
நலம் வாழ...
என் உறவினர் பெண்ணை, மருத்துவமனையில் சேர்த்திருந்த போது, துணைக்கு, அவருடன் இருந்தேன். அப்போது, அவரை பார்ப்பதற்காக வந்து சென்ற உறவினர் மற்றும் நண்பர்களின் செயல், பாராட்டும்படியாக இருந்தது.
மூளையில் கட்டி வந்து, அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாளே, கோமா நிலைக்கு சென்று விட்டார், அப்பெண். அதன்பின், 43 நாட்களுக்கு பிறகே கண் விழித்தார். என்றாலும், வாய் பேச முடியாமல், வலது பக்கம், கால், கை செயல் இழந்திருந்தது.
இதை பார்த்த உறவினர்கள், அவருடன் எடுத்த போட்டோ ஆல்பங்கள், வெவ்வேறு விசேஷங்களின் போது, அன்புடன் அளித்த பரிசு பொருட்கள், அவ்வப்போது சொன்ன அனுபவ குறிப்புகள் அடங்கிய, குறுந்தகடு அனைத்தையும் எடுத்து வந்து, போட்டு காண்பித்தனர்.
சில உறவினர்களின் பெயரை, எழுதி, வாசித்து, அவரிடம் விரலால் காட்டும்படி செய்தனர். அவரும் புரிந்து, காண்பித்தார். சிலர், அவரவருக்கு பிடித்தமான கோவிலுக்கு சென்று, அவர், நலம் பெற, அர்ச்சனை செய்து, மஞ்சள், குங்குமம் வாங்கி வந்து, அதை நெற்றியில் அணிவித்தனர்.
இதையெல்லாம் பார்த்த அப்பெண், சந்தோஷமடைந்து, பேச முயன்றார். விரைவில் பழையபடி பேச ஆரம்பித்து விடுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அப்பெண்ணை பார்க்க வந்த சொந்த பந்தங்கள், உடல்நலம் குன்றியவரின் நிலையறிந்து, இனிய சொற்களை பேசி, உற்சாகப்படுத்திச் சென்றனர். இது, எல்லாருக்கும் இன்பம் அளிப்பதாக இருந்தது.
ஆதலால், உடல்நலம் குன்றியிருப்பவரை பார்க்க, மருத்துவமனைக்கு செல்லும் உறவினர்களே... அங்கே, நேர்மறையான எண்ணங்களை மட்டுமே பேசுங்கள். அது, அனைவருக்கும், உற்சாக, 'டானிக்' ஆக இருக்கும்.
— த.இந்திராணி, சென்னை.
'சபாஷ்' போட வைத்த, மேனேஜர்!
வங்கியில், பணம் எடுக்க சென்றிருந்தேன். சுய உதவிக்குழு கடனுக்காக, பெண்களிடம் கையெழுத்து வாங்குவதில், 'பிசி'யாக இருந்தார், கிளை மேனேஜர். அதில், ஒரு பெண்ணுக்கு, கையெழுத்து போட தெரியவில்லை. அதனால், கை விரல் ரேகை வாங்கினார்.
வலது கை பெரு விரலை நீட்டிய அப்பெண்ணிடம், 'இடது கை பெரு விரலால் தான் ரேகை வைக்கணும்...' என்று சொல்லி, எல்லாரும் கேட்கும்படி, சற்று உரக்க, 'இதற்கு காரணம் என்ன தெரியுமா...' என, கேட்டார்.
ஒருவருக்கும் தெரியவில்லை.
'மனசாட்சிக்கு அடையாளமாக இருக்கும் இதயம், நம் உடம்பின் இடதுபுறத்தில் இருக்கிறது. அதனால் தான், 'உண்மைக்கு புறம்பாக நடக்க மாட்டேன். வாங்கிய கடனை, நேர்மையாக திருப்பி செலுத்தி விடுவேன்...' என்று உறுதிமொழி எடுக்கிற வகையில், இடது கை பெரு விரலால் ரேகையை பதிவு செய்யும்படி, விதிமுறை வச்சிருக்காங்க...' என்றார்.
இதைக் கேட்டு, அங்கிருந்த அனைவரும் ஆமோதித்து, தலை அசைத்தனர்.
மேனேஜரின் சமயோஜித திறமைக்கு, மனதுக்குள், 'சபாஷ்' போட்டேன்!
