தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாயிகளை வாழ வைப்போம்!

கல்யாண சமையல் ஒப்பந்ததாரராக இருக்கிறார், என் நண்பர். இவர், கல்யாண சமையலுக்கு தேவையான காய்கறிகளை, மார்க்கெட்டிற்கு சென்று வாங்குவதில்லை. மாறாக திருமண வீட்டாரின் அனுமதியுடன், அங்குள்ள விவசாயிகளிடமே வாங்குகிறார். போன் செய்தால், சம்பந்தப்பட்ட விவசாயிகளே, தேவையான காய்கறிகளை மண்டபத்திற்கு கொண்டு வந்து தந்து விடுகின்றனர்.

இதுபற்றி, அவரிடம் கேட்டபோது, 'வெயிலிலும், மழையிலும் பாடுபட்டாலும், விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை; இடைத்தரகர் மற்றும் வியாபாரி இல்லாமல் கல்யாண மண்டபத்திற்கே நேரடியாக காய்கறிகளை சப்ளை செய்வதால், அவர்களுக்கும் லாபம்; எங்களுக்கும் மார்க்கெட் விலையை விட குறைவாகவும், புதிதாகவும் வாங்கிய திருப்தி.

'திருமண வீட்டாரிடம் முன்பே சொல்லி அனுமதி வாங்கி விடுவேன்; இதுபற்றி, மற்ற சமையல்கார நண்பர்களிடம் சொன்னபோது, அவர்களும் பாராட்டியதோடு, இதே முறையை பின்பற்றி விவசாயிகளை வாழ வைக்க உறுதி பூண்டுள்ளனர்...' என்றார்.

ஒவ்வொருவரும், இதேபோல், தங்கள் பங்கிற்கு விவசாயிகளை வாழ வைக்க முன்வந்தால், விவசாயம் விருப்பப்பட்ட தொழிலாகி, செழிக்கும் என்பதில் ஐயமில்லை!

—ஆர்.பி.கவின், ராஜபாளையம்.

சபாஷ்... இளம்பெண்களே!

கொடைக்கானலுக்கு செல்லும் வழியில், இளநீர் குடிப்பதற்காக, ஒரு கடை முன் காரிலிருந்து இறங்கினோம். ஒரு இளநீர், 40 ரூபாய் என்று சொல்ல, ஆளுக்கொன்று வாங்கி குடித்துக் கொண்டிருந்தோம். அங்கு கல்லுாரி மாணவியர் நால்வர் இளநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இளநீர் குடித்த ஆந்திராக்காரர் ஒருவர், பர்ஸிலிருந்து, 100 ரூபாய் எடுத்து கொடுக்க, கடைக்காரர், மீதி, 20 ரூபாய் மட்டுமே கொடுத்தார்.

கல்லுாரி மாணவியரில் ஒருத்தி அதை பார்த்து, வியாபாரியிடம் கேட்டாள். மொழி தெரியாதவரிடம், ஒரு இளநீரை 80 ரூபாய்க்கு கொடுத்து ஏமாற்றியது தெரிந்தது. அவ்வளவுதான்... மாணவிகள் நால்வரும் சேர்ந்து, அந்தக் கடைக்காரருக்கு செமையாக 'டோஸ்' விட்டதோடு, ஏமாற்றிய ரூபாய்க்கு, ஒரு இளநீரை வாங்கி, சற்று துாரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்து, குடிக்க வைத்து, கிளம்பிச் சென்றனர்.

இனி, அந்த கடைக்காரர் ஜென்மத்துக்கும் யாரையும் ஏமாற்ற நினைக்க மாட்டார்.

'சிறுமை கண்டு பொங்குவாய்' என்ற பாரதியின் புதுமைப் பெண்களாகவே அவர்களை கண்டேன்.

— எஸ்.மணிமேகலை, மதுரை.

விவசாயத்துக்கு திரும்பும் இளைஞர்கள்!

சமீபத்தில், உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். 'தோட்டத்திற்கு போகலாம் வா...' என, என்னை அழைத்துச் சென்றார், உறவினர். கான்கிரீட் கட்டடங்களுடன் கூடிய பிரதான சாலை அது. இங்கு, எப்படி தோட்டம் என யோசித்தவாறு, நடந்தேன்.

சிறிது துாரத்தில், பாகல் மற்றும் அவரை கொடி படர்ந்திருந்த வேலியை பார்த்ததும், கண்களுக்கு குளுமையாக இருந்தது. வீடுகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில், காய்கறி தோட்டம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில், தங்கள் படிப்பு செலவு மற்றும் அவ்விடத்திற்கான வாடகையையும் செலுத்துகின்றனர், அங்குள்ள இளைஞர்கள்.

மேலும், அந்த தோட்டத்திலேயே மண்புழு உரம் தயாரித்து செடிகளுக்கு இடுவதால், இவர்களின் காய்கறிக்கு, அங்குள்ள மக்களிடையே அமோக வரவேற்பு!

நவீன யுகத்தில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மனதார பாராட்டி வந்தேன்.

— கே.சத்யா, கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us