PUBLISHED ON : ஆக 04, 2019

பெண்களே... 'பைக்'கில் செல்கிறீர்களா
அண்மையில், கணவருடன், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற, என் தோழி, தவறி விழுந்ததில், படுகாயம் அடைந்தாள்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
விபத்து குறித்து விசாரித்தேன். கணவருடன், பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்லும் போதெல்லாம், மொபைல் போனில், 'வாட்ஸ் - ஆப், பேஸ்புக்' மற்றும் 'யூ - டியூப்' பார்த்தபடியே செல்லும் வழக்கத்தை வைத்திருந்தாளாம்; கணவர் எவ்வளவோ கண்டித்தும் கேட்கவில்லையாம்.
சம்பவம் நடந்த அன்று, பைக்கின் பின்னால் அமர்ந்து, இரண்டு கைகளிலும், மொபைல் போனை பிடித்து, 'பேஸ்புக்' பார்த்து, 'கமென்ட்' பண்ணிக் கொண்டிருந்திருக்கிறாள்.
கவனம் சிதறி, தான் வீட்டில் உட்கார்ந்திருப்பதான கற்பனையில், சோபாவில் சாய்வது போல் பின்னால் சாய்ந்துள்ளாள். சாலையில் விழுந்ததில், தலையில் அடிபட்டு விட்டது.
இனிய தோழிகளே... சாலையில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் கவனம் தேவை என்பதை உணருங்கள். இல்லையென்றால், கவனச் சிதறல் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எச்சரிக்கை.
- பே. ராமலட்சுமி, ராஜபாளையம்.
உஷார்!
ஆசிரியையான நான், சமீபத்தில், அரசு தேர்வு, விடை தாள்கள் திருத்தும் பணிக்கு சென்றிருந்தேன்.
அங்கு வந்திருந்த வெளியூர் ஆசிரியர் ஒருவர், உணவு இடைவேளையின் போது, அனைவரும் கூடியிருக்கையில், தன் மனைவியை பற்றியும், தான் எவ்வளவோ விட்டுக்கொடுத்தும் இல்லறம் இனிக்கவில்லை என்றும், குறைபட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களில் சிலர், அவருக்கு ஆறுதல் கூறினர்.
ஒருநாள், சிறிது தாமதமாக உணவருந்தி, 'டிபன் பாக்சை' கழுவி எடுத்து வந்தேன். அப்போது, மேற்படி நபரும், அவர் நண்பரும், மரத்தடியில் புகைத்தபடியே பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது...
'ஏம்பா... உன் மனைவி, எவ்வளவு தங்கமானவங்க... அவங்களை போயி, இப்படி குறை கூறி பேசுறியே... இது சரியா...' என, நண்பர் கேட்க, அதற்கு, அந்த ஆசிரியர் சொன்ன பதில், அதிர்ச்சியை தந்தது.
'மாப்ள... இதெல்லாம் சும்மா ஒரு, 'டைம் பாஸ்...' வீட்டில், நான் தான் பெண்டாட்டிக்கு உதவியா, காய் நறுக்குவேன்... பாத்திரம் துலக்குவேன்னு, செய்யாததெல்லாம் செய்ததாக சொன்னா, யாருக்கு தெரிய போகுது... ஆனா, இப்படி சொன்னால் நம் மேல ஒரு பரிதாபம் வரும் பாரு... அது, நமக்கு, பல விஷயத்துல உதவும்.
'இப்படித்தான் ரெண்டு வருஷம் முன்னால, இதே ஊர்ல, வேற ஒரு பள்ளியில, இதே மாதிரி ஒரு கதையை அவுத்து விட்டேன்...
'வந்திருந்ததுல, ஒரு ஆசிரியை பயங்கரமா, 'இம்ப்ரஸ்' ஆகி, மறுநாள், அவங்க வீட்டுலேர்ந்து சாப்பாடு, டிபன், காபின்னு எடுத்து வந்து அமர்க்களப்படுத்திட்டா... ஆளு சும்மா, 'டக்கரா' இருப்பா...' என, புகை கசியும் பல்லை காட்டி சிரித்தபடியே கூற, நான், கூனிக் குறுகி போனேன்.
பெண்களே... இதுபோன்ற ஆ'சிறியன்'கள், உங்களிடையேயும், தம் வித்தையை காட்டக் கூடும். நாம் தான், உஷாராக இருக்கணும்!
- எஸ். கவுரிலட்சுமி, திருச்சி.
இதுவன்றோ நட்பு!
என் மகன், பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் உள்ள ஒரு வங்கியில், ஆபீசராக வேலை பார்த்தான். அவனது, 31வது வயதில், திடீரென மாரடைப்பால் இறந்த செய்தி கேட்டு, துடித்து போனோம்.
அவனுக்கு, மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் இருந்தது. மறுநாள் அதிகாலை விமானத்திற்கு, டிக்கெட் முன்பதிவு செய்து, நாங்கள், டில்லி போனோம். அங்கிருந்து, காரில், சண்டிகர் சென்று இறங்கியபோது, எங்களை வரவேற்றனர், மகனின் உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள்.
மகனின் இறுதி பயணம் எந்தவித தடங்களும் இல்லாமல் நடக்க, கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்தனர்.
'அம்மா... கவலைப்படாதீர்கள்... உங்களுக்கு, நாங்கள் இருக்கிறோம்... உங்கள் மகனை, எப்போது பார்க்க விரும்பினாலும், உடனே போன் பண்ணுங்கள்; வந்து விடுவோம்... என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்...' என்று, அவர்கள் சொல்ல, உணர்ச்சி பொங்க அழுது கொட்டி விட்டேன்.
இதோ, என் மகன் இறந்து, 22 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றும், அடிக்கடி போன் செய்து, நலம் விசாரிக்கின்றனர். வயிற்றில் சுமக்காமல் கிடைத்த இக்குழந்தைகளை பெறுவதற்கு, 'என்ன தவம் செய்தேனோ...' இன்று வரை, சொன்ன சொல்லை காப்பாற்றுகின்றனர்.
இன்று, என் வயது, 80. இவர்களை நினைத்தாலே, மனதுக்கு சாந்தியும், ஆறுதலாகவும் உள்ளது. இதுவல்லவோ உண்மையான நட்பு; அன்பு!
சாவித்திரி, சென்னை.