— அல்குர்ஷி மகபூப், நெல்லிக்குப்பம்.
இப்படியும் இருக்கலாம், தாம்பூல பை!
நண்பரின், 80 வயது நிறைவு விழாவிற்கு சென்றிருந்தேன். ஆயிரம் பிறை கண்ட தம்பதியரை நமஸ்கரித்து, ஆசி பெற்று, உணவருந்தி கிளம்புகையில், தாம்பூல பை தந்தனர். அதோடு, இரண்டு துணி பைகளையும் கொடுத்தனர். ஒன்றில், துளசி செடி, மண்ணோடு சிறு பூந்தொட்டியில்; மற்றொன்றில், வெற்றிலை கொடி இருந்தது.
அவற்றை தந்த பெரியவர், 'உங்கள் வீட்டின் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ அல்லது தோட்டத்திலோ இவற்றை வைத்து, தினமும் குளித்த பின், தவறாது நீர் ஊற்றுங்கள். சற்று பெரிதாக வளர்ந்தவுடன், பெரிய தொட்டியில் மாற்றி வளருங்கள். தோட்டமாக இருந்தால், மண்ணில் நட்டு வளர்க்கலாம்.
'வீட்டில் துளசி இருந்தால், லட்சுமி கடாட்சம் மட்டுமல்ல, துளசி மூலம் கிடைக்கும் பிராண வாயுவை சுவாசித்து ஆரோக்கியம் பெறலாம். வெற்றிலை மங்கலகரமானது. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு, வெற்றிலையை காம்போடு கிள்ளி தாம்பூலம் தரலாம்; கடைக்கு ஓட வேண்டாம்...' என்று விளக்கினார்.
அவர்கள் அன்பளிப்பாக தந்தவை வித்தியாசமாகவும், வீட்டிற்கு பயனுள்ளதாகவும் இருந்ததால், மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
— என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
காதலியின் சதி வலை!
வசதியான உறவினர் மகனுக்கு, சென்ற மாதம், தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்தது. ஒன்றரை ஆண்டுகளாக, மகன் காதலித்ததை அறிந்த உறவினர், பெண் வீடு, வசதியில் குறைந்தவர்கள் என்றாலும், ஜாதியை மறந்து, மகனின் நல்வாழ்வுக்காக, அப்பெண்ணையே திருமணம் செய்து கொள்ள அனுமதியளித்து, நிச்சயமும் நடந்தது.
பெண்ணும், மாப்பிள்ளையும், மேடையில் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசியதை பார்த்து, உறவினரின் தாராள மனதை, அனைவரும் பாராட்டினோம்.
அடுத்த வாரமே, தன் மகனே, அந்த பெண்ணை வேண்டாமென்று கூறியதால், திருமணத்தை நிறுத்தி விட்டதாக, உறவினரிடமிருந்து தகவல் வந்தது.
'திருமணம் முடிந்ததும், தந்தையிடம் சொல்லி, சொத்துக்களை வாங்கி தனிக்குடித்தனம் சென்று விடவேண்டும் என்ற காதலியின் நிபந்தனையை கேட்டு, அதிர்ச்சியான மகன், என்னிடம் அதைக் கூறி, திருமணத்திற்கு மறுத்து விட்டான்...' என்ற தகவலை பகிர்ந்த உறவினர், கூடவே இன்னொன்றையும் சொல்லி வருத்தப்பட்டார்...
'பெண் வீட்டார் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. மகனுக்காக, அத்தனையையும் மறந்து, சம்மதம் சொன்ன எங்களை, வேண்டுமென்றே சதி செய்து, திருமணத்தை நிறுத்தி விட்டதாக வெளியில் சொல்லி, பழி சுமத்துகின்றனர், பெண் வீட்டார்...' என்றார்.
இக்கால இளம்பெண்கள், காதலை பயன்படுத்தி, எப்படியெல்லாம் சதி செய்கின்றனர் என்பதை வருத்தத்துடன், கூறினார்.
இதுபோன்ற நிகழ்வுகளில், பெண் மீது தவறென்றாலும், ஆணை குற்றம் சுமத்தும் சமூகத்தை நினைத்து, வருத்தம் எழுந்தது.
—சுபா தியாகராஜன், சேலம்.