
வேளாண்மையில் இறங்க போகிறீர்களா...
'கொரோனா' வைரசால் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையால், மறந்து போன நம் இந்திய கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை பற்றி, நிறைய பேர் புரிந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, நாம் உயிர் வாழ உணவும், அதை உற்பத்தி செய்யும் வேளாண்மையும் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்துள்ளனர்.
எங்கள் பகுதியை சேர்ந்த, மென்பொருள் துறையில் பணியாற்றிய சிலர், பண்ணை விவசாயம் செய்யலாம் என்று, இடம் பார்த்து, அலைந்திருக்கின்றனர்.
அவர்களை சந்தித்த மூத்த விவசாயி ஒருவர், 'தம்பிகளா... நீங்க விவசாய துறைக்கு வந்தா, எங்களுக்கு போட்டியா இருப்பீங்கன்னு பொறாமையில் சொல்றதா நினைக்காதீங்க...
'ஒரு ஏக்கர் எலுமிச்சையில, 80 லட்சம். 4 ஏக்கர் நெல்லுல, நான்கு கோடின்னு புத்தகத்துல போடுறதை படிச்சுட்டு மட்டும் விவசாயம் செய்ய வந்திருந்தா, அந்த நினைப்பை மாத்திக்குங்க...
'அப்படி லாபம் கிடைக்கிறதுன்னா, அதுக்கு பின்னால பல விஷயங்கள் இருக்கலாம். நல்ல மண்ணு, சரியான பருவநிலை, முறையான பராமரிப்பு, விளைஞ்சதை வீணாக்காம விற்பனை செய்யவோ அல்லது மதிப்புக்கூட்டு பொருளா மாத்தவோ தெரியணும்.
'அதுவும் இல்லைன்னா, சரியான விலை கிடைக்கிற வரை, அந்த பொருளை பாதுகாப்பா சேமித்து வைக்கிற வசதி... இப்படி எவ்வளவோ இருக்கும். இதையெல்லாம் சரியா செஞ்ச பிறகும், எப்பவாவது விவசாயத்துல நஷ்டம் வரலாம்.
'ஆனா, இந்த ஆண்டு நிலம் வாங்கி, எதுவும் செய்யாம, அடுத்த ஆண்டே லட்சக்கணக்குல அல்லது கோடியில லாபம் பார்க்க, இது, ரியல் எஸ்டேட் கிடையாது.
'முதல்ல, 10 சென்ட் நிலம் வாங்கி, சின்னதா செய்ய ஆரம்பிங்க. நீங்க சரியான பாதையில போனா, அந்த, 10 சென்ட் நிலம் தன்னால, 10 ஏக்கரா மாறும்...' என்று சொல்லியிருக்கிறார். சரிதானே!
— க. சரவணன், திருவாரூர்.
இணைய பயன்பாட்டாளர்களுக்கு...
நாளிதழ், பருவ இதழ்களை, காசு கொடுத்து எதற்கு வாங்க வேண்டும். எல்லாம் தான் இணையத்தில் கிடைக்கிறதே என்ற மூடநம்பிக்கை, அனைவரிடமும் பரவி வருகிறது.
இணைய தளங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற செய்தி சேனல்கள் அல்ல. யாரைப் பற்றி, யார் வேண்டுமானாலும், எதைப் பற்றி, எப்படி வேண்டுமானாலும், பொய், புரளிகளை பரப்புவதற்குரிய புறம்போக்கு த(க)ளமாகும்.
பாலையும், நீரையும் பிரித்து, பாலை மட்டும் பருகும் அன்னம் போல, பொய் எது, உண்மை எது என, பகுத்தறியும் சுய புத்தி நமக்கு இருந்தால் தான், உண்மை விளங்கும்.
நாளிதழ்கள் அப்படியல்ல... சட்டப்படி, செய்திகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய கடமை, அவைகளுக்கு உண்டு. தவறானால், அடுத்த நாள் திருத்தி வெளியிடுவதை பார்த்திருக்கிறோம். தவறினால், நீதிமன்றம் நாடி, உண்மையை வெளிப்படுத்தலாம்.
இத்தகைய சட்ட பாதுகாப்புக்குள், இணைய தளங்களை உட்படுத்தாததால், எல்லை மீறி போகின்றன. கூடவே, இணைய தள செய்திகளை கூர்ந்து கவனித்தால், பெரும்பாலானவை எதிர்மறை கருத்துக்களாகவே இருக்கும்.
இதை தொடர்ந்து படிப்பவர்களுக்கும், எதிர்மறையான எண்ணங்களே தோன்றி, ஒரு வெறுப்புணர்வை, விரக்தியை உண்டாக்கி, மனநிலையை பாதித்து, மன அழுத்தத்தையும் கொடுக்கின்றன.
இதனால், சமூகத்திலும் எதிர்மறையான சம்பவங்களே நடக்கின்றன. எல்லா சமூக பிரச்னைகளிலும் உண்மையும், தெளிவும் பெற முடியாமல், குழப்பமும், கலவரமும் தான் ஏற்படுகின்றன.
அரசியலிலும் அப்படித் தான். எனவே, தேவையற்ற செய்திகளை பெற்று, நம் மன நிலையை, பொது அறிவை வலிய கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
கொஞ்ச காலம் இணைய தளங்களை, குடும்ப, உறவு, நட்பு என்ற, சொந்த உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால், தேவையற்ற கழிவுகள் தானாக மறைந்து விடும். கூடவே, சுவாரஸ்யத்திற்காக இணைய வசதிகளை படித்தாலும், நாளிதழ்களையும் தினமும் வாசித்து வந்தால், இணையத்தில் எப்படி புரளிகள் கிளப்பப்படுகின்றன என்பது தெளிவாகும். முயற்சிப்போமே!
- மல்லிகா அன்பழகன், சென்னை.
உதவி சங்கிலி!
அண்மையில், ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு, என் மொபைல் போனை அங்கேயே மறந்து வைத்து விட்டேன். 'பார்க்கிங் ஏரியா'விற்கு வந்த ஓட்டலின் சர்வர், மொபைலை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். மகிழ்ந்த நான், 500 ரூபாயை எடுத்து நீட்டினேன்.
வாங்க மறுத்தவர், 'பணமெல்லாம் வேண்டாம் சார்... எனக்கு ஏதாவது செய்ய நினைத்தால், வேறு ஒருவருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்த பின், அந்த வேறு ஒருவரிடம், பிறருக்கு உதவி செய்யச் சொல்லி, இந்த சங்கிலி அறுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லுங்கள். இந்த யேசானையை, 'இன்டர்நெட்'டில் பார்த்தேன்...' என்றார்.
இதெல்லாம் சாத்தியமா என்று எண்ணியபடியே, 'பைக்'கை கிளப்பினேன். மழை லேசாக துாறிக் கொண்டிருந்தது. கர்ப்பிணி பெண் ஒருவர், மழையில் நனைந்தவாறே நடந்து சென்று கொண்டிருந்தார். என்னிடம் இருந்த குடையை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்தேன்.
அந்த பெண், எனக்கு நன்றி சொல்ல, 'நன்றியெல்லாம் வேண்டாம். நீங்கள் வேறு யாருக்காவது உதவி செய்யுங்கள். இந்த உதவி செய்யும் சங்கிலி அறுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்றேன்.
உங்களுக்கு யாராவது உதவி செய்தால், நீங்களும் வேறு யாருக்காவது உதவி செய்து, 'உதவி சங்கிலி' அறுந்து விடாமல் பார்த்துக் கொள்ளலாமே!
- ஜெ. கண்ணன், சென்னை.

