்து, 200 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்து,
''இந்தா... இதை வெச்சு வெளக்குமாறு வாங்குவியோ, வெங்காயத்தை வாங்குவியோ இல்ல விஷத்தை வாங்குவியோ... மானம் மரியாதையோடு வாழணும்ன்னு ஆசை இருந்தா பொழச்சுக்கோ... இல்லன்னா எங்கேயாவது போயிரு... என் கண்ணில் மட்டும் சிக்காதே... அப்புறம் நான் ராட்சசியா ஆயிருவேன்,'' என்று பொரிந்து தள்ள, மொத்த சந்தையும் அவளையே பார்த்தது.
பத்மாவுக்கு இரவு முழுவதும் துாக்கமே வரவில்லை. தன் அம்மாவின் நினைவிலேயே இருந்தாள். நாலாவது ஆள் வந்தால், முதல் ஆள் வெளியேறி விடவேண்டும். அப்படி ஒரு வீட்டில் தான் பயணப்பட்டது, அம்மா கமலாவின் வாழ்க்கை.
தன்மானத்தை தவிர, வேறு எதையும் வைத்துவிட்டுப் போகவில்லை பத்மாவின் அப்பா. எங்கே போனார் என்று யாருக்கும் தெரியாது; தவித்து போனாள், கமலா. பார்க்காத வேலை இல்லை; வயிறு நிரம்பியது தான் மிச்சமே தவிர, ஒன்றும் இருக்காது.
எதையோ எதிர்பார்க்கும் இந்த சமூகத்தில் ஒரு பெண் தப்பி பிழைப்பது, குள்ள நரிகளிடம் சிக்கிக்கொண்ட ஆடு, பிழைத்து வருவதற்கு சமம். அதுவும், இறைவன் கையில் சிக்கிய தேவ ஆடாக இருக்க வேண்டும்.
எப்படி எப்படியோ சமாளித்து, தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய அம்மாவுக்கு, ஒரு சேலை கூட எடுத்துக் கொடுக்க முடியாமல், காலன், பறித்துக்கொண்டதை நினைத்து, பத்மா அழாத நாளில்லை. தன் அம்மாவின் புண்ணியம் தான் தனக்கு கிடைத்த கணவனும், குழந்தைகளும் என்று நினைத்துக் கொள்வாள்.
பிச்சைக்கார பெண்மணியை நினைத்து மனம் வருந்திய நிலையிலேயே துாங்கிப் போனாள்.
அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வேலைகளில் சந்தை நிகழ்வை மறந்தே போனாள்.
அன்று, காய்கறி வாங்க சந்தைக்கு கிளம்பும் போதுதான் அந்த அம்மாவும் நினைவுக்கு வந்தாள். மனதுக்குள் பரபரப்பு வந்து ஒட்டிக்கொண்டது. ஆர்வத்தோடும், படபடப்போடும் சந்தைக்கு போனாள்.
வண்டியை நிறுத்தியதும், டோக்கன் போடும் பையன், சினேக சிரிப்போடு டோக்கன் கொடுத்தது, வித்தியாசமாக இருந்தது. போன வாரம் நடந்ததை மறக்கவில்லை போல!
இப்போது, பத்மாவுக்கு தயக்கம் வந்தது; மெல்ல சந்தைக்குள் பார்வையை ஓட விட்டாள். ஓரிடத்தில் அவள் பார்வை நிலைத்தது.
ஆமாம்... அதே பெண்மணி தான்; ஒரு காய்கறி கடையில் நின்று, காசு வாங்கிக் கொண்டிருந்தாள்; மனசு வலித்தது.
'இவளை நினைத்தா வருத்தப்பட்டோம்... சே... இவள் எல்லாம் திருந்தவே மாட்டா...' என்று நினைத்த போதே, தற்செயலாக இவள் பக்கம் திரும்பினாள், அப்பெண்மணி. அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி, அந்த பார்வையில் ஒரு சந்தோஷம்.
அது, மகளை கண்ட அம்மாவா, குருவை கண்ட சிஷ்யயா... தெரியவில்லை; ஆனால், அந்த பார்வை, பத்மாவுக்கு பிடித்திருந்தது.
அந்தம்மா திரும்பியவுடன் தான் இவளுக்கு தெரிந்தது, அவள் கையில் இருந்த ஒரு மோர் குடம். கடைக் காரர்களுக்கு மோர் கொடுத்து, காசு வாங்கிக் கொண்டிருந்தாள்.
'அட...' உணர்ச்சிவசப்பட்ட பத்மாவுக்கு, ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
பத்மா அருகில் வந்த அந்த அம்மா, பத்மாவின் கைகளை பிடித்து கண்கள் கலங்க கேட்டாள்... ''இப்ப சொல்லும்மா... நீ, என் பொண்ணு மாதிரியா,'' என்றாள் ஆவலாக!
பத்மாவுக்கு ஒன்றும் ஓடவில்லை; அதற்குள், அவளை சந்தைக் கடைக்காரர்கள் சிலர் சூழ்ந்து, ''அம்மா... நீங்க போன பின், இந்தம்மா ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்துச்சு. என்னன்னு கேட்டோம், அப்போதான் தன், கஷ்டத்தை எல்லாம் சொல்லி அழுதது...
''முன்ன, இந்தம்மா ஏதாவது வேலை செய்ய வந்தா, பிச்சைக்காரின்னு சொல்லி அடிச்சு துரத்துவோம்... அதையெல்லாம் சொல்லி அழுதது. அதான், நாங்களும் உதவி செய்ய முடிவு பண்ணிட்டோம். நீங்க கொடுத்த காசுல பானை வாங்க சொல்லி, தயிர் வாங்கி, மோராக்கி, எல்லாருக்கும் விற்க சொன்னோம்.
''அவங்களும் இப்போ சுத்த பத்தமா மோர் விக்கிறாங்க... இங்கேயே ஒரு கடையில் தங்கிக்கிறாங்க... இப்போ, பக்கத்தில் ஒரு மெஸ்சில் வேலைக்கு சேரச் சொல்லி இருக்காங்க... சந்தை கடைக்காரங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க சொல்லி இருக்கோம்,'' என்றதும், பத்மாவுக்கு கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.
அந்த அம்மாவை அணைத்துக் கொண்டாள்.
''இப்போ சொல்லும்மா... நீ, என் பொண்ணு மாதிரியா,'' மீண்டும் அந்தப் பெண்மணி கேட்ட போது, ''ஆமாம்மா... நான், உன் பொண்ணு மாதிரி தான்,'' என்று சந்தோஷத்துடன் சொன்ன பத்மா, ''உங்க பேர் என்னம்மா?'' என்றாள்.
''கமலா!'' என்று அந்த அம்மா கூறியதும், பத்மாவின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
- ரவிகிருஷ்
