PUBLISHED ON : ஏப் 10, 2011

உறவுகள் மேம்பட...
இன்றைய இயந்திர உலகில், நகர்புறங்களில் அடுக்குமாடி வீடுகளானாலும், தனி வீடுகளானாலும், அடுத்த வீட்டில் யார் வசிக்கின்றனர் என்பது கூட தெரியாத நிலைதான் உள்ளது. மேலை நாடுகளில் எப்படி உள்ளதோ, அதே நிலைதான் இங்கும் உள்ளது. பொதுவாக, நமக்கு ஒரு நல்லது கெட்டது என்றால், உடனடியாக உதவக் கூடியவர்கள் அண்டை அயலார்தான். ஆனால், இன்றுள்ள நிலையில் இது சாத்தியமாகிறதா என்பது கேள்விக்குறிதான். இந்த நிலை நீடிப்பது நல்லதா? நிச்சயமாக கூடாது என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும். இதை, நாம் நினைத்தால் மாற்றலாம்.
வருடம் முழுவதும், அன்னையர் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம் என்று ஏதாவது ஒரு தினம் கொண்டாடுகிறோம். அது போல, ஒரு நாளை குறிப்பிட்டு, அந்த நாளை, 'அண்டை அயலார் தினம்' என்றோ, 'உறவு மேம்பாட்டு தினம்' என்றோ பெயரிட்டு கொண்டாடலாம்.
சிறிய நோட்டீஸ் அல்லது ஊடகங்கள் மூலம் அறிவிக்க ஏற்பாடு செய்யலாம். இந்த தினத்தில், அனைவரும் வீதிக்கு வீதி, ஒன்று சேர வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு வரும்போது, அவரவர்கள் தங்கள் வீடுகளில் செய்யும் பலகாரங்கள், குளிர் மற்றும் சூடான பானங்கள் கொண்டு வந்து, ஒவ்வொருவரும் தங்களுக்குள் அறிமுகம் செய்து, கலந்து பேசி, சாப்பிட்டு, பழகிக் கொள்ள வேண்டும். இப்பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி, உறவுகளாகக் கூட உருவாகலாம்.
இம்முறை பிரான்சு நாட்டில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது!
— எஸ்.ராஜலட்சுமி, புதுச்சேரி.
எஸ்.எம்.எஸ்., எச்சரிக்கை!
என் வீட்டிற்கு, விருந்தாளியாக என் அத்தை வந்திருந்தார். எங்களோடு மிகவும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த அவர், இரவு உணவுக்குப்பின், தன் மொபைல் போனை எடுத்து, நிறைய பேருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிக் கொண்டிருந்தார். எதற்கு இத்தனை, 'மெசேஜ்' அனுப்பு கிறார் என்று நினைத்து, சிறிது தயக்கத்துக்குப் பின், என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவர், 'எங்கள் வீடு, புறநகர் விரிவாக்க பகுதியில் இருப்பதால், இரவு நேரங்களில் திருட்டு, கொலை, கொள்ளை, கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காகவும், எச்சரிக்கை செய்யவும் இரவு தூங்குவதற்கு முன், எங்கள் தெருவில் உள்ள, 32 வீடுகளின் இல்லத் தரசிகளும் இதுபோன்று எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தெருவின் ஒட்டுமொத்த நிலவரத்தையும் அறிந்து கொள்வோம்...' என்றார்.
சற்று ஆச்சரியம் கலந்த ஆர்வத்தோடு, அவரது மொபைல் போனை வாங்கி, சில எஸ்.எம்.எஸ்.,களை படித்தேன். அதில், 'நாளை பால் பாக்கெட் வாங்கி வை, உங்கள் வாட்ச்மேன் யாரோ ஒருவருடன் ரொம்ப நேரமாக பேசுகிறான், மாடியில் கதவு திறந்தே இருக்கு, நான் ஊரில் இல்லை, உங்க வீட்டுக்கு வெளியே யாருடைய பைக்கோ நிக்குது...' போன்ற பல வகையான தகவல்களை படித்துப் பார்த்தேன்.
'எங்களது குடியிருப்போர் சங்கத்தில் உள்ள எல்லா பெண்களும், இதுபோன்று எஸ்.எம்.எஸ்., அனுப்பி, முக்கிய தகவல்களை பரிமாறிக் கொள்வது பாதுகாப்பிற்காகவும், முன்னெச்சரிக்கை செய்வதற்காகவும் தான். அதையும் தாண்டி, ஓர் ஆரோக்கியமான பிணைப்பும் தெருவாசி களிடையே ஏற்படும்...' என்றார். அவர்களது நடவடிக்கையில் விவேகமும் இருந்தது. 'குட் நைட், குட் மார்னிங்' சொல்வதற்கும், வம்பு அளப்பதற்கும் எஸ்.எம்.எஸ்.,களை பயன்படுத்தாமல், இதுபோன்ற சமூக அக்கறையுடன் மொபைல் போனை பயன்படுத்தலாமே!
— ஜி.ஜெயலட்சுமி, விராட்டிபத்து.
ஆரோக்கிய போட்டி!
எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள், ஒரே அலுவலகத் தில் பணிபுரிகின்றனர்; இரு வருக்கும் மதுப்பழக்கம் உண்டு. குடிப்பதை நிறுத்த வேண்டுமென்று அடிக்கடி நினைப்பர், பேசுவர்; ஆனால், அவர்களால் முடியவில்லை.
பாரில் உட்கார்ந்து ஜாலியாக பேசிய சந்தர்ப்பத்தில், 'இந்த வருடம் இரண்டு பேரும் சபரிமலைக்கு மாலை போடுவோம். இதோடு மது அருந்துவதை விட்டு விடுவோம்...' என்று ஒருவர் முன்மொழிய, அடுத்தவர் அதை மறுத்து, 'நீ ஐயப்ப சாமிக்கு விரதமிருந்து நிறுத்து; நான் அப்படி இல்லாமலேயே நிறுத்திக் காட்டுகிறேன்...' என்று உறுதி எடுத்தனர். விளைவு?
இப்போது, அந்த இரண்டு நண்பர்களும், சபதம் எடுத்தபடி, அவரவர் வழியில் சென்று, போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு விட்டனர். இதில், மகிழத்தக்க விசேஷம் என்னவென்றால், எப்போதும் ஒரே அலைவரிசையில் இயங்கும் நண்பர்கள், நல்ல பழக்கத்தை வசப்படுத்த, ஆரோக்கிய போட்டியில், கிழக்கும், மேற்குமாய் திரும்பி செயல்பட்டு, வெற்றி கண்டது தான்.
— பி.ஜி.பி.இசக்கி, அகஸ்தியர்பட்டி.
