தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (10)

நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (10)

நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (10)


PUBLISHED ON : ஆக 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயக்குனர், ஸ்ரீதரின் கம்பெனியான, சித்ராலயாவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சென்னை, தி.நகரில் இருந்த, சித்ராலயா ஆபீசுக்கு போனேன். இயக்குனரை சந்தித்து, என் வணக்கத்தை தெரிவித்து, அழைப்பு வந்த தகவலை சொன்னேன்.

'அடுத்து, நெஞ்சில் ஓர் ஆலயம் என்று, ஒரு படம் எடுக்க போகிறேன். அதில், உனக்கு ஒரு வேடம் கொடுத்திருக்கிறேன். மற்ற விபரங்களை, கோபுவை கேட்டு தெரிந்து கொள்...' என்றார்.

'அட... நிஜமாகவே, இயக்குனர், ஸ்ரீதர் படத்தில் நாம் நடிக்க போகிறோம்...' என்று நினைத்து, சந்தோஷத்தில் மிதந்தபடியே, மாடிப்படி இறங்கி, கோபுவை சந்தித்தேன்.

இயக்குனர், ஸ்ரீதரை சந்தித்ததை பற்றி சொல்லி, 'சார், உங்களை பார்த்து மற்ற விபரங்களை கேட்டுக் கொள்ள சொன்னார்...' என்று, நிறுத்திக் கொள்ளாமல், 'நான், எல்.வி. பிரசாத் சார் படத்தில் கூட நடிச்சிருக்கேன்...' என்றேன்.

'நீங்கள், யார் யார் படத்தில் நடிக்கறீங்கன்னு நான் கேட்கலையே... எங்க படத்துல ஒரு வேடம் தர்றோம். நடிக்க சம்மதமா?' என்றார், கோபு.

'சார்... நான், ஒரு சாதாரண நடிகன். உங்க கம்பெனி படத்துல நடிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம். கண்ணை மூடிக்கிட்டு, ஓ.கே., சொல்லலாம்...' என்றேன்.

'தொடர்ந்து ஒரு மாசம், படப்பிடிப்பு நடக்கும். டிராமா, கீமான்னு, 'டிமிக்கி' கொடுத்துடக் கூடாது. எப்போ கூப்பிட்டாலும், உடனே வந்துடணும். படப்பிடிப்பு ஆரம்பிக்கிற போது, தகவல் சொல்லி அனுப்பறேன்...' என்றார், கோபு.

'சார்... உடைக்கு அளவு எடுக்கலையே...'

'நீங்க உள்ளே வந்தீங்களே, அப்பவே உங்களை நான் அளந்துட்டேன். உடைக்காக தனியா ஒருமுறை, அளவு எடுக்க வேண்டிய அவசியமில்லை...' என்று, ஒரு போடு போட்டார், கோபு.

தொடர்ந்து, 'உனக்கு, கிராமத்தான் வேஷம். வேட்டிக்கு அளவெடுத்து தைக்கணுமா என்ன... நீ போ, நம் உடையமைப்பாளர், அதை எல்லாம் பார்த்துக்குவார்...' என்றார்.

மொத்தத்தில், சித்ராலயா ஆபீசிலிருந்து புறப்பட்ட சமயம், 'இயக்குனர், ஸ்ரீதர், டாக்டர் சப்ஜெக்ட் படம் எடுக்கிறார். அதில், எனக்கு, கிராமத்து ஆசாமி வேடம்...' என்பது மட்டும் தெரிந்தது.

படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தகவல் வந்தது. கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா உட்பட அனைவரிடமும், ஒரு மாதத்திற்கு, 'கால்ஷீட்' வாங்கி இருந்தனர். அனைவரும் எப்போதும், படப்பிடிப்பு தளத்தில் இருப்பர். இயக்குனர் எப்போது, எந்த காட்சியை படமாக்க நினைக்கிறாரோ, அப்போது, அந்தந்த நடிகர், நடிகையர் நடிப்பர். மற்றவர்கள் தம்மை எப்போது கூப்பிட்டாலும் போக தயாராக காத்துக் கொண்டிருப்பர்.

ஒருநாள், படப்பிடிப்பில் காத்துக் கொண்டிருந்தேன். டாக்டர் கல்யாண்குமாரின், 'கம்பவுண்டர்' ஆக, அப்போது, 'பிசி'யாக நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த, ராமாராவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார், இயக்குனர். படப்பிடிப்பு தினத்தன்று, ராமாராவ் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்த காரணத்தால், வர தாமதமானது.

கேமரா மேன், வின்சென்ட், 'லைட்டிங்' சரியாக இருக்கிறதா என்று ஒத்திகை பார்க்க விரும்பினார்.

ஸ்ரீதரிடம், 'மருந்து குடிக்க அடம் பிடிக்கும் குழந்தையை, 'கம்பவுண்டர்' தேடி வருகிற காட்சியை, இந்த புது பையனை வைத்து, ஒத்திகை பார்க்கலாம்...' என்றார்.

