PUBLISHED ON : செப் 30, 2018

லண்டனில் வசிக்கும் நண்பர், டாக்டர் இந்திரகுமார் பற்றி ஏற்கனவே, பா.கே.ப., பகுதியில் சொல்லி இருக்கிறேன். அவர் ஒரு மருத்துவர்... ஆனால், ஆர்வம் முழுவதும் இதழியல் மீது! 'மேகம்' என்ற பெயரில் மாதம் இருமுறை இதழ் ஒன்றை லண்டனில் நடத்துகிறார்.
அந்த இதழில், 'மேனாட்டு சிங்காரிகளின் காற்றடைத்த பைகள்' என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார், டாக்டர் இந்திரகுமார்.
கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா' என்று ஒரு சித்தர் என்றைக்கோ சொன்னது. மேனாடுகளில் இன்று உண்மையாகி விட்டது.
உலகப் புகழ்பெற்ற சிலிக்கோன் மார்பகங்களுக்கு உரிமையானவர், புகழ்பெற்ற நடிகை பமீலா ஆண்டர்சன். அரை மஞ்சள் இதழான உலகப் புகழ்பெற்ற, 'ப்ளேபாய்' இதழின் அட்டையில் அவரது படம் எட்டு முறை வெளியாகி, உலக சாதனையை ஏற்படுத்தியதென்றால் அதற்கு, அவரது மார்பகங்களின் மந்திரஜாலம் தான் காரணம்.
ஆனால், 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று, பமீலா சமீபத்தில் சத்திர சிகிச்சை செய்து, தன் மார்பகங்களை அலங்கரித்த சிலிக்கோன் செல்வங்களைத் துாக்கி துார வீசிவிட்டார்.
மார்பகங்களினுள் சிலிக்கோன் திணிப்பதை சத்திர சிகிச்சை என்று குறிப்பிடுகின்றனர். இதை, டாக்டர்கள், 1992ல் நிறுத்தி விட்டனர். ஆனால், மேனாட்டுப் பெண்கள் மருத்துவ உலகினரை சும்மா இருக்க விட்டார்களா என்ன?
அதன் விளைவாக, 'சேலைன்' அடைத்த பைகள் மார்பகங்களில் திணிக்கப்பட்டன. மார்பகங்கள் மீண்டும் பெருக்கத் தொடங்கின.
தற்போது காற்றடைத்த பைகள் ஏர்பேக்ஸ் மார்பகங்களுள் திணிக்கப்பட்டு வருகின்றன. பெரிய பலுான்கள் போல் மார்பகங்கள் உப்பி நிற்கின்றன.
இந்த சிகிச்சையினால், பலருக்கு ஆறு வாரம் வரை மார்பு வலி, வாந்தி, துாக்கமின்மை, தீராத அழுகை போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு பின், மார்பகங்கள், அவற்றின் மென்மையை இழந்து, கட்டி போல் இறுகுகின்றன. நமக்கு உடலில் ஒரு காயம் ஏற்பட்டால், அது காய்ந்தபின் அந்த இடத்தில் தழும்பு ஏற்படுகிறது அல்லவா...
மார்பினுள்ளே இருக்கும் சிலிக்கோன் வஸ்து, உடலின் இயற்கை திசு அல்ல, ஒரு வேற்றுப் பொருளே என்பதை உடம்பு கண்டுபிடித்து, சிலிக்கோனைச் சுற்றி ஒருவித முட்டைக்கோது போல தடிப்பான தழும்பினை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், மார்பகங்கள் கல்லுப்போல் கடினமாகி விடுகின்றன. அவற்றின் உருவமும் தளதளவென்று கண்ணுக்கு விருந்தாக இருந்த நிலை போய், ஒருவித அசாதாரணத் தோற்றம் ஏற்படுகிறது.
சில வேளைகளில் மார்பகங்களினுள்ளே சிலிக்கோன் கசிவு ஏற்படுவதால் எரிச்சலுாட்டும் அரிப்பு உண்டாகிறது. கசியும் மார்பகம், மற்ற மார்பகத்தை விடச் சிறுத்து அலங்கோலமாகக் காட்சி தருகிறது.
இந்தப் பிரச்னைகள் ஏற்படும்போது இப்பெண்கள், மறுபடியும் சத்திர சிகிச்சை டாக்டர்களிடம் ஓடுவர். மீண்டும் சத்திர சிகிச்சை நடக்கும்.
மார்பகங்கள் யுத்தகளம் போல் காட்சியளிக்கும். மேலும் தழும்புகள், வேதனை, சிக்கல்கள், சத்திர சிகிச்சை... அப்பப்பா என்ன வேதனை... என்று எழுதியுள்ளார்.
இந்தக் கண்றாவிகள் நம்மூரில் பரவாதது, நிம்மதியை தருகிறது.
அவர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். மரியாதை நிமித்தம் அவரை சந்திக்கச் சென்றேன். பேச்சோடு, பேச்சாக பிரிவுபசார விழாவில், தம் மாணவர்களுக்கு, அவர் கூறும் அறிவுரை பற்றிக் கூறினார்:
தந்தை சொற்படி நடவாதே
தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே
உட்கார்ந்து சாப்பிடாதே
படுத்துத் துாங்காதே...
என்பாராம்!
'என்ன சார்... இப்படியெல்லாம் அறிவுரை வழங்கினால், பையன்களின் எதிர்காலம் என்னத்துக்கு ஆகும்?' எனக் கேட்டேன்.
'அவசரப்படாதே தம்பி... விளக்கம் சொல்கிறேன்...' என்றவர், ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கினார்.
'நீங்கள் தவறான வழிகளில் சென்றால், தந்தை மனமுடைந்து, கடுஞ்சொல் உரைப்பார். 'அப்பா சொல்லும்படியாக ஏனப்பா நடந்து கொள்கிறாய்?' எனத் தாய் கூறுவாள். இதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.
'தாயின் செலவுக்கு பணம் தராதே என்பது, நீங்கள் சம்பாதிக்கும் நிலை வரும்போது, தாயின் செலவுக்கென்று தனியே பணம் தராமல், சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் தாயிடம் கொடுத்து விடுங்கள். உங்கள் நலம் ஓங்க, தாய், உங்களைப் பாதுகாப்பாள்.
'உட்கார்ந்து சாப்பிடாதே என்றால், சோம்பேறியாக, மற்றவர் கையை எதிர்பார்த்து வாழாதே... உழைத்து உண்; -ஓங்கி வாழ்வாய்...
'படுத்து துாங்காதே என்றால், உழைக்காதவர்கள் படுக்கையில் படுத்து, துாக்கம் வராமல் வேதனைப்படுவர். உழைப்பவர்களுக்கு, படுக்கைக்குச் செல்லும் முன்பே கண் மயக்கம் வந்து விடும். அப்படி வாழுங்கள்... இதுதான் அதன் பொருள்...' என்று விளக்கினார்!
