PUBLISHED ON : ஆக 26, 2018

தென் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர் எழுதிய வித்தியாசமான, ஆச்சர்யப்பட வைக்கும் அதே நேரம் எச்சரிக்கையூட்டும் ஒரு சம்பவம் குறித்த கடிதம் இது; படியுங்கள்...
திருமண வயதிலுள்ள பெண்ணை வைத்திருப்போர், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறுவர்; அது, அந்த காலம். தற்போது, திருமண வயதுள்ள மகன்களின் பெற்றோரும் மடியில் நெருப்பைக் கட்ட வேண்டும் போலுள்ளது.
மாப்பிள்ளை பார்க்க, பல வழிகள் இருந்தாலும், சமீபத்தில் நான் கண்ட, 'டெக்னிக்' ஒன்றை வாசகர்கள் அறிவதற்காக தருகிறேன்.
என் நண்பர் ஒருவர், கதராடை மட்டுமே அணியும் காந்தியவாதி,- தமிழறிஞர். நண்பரின் மகன் ஐந்து இலக்க சம்பளம் பெறும் பணியில் உள்ளவர். ஓரளவுக்கு வசதியான, பண்பாடுமிக்க குடும்பம். இக்குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்த பலரும் சம்பந்தம் செய்ய போட்டி போட்டனர்.
இச்சூழ்நிலையில், பையனை மடக்க, ஒரு பெண்ணின் குடும்பம், 'சூப்பர்' திட்டம் தீட்டியது. திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார், பெண்ணின் தாயார். நண்பரின் மகனைப் பற்றி கூறி, படிக்கும் மகளிடம் ஆசையைத் துாண்டி விட்டார், அந்தத் தாய். கற்பூர புத்தியுள்ள அப்பெண், தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை (பையனை வளைத்தல்) நன்றாகவே செய்ய ஆரம்பித்தார்.
நண்பர் வீட்டுக்கு அடிக்கடி, 'ரெக்கார்ட்ஸ்' எழுத, சந்தேகம், 'தீசிஸ்' எழுத, 'ஐடியா' வேண்டும் என்ற போர்வையில் வந்து செல்ல, சினிமா பாணியில், பெற்றோர் மேற்பார்வையில் காதல் பயிரை வளர்க்க ஆரம்பித்தார், அப்பெண்.
பெண் வீட்டாரின் குணம் அறிந்த நண்பர்கள் குழாம், என் நண்பரையும், அவரின் சமர்த்துப் பிள்ளையையும் கூப்பிட்டு, அறிவுரை கூறியது. நண்பரோ, 'வீட்டிற்கு வருவோரை எப்படி வராதே என்று கூறுவது...' என்றார். அவரின் மகனும் அதே போன்றே நினைத்தார்.
நண்பரின் மகனைக் காண அப்பெண் வருவதைக் கண்ட அக்கம் பக்கம், 'கிசுகிசு'க்க ஆரம்பித்தது. இதை எதிர்பார்த்திருந்த பெண் வீடு, 'எங்கள் பெண்ணை அந்த பையன் விரும்புகிறான்...' என்று, 'லவ்'வே இல்லாத சூழ்நிலையிலும், 'நாங்கள் தான் பெண் கொடுக்கப் போகிறோம்...' என்று டமாரம் போட்டது. அதற்கேற்றாற் போல் அப்பெண் பையனைத் துரத்தித் துரத்தி, 'லவ்'வினார்.
பெண் வீட்டுப் பிரசாரத்தைக் கேள்விப்பட்டு பெண் கொடுக்க போட்டியிட்டவர்கள் பின்வாங்கிடவே, அதிர்ச்சியடைந்த நண்பர் வீடு, 'போனால் போகட்டும்... எல்லாம் நன்மைக்கே...' என்று, தேடி வந்த தேவதைக்கு, 'ஓகே' சொன்னது.
மாப்பிள்ளை நமக்குத் தான் என்று உறுதியானதும், அடிமாட்டை விலை பேசியதற்கொப்ப, 'எங்களால் இவ்வளவுதான் செய்ய முடியும்...' என்று, அதல பாதாளத்துக்கு இறங்கியது, பெண் வீடு.
தர்மத்துக்குக் கட்டுப்பட்ட நண்பர், பேச்சை மாற்றிப் பேசவோ, சம்பந்தத்தை முறிக்கவோ முடியாமல் அமைதி காத்தார்.
மிகவும் வேண்டியவர்கள், வேறிடம் பார்க்கும்படி ஆலோசனை கூறியும், பேச்சு மாறவில்லை நண்பர். 'சத்தியமே பெரியது... ஒரு பெண்ணின் வாழ்வு என்ன ஆகும்...' என, நண்பரும், அவரின் பிள்ளையும் நினைத்தனர்.
'நமக்குப் பாவம் பிடிக்க வேண்டாம்...' என்றார் நண்பரின் மனைவி.
பெரிய பணியில் உள்ள பையனுக்கு மிகக் குறைவாக நகை போடப் போகின்றனர் என்பதால், நண்பர் மகன் தவறு செய்து விட்டதாகவும், வகையாக மாட்டிக் கொண்டதாகவும், ஊருக்குள் புரளி கிளம்பியது.
தங்கள் குடும்ப கவுரவம் வெகுவாக பதம் பார்க்கப்பட்ட சூழ்நிலையிலும், பொறுத்துக் கொண்டார் நண்பர். பெண் வீடோ, நண்பரின் மகனின் காதல் நிறைவேறுவதாக வேஷம் போட்டது. கதை இப்படி சென்றும், நண்பர் வீட்டில் சொன்னது... 'காசு, பணம், வாழ்க்கை அல்ல; காசு வரும், போகும். ஆனால், வாழ்க்கை என்பது ஒரு பெண்ணுடன்தானேயொழிய, பணத்துடன் அல்ல...' என்பது தான்!
