தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ப்ளாக் -பெல்ட்' பெண் என்றால்...

என் உறவினரின் பெண், படிப்பிலும், விளையாட்டிலும் படுசுட்டி. அதோடு, கல்லூரிக்கு பைக்கில் தான் செல்வாள். கல்லூரியில் நடைபெற்ற தற்காப்புக் கலை பயிற்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக கற்றுக் கொண்டாள். அதைத் தொடர்ந்து, கராத்தே கலையை விடாமுயற்சியோடு கற்று, ப்ளாக் - பெல்ட் பட்டம் பெற்று விட்டாள்.

கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று முடித்ததும், அவளுக்கு வரன் தேடிக் கொண்டிருந்த போது, என் உறவினர் களில் சிலர், 'அவளா... சரியான பொம்பள ரவுடியாச்சே... திமிர் பிடிச்சவளாச்சே...' என்று, அளவுக்கதிகமாக பொருமினர்; இதனால், சில வரன்கள் தட்டி போயின.

சமீபத்தில், ஒரு கண்ணியமான ஆண்மகனை கைப்பிடித்து, கம்பீரமாக இருவரும் தெருவில் நடந்து வரும் போது கூட, 'மாப்பிள்ளை பாவம், வீட்ல என்ன அடி வாங்குறானோ...' என்றெல்லாம் நாகூசாமல் பேசுகின்றனர். இயல்பாகவே அந்த பெண், இனிமை யாக பழகும் குணம் கொண்டவள். நம் சமுதாயத் தில் மற்ற பெண்களால் சாதிக்க முடியாததை, அவள் செய்து விட்டாள் என்ற பொறாமையின் உச்சமே, இதுபோன்ற, 'பொல்லாங்கு பேசுதல்' என்பதை புரிந்து கொண்டேன்.

பெண்கள், தற்காப்பு நடவடிக்கைகளில் பின் தங்கியிருப்பதே சமூக விரோதிகளுக்கும், பொறுக்கிகளுக்கும் வரவேற்பு அளிப்பது போல. 'தற்காப்புக்கலை பெண்களுக்கு தன்னம்பிக்கையை தரும்...' என்ற உண்மையை, எப்போது நம் பெண்கள் புரிந்து கொள்வரோ!

— ஏ.ஸ்ரீதர், மதுரை.

சிந்தியுங்கள், சகோதரிகளே...

சமீபத்தில், என் சினேகிதி வீட்டுக்குப் போயிருந்தேன். அவள், மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவள்; தவிர, மூத்த குடிமகள்.

அவள், தன் பீரோவைத் திறந்த போது, எதேச்சையாக என் கண் அங்கு சென்றது. அப்பப்பா... அதில் அடுக்கி வைத்திருந்த புடவைகள் நிஜமாகவே எண்ணில் அடங்காது. பட்டு, சிந்தடிக், டிசைனர் சாரீஸ் என, பீரோவே பிதுங்கி வழிந்தது. எனக்கு, ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி அவளிடம் கேட்டும் விட்டேன்.

'இதில், ஒன்று கூட நான் காசு கொடுத்து வாங்கவில்லை. உறவுக்காரர்கள், நண்பர்கள் என்று தங்கள் பெண், பிள்ளைகளின் கல்யாணத்துக்காக, எனக்கு, தட்டில் வைத்து கொடுத்தவை. இவ்வளவு புடவைகளை வைத்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கோ வயதாகி விட்டது; வெளியே அதிகமாகப் போவதுமில்லை. புடவைக்குப் பதிலாக பணம் கொடுத்திருந்தால், எனக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பேன். கையிலிருந்து பணம் செலவழித்து, கல்யாணங்களுக்கு அன்பளிப்புக் கொடுத்தது தான் மிச்சம்...' என்றார். அவள் கூற்றிலுள்ள உண்மை, என்னை யோசிக்க வைத்தது.

இப்படித்தான் சிலர், உறவுக்காரர்கள், சினேகிதர்கள் வீட்டிற்கு வரும் போது, குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர். இது, பெரும்பாலும் அவர்களின் அளவுக்கு சரியாக இருப்பதில்லை. தவிர, அவர்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிற பருவம். மிகவும் சிறியதாக இருக்கும் அல்லது பெரியதாக இருக்கும்.

இதற்கு பதில், அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று, சரியான அளவிலுள்ள ஆடைகளை வாங்கிக் கொடுக்கலாம். இல்லையென்றால், அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் பொருட்கள் எதையாவது வாங்கிக் கொடுக்கலாம். குறைந்தபட்சம் குழந்தையின் பெற்றோரிடம் பணம் கொடுத்து, அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க சொல்லலாம். இதை செய்யாமல், ஏகப்பட்ட பணம் கொடுத்து வாங்கின பொருள், யாருக்கும் உபயோகம் இல்லாமல், பீரோவில் தூங்க வேண்டுமா? சிந்தியுங்கள், சகோதரிகளே...

— சாவித்திரி விஸ்வநாதன், சென்னை.

விளம்பர வரன் வில்லங்கமானதா?

ஓராண்டுக்கு முன் திருமணமான தோழியை, சமீபத்தில் சந்தித்தேன். வாழ்க்கையில் வெறுப்படைந்தவள் போல் பேசினாள்; என்னவென்று விசாரித்தேன்.

அதற்கு அவள், 'பத்திரிகைகளில் வரும் வரன் பகுதிக்கு விண்ணப்பித்துதான், மாப்பிள்ளையை தேர்வு செய்து, திருமணம் செய்து கொண்டேன். ஆறு மாதம் வரை, என் கணவர் அன்பாகத்தான் இருந்தார். ஆனால், இப்போதெல்லாம் எங்களுக்குள் மனஸ்தாபம் ஏதும் வந்து விட்டால், 'ஊர்ல எல்லாம் மாப்பிள்ளையே கிடைக்காமத்தானே, விளம்பரம் கொடுத்து, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட... உன் முரட்டு சுபாவத்தைப் பார்த்துட்டுத்தான், உள்ளூர்ல எவனும் உங்கிட்ட வந்து மாட்டல போல. வரன் தேவை விளம்பரம் கொடுக்கும் கேசுக்கெல்லாம், ஏதாவது குறைபாடு இருக்கும்ன்னு சொன்ன என் நண்பனோட பேச்சை மீறி, உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தவறு தான்...' எனச் சொல்லியே நோகடிக்கிறார் எனக் கூறி, கண்ணீர் வடித்தாள்.

இப்படி, பத்திரிகை மூலம் வரன் தேடுபவர்கள், குறைபாடுள்ளவர்கள், தவறானவர்கள் என்ற குறுகிய சிந்தனை கொண்ட ஆண்கள் திருந்துவரா?

— ஆர்.தஸ்மிலா, அறந்தாங்கி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us