
மாற்றி யோசியுங்கள்!
நண்பரின் மகன், பி.காம்., முடித்து, வேலை தேடிக் கொண்டிருந்தான். சரியான வேலை எதுவும் அமையாததால், மனமுடைந்திருந்த அவனை, ஆறு மாதங்களுக்கு பின், சமீபத்தில் சந்தித்தேன். மனுஷன் ரொம்ப, 'பிசி!'
இரண்டு மொபைல் போன்களை வைத்தபடி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் உத்தரவுகளை பிறப்பித்து, வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
'என்ன தொழில் செய்றப்பா...' என்றேன்.
'ஹெல்ப் லைன் பிசினஸ்...' என்றான்.
'அப்படீன்னா?'
'சார்... மின் கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம், எல்.ஐ.சி., பாலிசி, 'டிவி' ரீசார்ஜ் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் என, சின்ன சின்ன வேலைகளை பார்ப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. அத்தகைய வேலைகளை ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று, நான் செய்து கொடுக்கிறேன்.
'இதனால், அவர்களுக்கு அலைச்சல் மிச்சம்; வேலையும் திருப்தியாக முடிகிறது. இதற்காக, எல்லா வேலைகளுக்கும் ஆள் வைத்துள்ளேன்; இந்த, 'பிசினஸ்' சுமுகமாக போகிறது...' என்றான்.
எதையும் மாற்றி யோசித்தால், வேலை இல்லை என்ற நிலையை கட்டாயம் மாற்றலாம் என்பதற்கு, இவன் ஓர் உதாரணம்.
ப. காளிதாசன், புதுக்கோட்டை.
ஜொள்ளர்கள் ஜாக்கிரதை!
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள், தோழி. அதன் மேலாளர், அவ்வப்போது அவளை, தன் அறைக்கு வரவழைத்து, அலுவலக வேலைகளை செய்ய சொல்வார். கூடவே, 'ஜொள்' வழிய வழிய, 'உங்களுக்கு, இந்த புடவை நல்லா இருக்கு மேடம்... 'ஹேர் ஸ்டைலும்' சூப்பர்...' என்று, கீழிருந்து மேல் வரை, அவளது அழகை ரசித்தபடி விமர்சிப்பார்.
அவரின் வார்த்தைகளை, காதில் வாங்காமல், சொல்லும் அலுவல்களை மட்டும் முடித்து, வெளியே வந்து விடுவாள்.
ஒருநாள், 'உங்களுக்கு, பண கஷ்டம் இருந்தா சொல்லுங்க, மேடம்... நான் உதவி பண்றேன்... எந்த நேரத்திலும், எந்த உதவிக்காகவும் தயங்காம என்னை அணுகலாம்...' என்றிருக்கிறார்.
உடனே அவள், 'காலிங் பெல்'லை அழுத்தி, பியூனை உள்ளே வரவழைத்தாள். புரியாமல் பேந்த பேந்த முழித்த மேலாளரிடம், 'இதோ, நம் ஆபீசில், இவர் தான் ரொம்ப ஏழ்மை நிலையில் இருக்கார். வாங்கற சம்பளம், 15 நாட்களுக்கு கூட வர்றதில்லை... உங்களோட கருணை குணத்தை இவர் மேல் காட்டினா, நல்லா இருக்கும்...' என்று, 'கூலாக' கூறி, அறையை விட்டு வெளியேறினாள்.
அதன்பின், தோழி இருக்கும் பக்கமே திரும்பவில்லையாம், அந்த மேலாளர்.
வேலை செய்யும் இடத்தில், பெண்களை நோக்கி வரும் காம அம்புகளை, சாதுர்யமாக கையாள வேண்டும். அப்போது தான், இதுபோன்ற, 'ஜொள்ளர்'களுக்கு உறைக்கும்.
கே. ஜெகதீஸ்வரி, கோவை.
இளமை துள்ளல் வேண்டும்!
சமீபத்தில், அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற பெண் அதிகாரி, நான். பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், என் எண்ணங்களையும், மனதையும் உற்சாகமாகவும், இளமையாகவும் வைத்துக் கொண்டிருப்பவள்.
ஆனால், எனக்கு, 'வாட்ஸ் - ஆப்' மூலம், நண்பர்கள் மற்றும் தோழிகள், முதுமை தொடர்பான, 'பிரைவேட் மெசேஜ்'களையும், வயதான பின், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய துணுக்குகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
'வயது என்பது முதுமை அல்ல, அனுபவம் என்று எண்ணுகிற பெண், நான். எனவே, இது எனக்கு மிகுந்த எரிச்சலை கொடுக்கிறது. முதுமையை நினைவுபடுத்தும் செய்திகளை எனக்கு அனுப்ப வேண்டாம்...' என, நண்பர்களுக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் பதில் தெரிவித்து விட்டேன்.
ஓய்வு பெற்றவர்களுக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் செய்திகளை அனுப்பும் நண்பர்கள், இதுபோன்ற விஷயங்களை தவிர்த்து, இளமை துள்ளல் நிறைந்த செய்திகளை அனுப்பி, அவர்களை உற்சாகப்படுத்தலாமே!
பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி (ஓய்வு), கடையநல்லுார்.