என்னைக் கூப்பிட்டு, நர்சிங் ஹோமில், குழந்தையை தேடுகிறவர் போல செய்ய சொல்லினர். வழக்கமாக, மேஜைக்கு அடியில், கட்டிலுக்கு அடியில், கதவுக்கு பின்னால் இப்படி தானே தேடுவர். ஆனால், நான் அப்படி செய்யவில்லை.

வேறு யாரோ செய்ய வேண்டிய கேரக்டர்தானே என்றோ, 'லைட்டிங்' ஒத்திகை தானே என்றோ, அலட்சியமாக நினைக்கவில்லை. சீரியசாக தலையணைக்கு அடியில், மேஜை டிராயரில், இங்கெல்லாம் மறதியில் தொலைந்த பேனாவை தேடுவது போல, செய்து காட்டினேன். ஒத்திகை முடிந்தது.

ஸ்ரீதரும், வின்சென்டும் ஏதோ பேசிக் கொண்டனர். அதன்பின், என்னை கூப்பிட்ட இயக்குனர், 'பையா, போய், 'கம்பவுண்டர்' உடை போட்டுக்கிட்டு வா...' என்றார்.

'லைட்டிங்' ஒத்திகை முடிந்ததும், கேமராமேன் வின்சென்ட், இயக்குனர் ஸ்ரீதரிடம், 'இந்த பையனிடம், ஒரு வேகம் இருக்கிறது. வழக்கமான நம் ஊர் சினிமா பாணியில் இல்லாமல், கொஞ்சம், மேற்கத்திய பாணியில், ஜெரி - லுாயிஸ் மாதிரி பண்ணுகிறான். இவனையே, 'கம்பவுண்டர்' வேஷத்துக்கு போட்டுடலாமே...' என்றார்.

கிராமத்து ஆசாமியாக நடிக்க வேண்டிய நான், 'கம்பவுண்டர்' ஆக்கப்பட்டதன் பின்னணி இது தான்.

'கம்பவுண்டர்' உடை போட்டு வந்து நின்றேன். ராமாராவ் அளவுக்கு தைக்கப்பட்டது என்பதால், எனக்கு கொஞ்சம் முன்னே, பின்னே தான் இருந்தது. ஆனால், அதெல்லாம் பெரிய விஷயமாக படவில்லை.

'முதல் காட்சியிலேயே அசத்தி, நல்ல பெயர் வாங்குவதற்கு என்ன செய்யலாம்?' என்று யோசித்தேன்.

இயக்குனர், ஸ்ரீதரிடம், உதவி இயக்குனராக இருந்த, பி. மாதவன், நான் நடிக்க வேண்டிய காட்சியை விளக்கினார். டாக்டர் என்னை கூப்பிட, நான் வேகமாக மாடிப் படியிலிருந்து இறங்கி ஓடி வர வேண்டும்.

டாக்டர், என்னை கூப்பிட்டவுடன், மாடியிலிருந்து, படி வழியாக இறங்கி வருவதற்கு பதிலாக, பாதியில் குதித்து, கீழே விழுந்து, எழுந்து ஓடினால்... எனக்கு தோன்றிய யோசனையை சொன்னேன், கோபுவிடம்.

அவர், இயக்குனரிடம் சொன்னார்.

'கோபு... திட்டமிட்டபடி படத்தை முடிக்கணும். ராமாராவ் நடிக்க இருந்த வேடத்தை, நாகேஷுக்கு கொடுத்திருக்கோம். இவன் பாட்டுக்கு, 10 அடி உயரத்திலிருந்து குதிச்சு, கையை, காலை ஒடைச்சுக்கிட்டா...

'வடிவமைக்கப் பட்டுள்ள, இந்த, 'நர்சிங் ஹோமில்' வைத்தியம் பார்க்க முடியாது. நிஜ மருத்துவமனைக்கு தான் போகணும்; படப்பிடிப்பு பாதிக்கப்படும். எதுக்கு வீண் ஆபத்து?' என்றார், ஸ்ரீதர்.

'அது மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காது. ஜம்ன்னு குதிச்சுடுவேன். 'ஷாட்' நல்லா வரும், சார்...' என்று சொல்லி, விடுவிடுவென்று படியேறினேன்.

'சரி சரி... அப்படியே காட்சியை வெச்சுக்கலாம். வின்சென்ட், கேமரா தயார் பண்ணிக்குங்க...' என்றார்.

'லைட்டிங்'கை சரி பார்த்து, கேமரா நிலையை தயார் செய்து கொண்டார், வின்சென்ட்.

'நாகேஷ்... பீ கேர்புல்...' என்று அக்கறையோடு எச்சரிக்கை செய்தார், ஸ்ரீதர்.

- தொடரும்

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.

எஸ். சந்திரமவுலி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us