தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மண்ணின் மைந்தன்!

சமீபத்தில், நண்பர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு, துாத்துக்குடியில் உள்ள, சூழவாய்க்கால் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள இளைஞர்கள் மற்றும் ஒரு மருத்துவ குழு, முகாம் அமைத்து, பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

நண்பரிடம், அது பற்றி விசாரித்தபோது, 'எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், டாக்டருக்கு படித்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில், இதய நோய் நிபுணராக பணியாற்றுகிறார்.

'சொந்த கிராமத்திற்கு, ஆண்டுக்கு மூன்று நாட்கள், அவருடன் பணிபுரியும் மருத்துவ நண்பர்களுடன் வந்து, இங்குள்ளோருக்கு, ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., மற்றும் மற்ற மருத்துவ பரிசோதனைகள் செய்து, இலவசமாக மருந்து மாத்திரைகளும் கொடுக்கிறார்.

'தொடர்ந்து மருந்து மாத்திரை தேவைப்படுவோருக்கு, அவரது நண்பர் மூலம் இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்...' என்றார்.

பெரிய பொறுப்புகளில் உள்ளோர், இதுபோல, தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு, அவர்களால் முடிந்த வகையில், உதவ முயற்சிக்கலாமே!

எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்.

'நைட்டி' அணியும் பெண்களே... உஷார்!

எங்கள் தெருவில் வசிக்கும், நடுத்தர வயதான 'நைட்டி' அணிந்த பெண்மணி, தன் வீட்டு வாசலில், கோலம் போட்டபடியே, அவருக்கு அறிமுகமான ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருந்தார். அக்காட்சியை எதேச்சையாக பார்த்து, அதிர்ந்தேன்.

உள்ளாடை அணியாமல், குனிந்து வேலை செய்து கொண்டிருந்த அவளின் மார்பகங்களை ரசித்தபடியே, அந்த ஆள் பேசுவதை, அப்பெண் கவனிக்கவில்லை.

பொறுக்க முடியாமல், 'வாசலில் கோலம் போட்டது போதும்... உள்ளே போங்க...' என்றேன், கோபமாக.

அப்பெண்மணியுடன், பேசிக் கொண்டிருந்தவன், உடனே மாயமானான்.

பின், அப்பெண்ணிடம், 'நைட்டி என்பது, இரவு நேர உடை. பொழுது விடிந்ததும், உடையை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லையெனில், இப்படி தான் யாராவது பேசுவது போல் நடித்து, ரசிப்பர்...' என்று அறிவுறுத்தினேன்.

'நைட்டி' மட்டுமே போட்டுத் திரியும் பெண்கள், உள்ளாடை அணியவில்லை எனில், துப்பட்டாவை போர்த்தியபடி வெளியில் வருவது, நல்லது. இல்லையெனில், ஆண்களின் கழுகு பார்வையிலிருந்து தப்பிக்க இயலாது.

ஆர்.காவ்யா, செ.புதுார், தஞ்சை.

தோழி கணவரின் முன்யோசனை!

சமீபத்தில், ஒருநாள் தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஒரு மாதத்திற்கு முன் தான், தோழியின் கணவர் மாரடைப்பால் இறந்தார். எனவே, ஆறுதலாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

தோழி, தன் கணவரைப் பற்றி, மிக உயர்வாக, பல விஷயங்களை கூறினாள். அவள் கணவர், அவளிடம் ஒளிவுமறைவின்றி, இருந்திருக்கிறார். அவர், தன்னுடைய சேமிப்பு கணக்கில், 'நாமினி'யாக மனைவி பெயரை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வங்கி சேமிப்பு பற்றிய விபரங்களையும், 'பின் நம்பர்' உள்ளிட்டவற்றை தெளிவாக எழுதி, ஒரு பைலில் போட்டு, மனைவியிடம் தந்துள்ளார்.

அது போல், வங்கியில் உள்ள நகைகளின் பட்டியல் மற்றும் அவற்றின் புகைப்படங்கள், அது பற்றிய விபரங்களை வீட்டிலுள்ள கணினியில் ஒரு, 'போல்டரில்' போட்டு, 'பாஸ்வேர்டு' பற்றி மனைவியிடம் கூறியுள்ளார்.

இது தவிர, டைரியில் தன்னுடைய பணம் எங்கெங்கு எவ்வளவு உள்ளது என்பதையும், தெளிவாக எழுதி வைத்துள்ளார்.

எனவே, என் தோழி, தன் கணவர் இறந்த பின், அனைத்து விதமான வங்கி பரிவர்த்தனை, பணம் எடுத்தல் மற்றும் எந்த ஒரு விஷயத்திலும், விபரம் தெரியாமல் மன உளைச்சல் இல்லாமல், எளிதாக கையாண்டிருக்கிறாள்.

கணவன்மார்களே... உங்கள் வங்கி கணக்கு வழக்குகளை ஒளிவு மறைவு இன்றி, மனைவியிடம் சொல்லி வையுங்கள். எதிர்பாராமல் அசம்பாவிதம் ஏற்படும்போது, திண்டாடாமல் இருக்கலாம்!

கே. தமிழரசி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us