தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா!(25)

ஆச்சி மனோரமா!(25)

ஆச்சி மனோரமா!(25)


PUBLISHED ON : ஆக 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் இறந்தபோது, இறுதிச் சடங்குகள் முடியும் வரை அங்கேயே இருப்பது என்ற முடிவோடு அங்கு தங்கியிருந்தார், மனோரமா.

இரவு நேரத்தில், உறங்க மனமில்லாமல், எல்லாரும் அந்த அறையிலேயே, இறந்தவரின் உடலை சுற்றி கூட்டமாக அமர்ந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த டி.ஏ.மதுரம், மனோரமா உள்ளிட்டோர் அமர்ந்திருந்த இடத்தில் வந்து உட்கார்ந்தவர், அந்த அகால அமைதி காரணமாக கிசுகிசுத்த குரலில் பேசத் துவங்கினார், மதுரம். அருகில் அமர்ந்திருந்தோரும், அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தில் அவர் பக்கமாக திரும்பினர்.

அவர், தன் காதல் கதையை ரகசியமாக, அதே சமயம் சுவாரஸ்யமாக சொல்ல ஆரம்பித்தார்...

'அந்த ஆளு, என்.எஸ்.கிருஷ்ணன் இருக்காரே... ஒரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார்; அந்த படத்துக்கான ஷூட்டிங் கல்கத்தாவுல நடந்தது. அங்க கூட்டிட்டு போனாரு; அங்க போனதிலிருந்தே எங்கிட்ட ரொம்ப வழிஞ்சாரு... எம்மேல ஒருவித மயக்கத்தில் இருந்ததை புரிஞ்சுகிட்டேன்.

'ஆனா, எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல; அவரு கறுப்பு; அதிலும், அவரோட பம்பை தலை எனக்கு பிடிக்கவே இல்லை. ஆனாலும், என்னை விடாம துரத்தித் துரத்தி வந்தாரு...' என்று என்.எஸ்.கிருஷ்ணனோடு அவருக்கு ஏற்பட்ட காதலை பற்றி, கதை போல சொல்லிக் கொண்டிருந்தார், மதுரம்.

அப்புறம் அவரை காதலித்தது, திருமணம் செய்தது வரை சுவாரஸ்யமாக சொல்ல, அனைவரும் ரசித்து, சிரித்தனர்.

துவக்கத்தில் மெல்லிய குரலில் தான் பேச ஆரம்பித்தார், மதுரம். ஆனால், போகப் போக, அது, ஒரு சாவு வீடு என்பதை மறந்து, குரலை உயர்த்திக்கொண்டே போனார். மற்றவர்களும் சத்தமாக சிரித்துக் கொண்டே இருந்தனர்.

இவர்களுடன் நடிகை பண்டரிபாயும் இருந்தார்; பொதுவாக, அவர் இதுபோன்ற கேளிக்கை பேச்சுகளில் பங்குபெற மாட்டார்; ஒதுங்கிதான் இருப்பார். குறிப்பாக, உரக்க சிரிக்கும் பழக்கமே இல்லாதவர்.

ஆனால், மதுரத்தின் நகைச்சுவை கலந்த பேச்சை கேட்டு, உரக்க சிரித்தார். இது அங்கிருந்த அனைவருக்குமே வியப்பை கொடுத்தது.

நள்ளிரவு; எங்கும் இறுக்கமான அமைதி. இறந்தவரின் உடலை சுற்றி அமர்ந்து, ஆறேழு பெண்கள், 'கலகல'வென சிரித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்...

உறங்கிக் கொண்டிருந்தவர்கள், இந்த சிரிப்பொலி கேட்டு எழுந்து விட்டனர். அதில் ஒருவர், 'யாரு இப்படி சிரிக்கிறது... இது என்ன கல்யாண வீடா... சாவு வீடுங்கிற விவஸ்தை கூட இல்லாம என்ன சிரிப்பு...' என்று சத்தம் போட்டார்.

சட்டென்று, சப்த நாடியும் ஒடுங்க, அவர்களின் சிரிப்பு நின்றது.

துக்க வீடு; இறந்து போனவர் அனைவரிடமும் அன்பும், பாசமும் காட்டியவர். அவரது உடல் அருகே அமர்ந்து, கொஞ்சமும் துக்கம் இல்லாமல் சிரித்து பேசியது, எத்தனை பெரிய தவறு!