கொஞ்சம் கூட நாகரிகம் இன்றி தம் பெண்ணுடன் இன்னொரு ஆணை கிசுகிசுக்கச் செய்து, சற்றும் கவுரவம் இல்லாமல் பண்பாட்டைக் காற்றில் பறக்க விட்டு, காரியம் சாதித்து விட்டனர் பெண் வீட்டார். எல்லாரும், 'பையன் விரும்பியதால் தான் இத்திருமணம்...' என்றே நினைத்தனர். பெண் வீட்டார் விரும்பியதால் தான் இத்திருமணம் என்ற விஷயம், பெண் வீட்டு பிரசார யுக்தியில் மறைந்து போனது. ஆனால், பெண் வீடோ, எதுவும் தங்களுக்குத் தெரியாது, பையன் வீட்டார் பெண்ணைக் கேட்டதால் திருமணம் என்பது போல காட்டிக் கொண்டனர்.
திருமணமும் நடந்து முடிந்தது. காரியம் ஆகும் வரை காலைப் பிடித்து, முடிந்ததும், கழுத்தை நெறிப்பது போல அடாவடியில் இறங்கியது, பெண் வீடு. சாதுவான நண்பர் குடும்பம் விழிக்கிறது. பெண்ணோ, பழையதை மறந்து, தன் வீட்டைப் பெரிதாகக் கூறி, 'என்னை அங்கே கேட்டார்கள்... இங்கே கேட்டார்கள்... இங்கு வந்து மாட்டிக் கொண்டேன்...' என்று, நடிகை ரேவதி ஒரு படத்தில் பாடியது போல் பாடுகிறார்.
காதலித்த போது அப்பெண் போட்டிருந்த, 'பயந்த' நல்ல பெண் முகமூடியைக் கழற்றி, அவர் அலட்டும் அலட்டலும், அவர் பிறந்த வீட்டினர் செய்த அலம்பலாலும் பிரச்னை முற்றி, இப்போது, பிரிந்து வாழ்கின்றனர், தம்பதியர்.
நண்பர் தான் காந்தியவாதி; நண்பரின் பிள்ளை அல்லவே... எனவே, பிரச்னை வந்து விட்டது.
தற்போது குறை காண முடியா அந்த நல்ல பையன் மீது, தேவையற்ற, உண்மையற்ற, குறைகளை கண்டுபிடித்து, அக்கம்பக்கம் எல்லாம் பிரசாரம் செய்கிறது பெண் வீடு. இதில், வரதட்சணை, சீர் செனத்தி பற்றி எதுவும் பேசவில்லை நண்பர் வீடு என்பதும், இதை மையமாக வைத்தும் பிரச்னை எழவில்லை என்பதும் தான் இங்கு, 'ஹைலைட்'டான' விஷயம்!
நண்பரின் மகனோ, 'நாம் ஜாக்கிரதையாய் சரியான பாதையில் சென்றாலும், திட்டமிட்டு மோதி ஏற்படுத்தப்பட்ட, 'ஆக்சிடென்ட்' போன்றது என் திருமணம். நான் இவளின் பாதையில் குறுக்கிடவே இல்லை; அவள் தான் என் பாதையில் குறுக்கிட்டு, 'ஆக்சிடென்ட்' செய்து, அதனால் லாபம் அடைந்துள்ளாள்...' என்கிறார்.
நேர்வழியில் வராமல் குறுக்கு வழியில் நுழைந்தவர்களால் அமைதி இழந்து தவிக்கிறது நண்பர் குடும்பம்.
கெட்டதையே செய்த பெண் வீடு, 'நல்லதுக்கு காலம் இல்லை' என்கிறது.
உள்ளூர்க்காரர்களுக்கோ, பெண் வீட்டாரைப் பற்றி நன்கு தெரிந்து இருப்பதால், ஏமாந்து போன காந்தியவாதி நண்பருக்காக பரிதாபப்படுகின்றனர்.
மகளுக்கு எக்கச்சக்கமாய், 'அள்ளிக்' கொடுத்து விட்டதால், தங்கள் செல்வம் குன்றிப் போனது போல், 'பீல்' செய்கிறது, பெண் வீடு.
தேடி வந்ததைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட நண்பர் வீடோ, பெருமையிழந்து, புயலில் சிக்கிய படகு போல் நிற்கிறது.
தேவையின்றி துாண்டி விடும் பெண் வீட்டுக்கும், பெற்றோரே கதி, அவர்கள் கூறுவதே வேத வாக்கு என்று எண்ணும் இளம் பெண்களுக்கு, மணமான பின், தன் கணவன், மாமனார், மாமியார் மட்டுமே முக்கியம் என்பது புரியவில்லை. பெண்ணிற்கு தன் தவறு தெரியாததாலும், வீணான கர்வத்தாலும், பழையதை மறந்ததாலும் (அன்பு, பாசம்) பிரச்னை தற்போது விவாகரத்தை நோக்கிப் போயுள்ளது.
இந்த விஷயம் வாசகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.
தர்மத்திற்கும், சத்தியத்திற்கும் அடிபணியும் நண்பர் வீடு; பிளானிங்கில் சிறந்த, நல்லது, கெட்டதுக்குப் பயப்படாத பெண் வீடு அல்லது விதி... இந்த மூன்றில் எதைக் குறைச் சொல்வது என்ற பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடுகிறேன்.
- இப்படி எழுதியுள்ளார். எச்சரிக்கை, எதிலும், எப்போதும், என்றும் தேவை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்!
