PUBLISHED ON : செப் 30, 2018
நம்பிக்கையே வாழ்க்கை!
என் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து, 'பாம்பு... பாம்பு...' என, ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளோர் அனைவரும், அந்த வீட்டு முன், கூடினோம்.
வீட்டின் கதவு, வெளிப்புறமாக பூட்டியிருந்ததை கண்டு, ஒரு நிமிடம் திகைத்து, பின் அவர் கணவரின், மொபைல் எண் வாங்கி, கணவருக்கு தகவல் தெரிவித்தோம்.
அவரும் பதறி வந்து, வீட்டின் பூட்டை திறந்தார். ஏதோ ஒன்றை பார்த்து அவர் மனைவி பயந்து, கத்தியுள்ளதை அறிந்து, நிம்மதியடைந்தோம்.
அவர்கள், இளம் தம்பதியினர் என்பதும், கணவர் சந்தேக பேர்வழி, எதையும் எளிதில் நம்பிவிட மாட்டார் என்பதும், அப்போதுதான் அறிய முடிந்தது.
தினமும், மனைவியை உள்ளே வைத்து பூட்டி, அலுவலகத்திற்கு செல்வது அவர் வழக்கமாம்.
மனைவி மீது நம்பிக்கை வைத்து, அவளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவள் மீது அளவில்லா அன்பு வைப்பது தான் ஒரு ஆண் மகனுக்கு அழகு.
எங்கேயோ பிறந்து வளர்ந்து, முன் பின் தெரியாத ஆடவனுக்கு கழுத்தை நீட்டும் பெண்ணானவள், கடைசி வரை கணவரின் சுக துக்கங்களில் பங்கெடுத்து கொள்கிறாள் என்பதை, கணவன் மறந்து விடக்கூடாது.
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்குத் தான் மற்றவரிடத்தில் நம்பிக்கையின்மையும், சந்தேகமும் உண்டாகும்.
சந்தேக கணவன்மார்களே... உங்களையே நம்பி, வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள மனைவியை நேசியுங்கள்; அவள் மீது முழு நம்பிக்கை வையுங்கள்; நம்பிக்கையே வாழ்க்கை!
— அ.மாரிமுத்து, மதுரை.
நல் வழி காட்டிய ஆசிரியர்!
அண்மையில், ஓட்டலுக்கு சென்றிருந்தேன். அங்கு, பள்ளி ஆசிரியர் ஒருவர் சாப்பிட வந்திருப்பதை அறிந்த ஓட்டல் முதலாளி, அன்புடன் அவரை வரவேற்று, தானே அவருக்கு, உணவு வகைகள் பரிமாறுவதை விசித்திரமாக பார்த்தேன்.
அந்த ஆசிரியர் சாப்பிட்டு போன பின், ஓட்டல் முதலாளியிடம், அவரைப் பற்றி விசாரித்தப் போது, 'மேல்நிலை பள்ளியில், அவரிடம் தான் படித்தேன். எனக்கு சுத்தமாக படிப்பு ஏறவில்லை. மற்ற ஆசிரியர்களெல்லாம், 'நீ உருப்பட மாட்ட...' என, மோசமாக திட்டினர்.
'இவர் ஒருவர் தான், 'படிப்பு சரியாக வராதது பெரிய குறையே இல்ல... ஆர்வம் இருந்தால், படிக்காமலேயே எந்த துறையிலும் சாதிக்கலாம். அதனால், உனக்கு விருப்பப் பட்ட வேலையில் சேர்ந்து, தொழிலை கற்றுக்கொள். விரைவில் முன்னுக்கு வருவே...' என்று தைரியம் சொன்னார்.
'என் விருப்பப்படியே, சர்வர் வேலையில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, இன்று இவ்வளவு பெரிய ஓட்டலுக்கு முதலாளியாகி விட்டேன்...' என்றார்.
ஆசிரியர் என்பதற்காக, படிப்பை மட்டுமே உயர்த்தி பேசாமல், வாழ்வின் யதார்த்தத்தை சொல்லி, படிக்காத மாணவனையும் வாழ்வில் முன்னேற்றிய அந்த ஆசிரியர் வணக்கத்துக்குரியவர் என்பதில், ஐயமே இல்லை.
கோ.ஞானகுரு, ஸ்ரீவில்லிபுத்துார்.
வித்தியாசமான விநாயகர் பூஜை!
ஒவ்வொரு ஆண்டும், எங்கள் ஊரில், வீடு தோறும் பணம் வசூல் செய்து, ஊர் பொது இடத்தில், பெரிய விநாயகர் சிலை வைத்து, 10 நாட்களுக்கு பூஜை, இசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் என, தடபுடலாக, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவர்.
இதற்கு காவல் துறை அனுமதியுடன், சிலை கரைப்பு ஊர்வலம் என, பல சம்பிரதாயங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்தாண்டு வித்தியாசமாக, விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரம் முன்னரே, கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, பெரிய அளவிலான பிள்ளையார் படத்தை, 'ப்ளக்ஸ் பேனர்' ஆக தயார் செய்து, ஊர் கோவிலின் பிரகாரத்தில் வைத்து விட்டனர்.
இதற்கு, தினமும் பூஜை, இசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் எல்லாம் நடைபெற்றது.
காவல்துறை அனுமதி, சிலை கரைப்பு ஊர்வலம், போலீஸ், 'பாரா' என்ற நிபந்தனையும் இல்லை; சண்டை சச்சரவும் இல்லாமல், நிம்மதியாக இருந்தது.
பொதுமக்களும் மகிழ்ச்சியுடன், சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும், 'ப்ளக்ஸ் பேனரை' அவிழ்த்து, அடுத்த ஆண்டிற்கு பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
அனைவராலும் இந்த முயற்சி பாராட்டப்பட்டது.
வேத.புருஷோத்தமன், மன்னார்குடி.