அவர்கள் தவறை உணர்த்தி, அதட்டியவர் கருணாநிதியின் மூத்த சகோதரி.

பண்டரிபாய், மூலையோடு மூலையாக முடங்கிக் கொண்டார். டி.ஏ.மதுரம் எங்கே போனார் என்றே தெரியவில்லை. காலையில் தான் அவரை பார்க்க முடிந்தது.

இந்த சம்பவத்திற்கு பின், யாருமே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. இறுக்கத்துடனே மறுநாள் பொழுது கழிந்தது.

கருணாநிதியின் மூத்த சகோதரியின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கவே அனைவரும் கூச்சப்பட்டனர். அவரை கண்டால் வேறு பக்கமாக ஒதுங்கிச் சென்றனர்.

இச்சம்பவம், மனோரமாவுக்கு மிகப்பெரிய வாழ்க்கை பாடத்தை கற்றுத் தந்தது.

அதன்பின், எத்தனையோ இறப்பு வீடுகளுக்கு சென்றிருக்கிறார். அங்கு துயரத்தை மட்டுமே பங்கிட்டு கொண்டார், மறந்தும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அனுமதித்தது கிடையாது.

ஒரு பெண், திருமண பந்தத்திற்கு பின்னரே தாய்மை என்ற பெரும் பேற்றை அடைகிறாள்; அதுதான், இந்த சமுதாயத்தில் அவளுக்கு மதிப்பையும், அந்தஸ்தையும் தருகிறது.

ஒரு சுமூகமான, இல்லற வாழ்க்கை மனோரமாவிற்கு கிடைக்காமல் போனது அவரது துரதிர்ஷ்டம் தான்.

கண் திறந்தது என்றொரு படம்;

கே.வி.சீனிவாசனின் இயக்கத்தில், அக்டோபர் 31, 1959ல் வெளியானது. இப்படத்தின் கதாநாயகன், எஸ்.எம்.ராமநாதன்; கதாநாயகி மைனாவதி.

இதில், டி.ஆர்.நடராஜன், சஹஸ்ரநாமம், ஏ.கருணாநிதி, டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.

நாடகம் மற்றும் திரைப்பட நடிகர், ராமநாதன். இப்படத்திற்கு பின், தேடி வந்த லட்சுமி, கறுப்பு பணம், கருந்தேள் கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மனோரமாவின் வாழ்வில் முக்கிய இடத்தை வகித்தவர், ராமநாதன்.

அப்போது, 'வைரம்' நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தார், மனோரமா. சக நடிகர் ஒருவர், அவரை காதலித்தார்.

அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் நடித்து, பேரும், புகழும் பெற வேண்டும் என்பது மட்டுமே மனோரமாவின் லட்சியமாக இருந்ததால், சக நடிகரின் காதல் உண்மையானதா என்று பிரித்து பார்க்கத் தெரியவில்லை.

அந்த நடிகர், நாடக சபாவின் முக்கிய பொறுப்பில் இருந்தார். தன் காதலை மனோரமாவிற்கு உணர்த்துவதற்காக ஏதேதோ வழிமுறைகளை கையாண்டார்.

ஒரு கட்டத்தில், அவரை ஒதுக்கித் தள்ள முடியாமல், அவரோடு பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின், நெருங்கி பழக ஆரம்பித்தார்.

காதல் நோய் மனோரமாவை தொற்ற, இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

அந்த நடிகர் தான், எஸ்.எம்.ராமநாதன்.அவரை முழுமையாக நம்பினார் மனோரமா. அவரை திருமணம் செய்து, வாழ நினைத்தார்.

ஆனால், இவர்களது காதலுக்கும், திருமணத்திற்கும், மனோரமாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்தார். ராமநாதன் அத்தனை நல்லவர் கிடையாது அவரை மணந்தால் தன் மகள் நிம்மதியாக இருக்க மாட்டாள் என்று நினைத்தார்.

எனினும், மனோரமாவால், ராமநாதனை மறக்க முடியவில்லை. அவர்களின் காதல் அத்தனை இறுக்கமானதாக அமைந்து விட்டது. 1964ல், 'வைரம்' நாடக சபா, துாத்துக்குடியில் முகாமிட்டது. அங்கு வரிசையாக நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது, ராமநாதனும், மனோரமாவும் திருமணம் செய்துகொள்ள நினைத்தனர். அவர்களின் அந்த திடீர் முடிவிற்கு மனோரமாவின் தாய் எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால், அவருக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

— தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம்சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us